இராணுவ மயப்படுத்தல் - வெளிவராத காரணம்

21 Jun, 2020 | 02:23 PM
image

-சுபத்ரா

கடந்த சில வாரங்களுக்குள் வடக்கின் பெரும்பாலான பகுதிகள், இறுக்கமான இராணுவ மய சூழலுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை, நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, வடக்கில் இராணுவ மயப்படுத்தல் தீவிரமடைந்தது.

பெரும்பாலான நேரங்களில் ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், இதுகுறித்து அப்போது பெரும்பாலானோர் அக்கறைப்படவில்லை.

படிப்படியாக இந்த இராணுவமயமாக்கல் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது, அது நிரந்தரமாக்கப்படும் சூழல் ஒன்று தோன்றியிருப்பதாகவே தெரிகிறது.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பொது இடங்களில் இருந்து இராணுவத்தினர் விலக்கப்பட்டு, முகாம்கள் அகற்றப்பட்டு, முக்கியமான படைத் தளங்களுக்குள் மாத்திரம் முடக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், கடந்த சில வாரங்களில், முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த படையினர் வெளியே கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

போர்க்காலத்தில் இருந்ததைப் போல, வீதிகளில் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

இராணுவம் தேவையா? தமிழ் மக்களே ...

சந்திகளிலும், முக்கியமான இடங்களிலும், வீதித் தடைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சந்திகளில் சாதாரணமாக நிறுத்தப்பட்ட படையினர், இப்போது, வீதித் தடைகளுடன் நிற்பதை காணமுடிகிறது. இதன் அடுத்த கட்டமாக, ஆங்காங்கே காவலரண்கள் முளைக்கக் கூடும். சிறியளவிலான - மினி முகாம்களும்- உருவாகக் கூடும். இராணுவ மயப்படுத்தல் என்பது, வடக்கில், மிக சூட்சுமமான முறையில் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

ஆயினும், இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் ஆச்சரியம். வடக்கில் கடந்த சில வாரங்களுக்குள் நிகழ்ந்த சில சம்பவங்கள், இந்த இராணுவ மயப்படுத்தலை நியாயப்படுத்துவதாக இருக்கக் கூடும்.

RA TAMIL (2020)

முதலாவது சம்பவம் - பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில், இடம்பெற்றது.

பகல் நேரங்களில், மணல் கடத்தலை தடுப்பதற்காக பொலிசார் சோதனைகளில் ஈடுபடும் இடத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறியதொரு வெடிபொருள் வெடித்ததில், பொலிஸ் அதிகாரி ஒருவர் கையில் சிறிய காயங்களுக்கு உள்ளானார்.

அந்தச் சம்பவம் நிகழ்ந்ததும், இணைய ஊடகங்கள் பலவும், கிளேமோர் குண்டு வெடித்ததாக செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால், உண்மையில் அது கிளேமோர் குண்டு அல்ல. சாதாரணமாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட வெடிப்புச் சம்பவமே அது.

இந்த வெடிப்புக்கு, பயன்படுத்தப்பட்ட வெடிபொருள், பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் ஆரம்ப நிலை வெடிமருந்து என்று, யாழ். படைகளின் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய கூறியிருந்தார்.

அதேவேளை, இந்த தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தப்பட முன்னரே, மணல் கடத்தலை தடுக்கும் பொலிசாரை இலக்கு வைத்து, மண் கடத்தலில் ஈடுபடுவோர் நடத்திய தாக்குதல் என்று ஊகங்கள் வெளியாகின.

அதுமட்டுமன்றி இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் துன்னாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதற்குப் பின்னர், இரண்டாவது சம்பவம்,  வல்லைச் சந்தியில் உள்ள 521 ஆவது பிரிகேட் தலைமையகம் முன்பாக, இடம்பெற்றது.

வல்லை வெடிப்பு சம்பவம் -கைது ...

வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கைவிட்டுச் சென்ற பொதி ஒன்றை இராணுவ அதிகாரி ஒருவர் பிரித்துப் பார்க்க முயன்ற போது, வெடிப்பு இடம்பெற்றது.

அந்தப் பொதியில் இருந்த பொம்மை ஒன்றிலேயே வெடிப்பு ஏற்பட்டது. பல கி.மீ தூரத்துக்கு அந்த வெடிப்புச் சத்தம் கேட்ட போதும், அதனை இராணுவத் தரப்பு மறுத்திருந்தது.

பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படவோ, அதுகுறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவோ இல்லை.

இந்தநிலையில் சிசிரிவி பதிவுகளின் அடிப்படையில், சில நாட்களுக்குப் பிறகு, நீர்வேலிப் பகுதியில் ஒரு இளைஞனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மூன்றாவது சம்பவம்- கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமின் முன்பாக இடம்பெற்றது. 

