( மயூரன் )

வரணிப் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றசாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள  9 சந்தேக நபர்களில் 5 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றசாட்டில் ஆசிரியர் ஒருவரும் அந்த குற்றத்தை மறைக்க உதவியவர்கள் எனும் குற்றத்தில் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகள் உட்பட எட்டு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இருந்தனர். 

அதில் நேற்று முன்தினம் அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகளும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

அதில் 6 ஆம் , 7 ஆம் , 8 ஆம் , 9 ஆம் , சந்தேகநபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அவர்களையும் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி இருந்தார். 

 பிணை விண்ணப்பத்தை  நிகாரித்த நீதிவான் 1 ஆம் , 6 ஆம் , 7 ஆம் , 8 ஆம் , 9 ஆம் , ஆகிய சந்தேக நபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதேவேளை சந்தேக நபர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஊடகங்களில் சந்தேக நபர்களை குற்றவாளிகள் என குறிப்பிட்டு செய்திகள் பிரசுரமாகின்றன. இதனால் சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர் பாதிக்கப்படுகின்றார்கள் என நீதிவானிடம் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த நீதிவான் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்மானிக்கும் வரையில் அவர்கள் சந்தேக நபர்கள் தான் எனவே அவ்வாறு செய்தி வெளியிடும் ஊடகங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.