கொரோனா வைரஸ் 2019 ஆகஸ்ட் மாதமே சீனாவில் பரவத் தொடங்கியதா ? - ஆய்வில் தகவல்

16 Jun, 2020 | 01:48 PM
image

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பரவியது என்று கூறும் அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக்கிய ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளை சீனா நிராகரித்துள்ளது.

ஆய்வு கூறுவது என்ன?

சீனாவில் முதல் முதலில் வைரஸ் பரவிய வுஹான் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் செயற்கைக்கோள் படங்களை வைத்தும், மருத்துவ அறிகுறிகள் தொடர்பான இணையத் தேடல்களை வைத்தும் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வுஹான் நகரில் உள்ள ஆறு வைத்தியசாலைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்ததாக அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், 'இருமல்' மற்றும் 'வயிற்றுப்போக்கு' போன்ற கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்கான தேடல் இணையத்தில் அதிகரித்ததாகவும் ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

டிசம்பர் மாதம் தான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக சீனா கூறிய நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் பேசு பொருளாகியுள்ளன.

''வைத்தியசாலைகளை சுற்றி வாகனங்களின் அதிகரிப்புக்கும், புதிய வைரசுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், டிசம்பர் மாதத்திற்கு முன்னரே அங்கு மருத்துவ அவசர நிலை இருந்துள்ளது என்பதை எங்களது ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன,'' என இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றது. கொரோனா விவகாரத்தில் சீனாவைத் தொடர்ந்து விமர்சித்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆய்வு முடிவுகள் குறித்து பொக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போதிய ஆதாரம் உள்ளதா?

சீனாவின் இணையத் தேடுபொறியான பைடூவில், 'இருமல்' மற்றும் 'வயிற்றுப்போக்கு' போன்ற அறிகுறிகளுக்கான தேடல் ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரித்ததாக ஆய்வு கூறுகிறது.

ஆனால், இந்த கண்டுபிடிப்புகளுடன் பைடூ நிறுவனம் முரண்படுகிறது. அந்த காலகட்டத்தில் 'வயிற்றுப்போக்கு' குறித்த தேடல் குறைந்ததாக பைடூ தெரிவித்துள்ளது.

ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வில், 'வயிற்றுப்போக்கின் அறிகுறி' என்ற சீன மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ள சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கூகுளைப் பயன்படுத்தும் நபர்கள் கூகுள் ட்ரெண்ட்ஸை பார்க்க முடிவது போல, பிரபல தேடல் வார்த்தைகள் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்ய பைடூ தளம் தனது பயன்பாட்டாளருக்கு அனுமதியளிக்கிறது.

பி.பி.சி. சார்பில் பைடூ தளத்தில் செய்யப்பட்ட ஆய்வில், 'வயிற்றுப்போக்கின் அறிகுறி' என்ற வார்த்தையின் தேடல் 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதிகரித்துள்ளது.

ஆனால், 'வயிற்றுப்போக்கு' என்ற வார்த்தையின் தேடல் ஆகஸ்ட் மாதம் முதல் குறைந்து வந்துள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்ட டிசம்பர் மாதத்தில் தான் இந்த வார்த்தையின் தேடல் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசின் இரண்டு பொதுவான அறிகுறிகளான "காய்ச்சல்" மற்றும் "சுவாசிப்பதில் சிரமம்" ஆகிய வார்த்தைகளின் தேடல்களையும் பிபிசி பார்த்தது.

காய்ச்சல், இருமல் போன்ற வார்த்தைகளின் தேடல் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு சற்று அதிகரித்துள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் 'சுவாசிப்பதில் சிரமம்' என்ற வார்த்தையின் தேடல் குறைந்துள்ளது.

வயிற்றுப்போக்கை நோயின் அறிகுறியாக இந்த ஆய்வு பயன்படுத்தியது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

பிரிட்டனில் 17 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வயிற்றுப்போக்கு தங்களுக்கு ஏழாவது அறிகுறியாக வந்ததாகக் கூறுகின்றனர். இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவையே முதல் மூன்று அறிகுறிகளாக உள்ளன.

கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வுஹானில் உள்ள ஆறு மருத்துவமனைகளின் வாகன நிறுத்துமிடங்களில் கார்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆய்வு கூறுகிறது.

இவர்கள் ஆய்வில் சில தவறுகள் இருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.

வாகனங்களின் எண்ணிக்கையைத் தவறாகக் கணக்கிடப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மரங்கள் மற்றும் கட்டடங்களின் நிழல்கள் உள்ள படங்களைச் சேர்க்கவில்லை என ஆய்வு கூறுகிறது.

ஆனால், ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், வைத்தியசாலை வாகன நிறுத்துமிடத்தை துல்லியமான காண முடியாத அளவுக்கு உயரமான கட்டடங்கள் இருந்தன. அப்படி என்றால், அங்கு எத்தனை கார்கள் இருந்தன என்பதை சரியாகக் கணக்கிடுவது சாத்தியமற்றது.

தியான்யு வைத்தியசாலையின் வாகன நிறுத்துமிடம் கட்டடத்துக்குக் கீழ் உள்ளது. பைடூ மேப்களில் வாகன நிறுத்துமிடத்தின் நுழைவு வாயிலை மட்டுமே காண முடியுமே தவிர உள்ளே இருக்கும் கார்களை பார்க்க முடியாது.

''கட்டடத்துக்கும் கீழ் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தைச் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நம்மால் காண முடியாது. இந்த வகை ஆய்வுகளில் சில வரம்புகள் உள்ளன'' என்கிறார் ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பெஞ்சமின் ரேடர்.

இந்த ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகள் குறித்தும் கேள்விகள் உள்ளன.

ஹுபே பெண்கள் மற்றும் குழந்தைகள் வைத்தியசாலையை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஆனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரிதாகவே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் சேகரித்த தரவுகளைச் சீனாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். இதன் மூலம் வைரஸ் தொற்று முதன் முதலில் வந்த வுஹான் நகரில் மட்டும் வாகனங்கள் எண்ணிக்கையும், இணையத் தேடலும் அதிகரித்ததா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து இருக்கலாம்.

இந்த ஒப்பீடுகளைச் செய்யாத, நாம் எழுப்பிய சந்தேகங்களைத் தீர்க்காத இந்த ஆய்வு, ஆகஸ்ட் மாதம் முதலே வுஹான் மக்கள் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிபிசி தமிழ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52