ஜனநாயகத்தையும் கெடுத்த கொரோனா

21 Jun, 2020 | 02:09 PM
image

-சத்ரியன்

ஓகஸ்ட் 5 ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த தேர்தல் நியாயமாகவும், நீதியாகவும் நடத்தப்படுமா என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த அச்சம் தேர்தல்கள் ஆணைக்குழு வரைக்கும் இருக்கிறது.

அதனால் தான், ஜனாதிபதியைச் சந்தித்து, தேர்தலுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது குறித்து, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள்.

Image

நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதியும் உறுதி அளித்திருக்கிறார்.

ஏப்ரல் 25, ஜூன் 20 என இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்தலுக்கு இப்போது, மீண்டும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.

இனி எந்தச் சூழ்நிலையிலும் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது, கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கூட, அந்தப் பிரதேசங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய.

Image

அவர் அவ்வாறு கூறியிருப்பதற்கு முக்கியமான காரணம் இனிமேலும் தேர்தலை பிற்போடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், அது நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமைந்து விடும். ஏனென்றால் ஏற்கனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 90 நாட்களுக்குள்  புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது சட்டநிபுணர்கள் பலரினது கருத்து. அந்தக் கருத்தை உயர்நீதிமன்றம் இன்னமும் நிராகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏற்கனவே 100 நாட்களுக்கு மேலாகி விட்டது. 

எனவே, இனியும் நாடாளுமன்றத் தேர்தலை பிற்போட்டால், புதிய நாடாளுமன்றம் கூடுவது தடைப்படும். அது நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகளைப் பலவீனப்படுத்தி விடும்.

ஏற்கனவே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அரசாங்கம், சிவில் ஆட்சியில் இருந்து விலகி, இராணுவ ஆட்சிப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. இது உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கென வழங்கப்பட்டுள்ள கடமைகளுக்கு கட்டுப்பட்டதாக இருந்தாலும், இதுபோன்ற புறச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தான், ஆக வேண்டும்.

கொரோனா தொற்றை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தது போல, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக இனிமேலும் தேர்தலை தாமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கும் வந்திருக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு.

ஆணைக்குழுவின் இந்த முடிவு சரியானது என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் ஒத்திகை தொடங்கியது ...

அதேவேளை, ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பதற்குள் ஆணைக்குழுவுக்கு கடுமையான நெருக்கடிகள் காத்திருக்கின்றன.

ஏனென்றால், ஜனநாயக ரீதியான, சுதந்திரமான வாக்களிப்புக்கு, நீதியான, நியாயமான தேர்தலுக்கான சூழலுக்கு வாய்ப்புக் கிட்டுமா என்ற சந்தேகங்கள் இருக்கின்றன.

கொரோனா தொற்றுச் சூழலை காரணமாக காட்டி, அரசாங்கம் நாட்டு மக்களின் மீதான கண்காணிப்பை, தலையீட்டை, தீவிரப்படுத்தி வருகிறது.

சிவில் நிர்வாகத்துக்கு மாற்றாக - அல்லது அதற்கு சமாந்தரமாக, அல்லது சிவில் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களுடன் இராணுவ ஆட்சி சூழல் ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன.

குறிப்பாக, இராணுவ அதிகாரிகளைக் கொண்ட  செயலணிகள் அமைக்கப்படுவதும், அமைச்சுக்களின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதும்,  ஜனநாயக சூழல் வலுப்பெற வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில், தேர்தலை இன்னும் தாமதிக்கும் நிலை ஏற்பட்டால், அது ஜனநாயகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  நாடாளுமன்ற ஆட்சியைப் பலவீனப்படுத்தி, நிறைவேற்று அதிகாரம் கோலோச்சுவதுடன், இராணுவ ஆட்சியையும் வலுப்படுத்தி விடும்.

இந்தநிலையில் தான், எப்படியாவது தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டத்துக்குள், தேர்தல்கள்  ஆணைக்குழு தள்ளப்பட்டிருக்கிறது.

தேர்தல்கள் திட்டமிட்டவாறு ஓகஸ்ட் 5ஆம் திகதி நடக்கப் போகின்ற சூழலில், அது நியாமானதாகவும் நீதியானதாகவும் நடக்க வேண்டும் என்பதே இப்போதுள்ள எதிர்பாரப்பு.