யாழ்ப்பாணத்தில் நடந்த வெடிப்புச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட அதே வெடிபொருள் மற்றும் பொருட்கள், பரந்தன் முகாமுக்கு முன்பாக கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து, வடக்கில் ரோந்து செல்லும் படையினர், முகாம்களுக்கு முன்பாக பணியில் ஈடுபடும் படையினரை அவதானமாக இருக்குமாறும், மர்மமான பொதிகளைக் கண்டால் குண்டு செயலிழக்கும் பிரிவின் உதவியை நாடுமாறும், உத்தரவிடப்பட்டது.

நான்காவது சம்பவம் - யாழ்ப்பாண நகர மையத்தில் ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

நள்ளிரவுப் பொழுது மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் விகாரைக்கு முன்பாக புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூண்டு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை அடுத்து பெருமளவில் படையினர் குவிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனாலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய யாரும் கைது செய்யப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

குறுகிய நாட்களுக்குள், அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தச் சம்பவங்களை அடுத்தே, யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடக்கின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இத்தகைய சம்பவங்கள் நடந்தால், பாதுகாப்பு வலுப்படுத்தப்படுவது வழக்கம்.

அதுபோலவே, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

இந்தச் சம்பவங்களை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி படைகளின் தலைமையக்தில் ஒரு உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள்,  தேசிய புலனாய்வுப் பணியக தலைவர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி படைகளின் தலைமையக கட்டளைத் தளபதிகள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி உள்ளிட்டவர்களும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.

இதன்போது வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, வடக்கு, கிழக்கிற்கு அடிக்கடி சென்று நிலைமைகளை மதிப்பீடு செய்து வருகின்ற போதும், இந்த பாதுகாப்பு மாநாட்டையும் வழக்கமான ஒன்று போலவே காட்டிக் கொள்ள முனைந்திருக்கிறார் யாழ்.படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய.

அதனால் தான் அவர், இந்த மாநாட்டில் விசேடமாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்று கூறியிருந்தார்.

நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உயர்மட்டமும், புலனாய்வு உயர் அதிகாரிகளும் ஒன்றாக கூடி, ஒரு சந்திப்பை நடத்தி விட்டு, விசேடமாக ஒன்றுமே பேசப்படவில்லை என்று கூறுவது ஆச்சரியமானது.

பொதுத்தேர்தல் வரப் போகின்ற நிலையில் பாதுகாப்பை வலுப்படுத்துவது இயல்பான ஒன்று தான்.

ஆனால் அதற்கு முன்னதாகவே, வடக்கில் இயல்பற்ற ஒரு சூழல் இருப்பது போன்ற நிலை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

எனினும், அதனை அதிகாரபூர்வாக செய்வதற்கும் அரசாங்கமோ படைகளோ தயாராக இல்லை. அவ்வாறு அதிகாரபூர்வமாக வடக்கில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக காண்பித்தால், அது அரசாங்கத்துக்கே ஆபத்தாக மாறும்.

முன்னைய அரசாங்கம் பாதுகாப்பில் கோட்டை விட்டு விட்டது என்று குற்றம்சாட்டி, கோத்தாபய ராஜபக்சவினால் மட்டுமே, நாட்டைப் பாதுகாக்க  முடியும் என்று பிரசாரம் செய்து தான் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஏழு மாதங்களாகின்ற நிலையில், வடக்கில் சம்பவங்கள் நிகழுகின்றன என்ற தகவல் வெளியானால், அது அரசாங்கத்தின் - குறிப்பாக ஜனாதிபதியின் ஆளுமை தொடர்பான கேள்விகளை எழுப்பும்.

எனவே, வடக்கில் சில சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதனை பெரிதாக காட்டிக் கொள்ளாமல், அதேவேளை சந்தடியில்லாமல் இராணுவ மயப்படுத்தலை மேற்கொள்கிறது அரசாங்கம்.

இந்த இராணுவ மயப்படுத்தல் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டால் தான், ஏன் அது நிகழ்த்தப்படுகிறது என்ற நியாயத்தை அரசாங்கம் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

இதுவரையில் அவ்வாறான நிலை அரசாங்கத்துக்கு வரவில்லை.

வடக்கில் நடந்த சம்பவங்கள் திட்டமிட்ட ஒன்று என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்ற போதும், அது யாருடைய நிகழ்ச்சி நிரலில் நடந்திருக்கிறது என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.

ஏனென்றால், இராணுவ மயப்படுத்தலுக்கு எதிரானவர்கள் மாத்திரம் இத்தகைய நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு செயற்படுவார்கள் என்றில்லை.

வடக்கை இராணுவ மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பவர்களுக்கும் கூட, இதுபோன்ற சம்பவங்கள் தேவைப்படக் கூடும் என்பதை மறந்து விடக் கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04