ஏனென்றால்,  தற்போது போர்க்காலத்தில் காணப்பட்டதை விட,  தற்போதைய ஆட்சியில் இராணுவத்தினதும், ஆளும்கட்சியினதும் அதிகாரத்துவ போக்கு மோசமடைந்திருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாத போதும், பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீ்ழ், கூடுதல் அதிகாரம் கொண்டவர்களாக படையினர் மாறியிருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் படையினரின் வகிபாகம் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் இல்லை.

சமூக வாழ்க்கையில் ஆழ ஊடுருவியுள்ள ...

ஏனென்றால், சந்திக்குச் சந்தி, பொது இடங்களில் எல்லாம் இப்போது இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழல் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இராணுவத்தினரை வாக்கெடுப்பில் இருந்து ஒதுக்கி வைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

அதேவேளை, இப்போதைய அரசாங்கம், சிவில் அதிகாரிகளை விட இராணுவத்தினரையே அதிகம் நம்புகின்றது.

கொரோனா தொற்று சூழலில் வாக்களிப்பு நிலையங்களில், அதிகளவு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய தேவை உள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்துவது என்பதை விட, அவ்வாறான தேர்தல் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் இராணுவத்தினரைப் பயன்படுத்த முற்படலாம்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் புலனாய்வு அதிகாரிகளை  நிறுத்தவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது முற்றிலும் சரியான தகவலா என்ற சந்தேகம் உள்ளது.

ஏனென்றால், கடந்த ஜனாதிபதி தேர்தலில், 45 ஆயிரம்  வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தளவு எண்ணிக்கையான புலனாய்வு அதிகாரிகளை நிறுத்துவது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்குமா என்பது சந்தேகம்.

ஆனால், முக்கியமான வாக்குச் சாவடிகளில், அரசாங்கம் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்த முயன்றால் கூட, அது ஜனநாயக சூழலுக்கு, நியாயமான தேர்தலுக்கு சவாலாகவே இருக்கும்.

அதைவிட இந்த தேர்தலில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவது வரை எல்லாமே தாமதமாகவும், இழுபுறியாகவும் தான் இருக்கப் போகிறது.

ஏனென்றால், கொரோனா தொற்று நீக்கல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் இந்த செயற்பாடுகளில்  தாமதங்கள் ஏற்படும்.

அவ்வாறான நிலையில், நியாயமான நீதியான தேர்தலை எந்தளவுக்கு உறுதி செய்ய முடியும் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

யாழில் இன்று இடம்பெற்ற தேர்தல் ...

சுகாதார வழிகாட்டு முறைகளின் அடிப்படையில், நியாயமான தேர்லை நடத்தலாம் என்று எவராவது நம்பினால் அது முட்டாள்த்தனம் என்று தேர்தல் கண்காணிப்பில் நீண்டகால அனுபவம் கொண்ட கீ்ர்த்தி தென்னக்கோன் வெளியிட்டுள்ள கருத்து முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது.

தேர்தல் பிரசாரத்தில் தொடங்கி, முடிவுகளை அறிவிப்பது வரையில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களும், பக்க சார்பும் இந்த தேர்தலில் நிகழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

இதற்கு அப்பால், இந்த முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் வருகையும் கூட சந்தேகம் தான்.

கொரோனா தொற்று சூழலில் அவர்கள் வந்து தேர்தலை கண்காணிப்பதும், அறிக்கை தயாரிப்பதும்  சாத்தியமானதாக தென்படவில்லை.

இவ்வாறான நெருக்கடிகள் எல்லாமே தேர்தலை முறைகேடாக நடத்த எண்ணும், அதிகாரத்தில் உள்ள தரப்புக்கு சாதகமானதாகத் தான் இருக்கும்.

இந்தவகையில் பார்த்தால், கொரோனா நாட்டு மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரத்தை மாத்திரம் சிதைக்கவில்லை. ஜனநாயக சூழலையும், நியாயமான தேர்தலை நடத்துகின்ற வாய்ப்புக்களையும் கூட கெடுத்து விட்டிருக்கிறது என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04