29 ஆம் திகதி பாடசாலைகளை மீளத்திறக்க தீர்மானம்: உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை  திகதிகள் அறிவிப்பு!

09 Jun, 2020 | 05:32 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக சுமார் 100 நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 5 கட்டங்களாக மீளத்திறக்கப்படவுள்ளன. அத்தோடு க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும், ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்வியமைச்சு அறிவித்திருக்கிறது.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முழுவதுமான முடக்கப்பட்டிருந்த நாடு, தற்போது ஒவ்வொரு கட்டமாக மீண்டும் வழமைபோன்று இயங்க ஆரம்பித்திருக்கும் நிலையில் பாடசாலைக்கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல் மற்றும் க.பொ.த உயர்தர, ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்தும் திகதிகள் தொடர்பான அறிவித்தலை வெளியிடும் நோக்கில் இன்று செவ்வாய்கிழமை பத்தரமுல்லை இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வியமைச்சில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெருமவினாலேயே மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டன.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகள் மூடப்பட்டு சுமார் 100 நாட்கள் ஆகியிருக்கின்றன. இக்காலப்பகுதியில் பெருமளவான மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கும் சிக்கியிருந்தார்கள் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். அதேபோன்று கொரோனா வைரஸ் நெருக்கடி எமக்குப் பல்வேறு பாடங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. 

முன்னர் தமது பிள்ளைகளுக்கு கையடக்கத்தொலைபேசியைக் கொடுப்பதை விரும்பாத பெற்றோர்கள், தற்போது ஒன்லைன் மூலம் பிள்ளைகள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நிலைக்கு மாறியிருக்கின்றனர். அதேபோன்று வரலாற்றில் நாம் முதற்தடவையாகவே இவ்வாறானதொரு சவாலுக்கு முகங்கெர்டுத்ததுடன், அதிலிருந்து மீள்வதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதேபோன்று தற்போது நாட்டின் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் பாடசாலைகளின் கல்விச்செயற்பாட்டினை மீள ஆரம்பிப்பது குறித்தும், பரீட்சைகளை நடத்துவது குறித்தும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, சுகாதார அமைச்சு ஆகிய அனைத்துத் தரப்பினருடனும் கல்வியமைச்சின் சார்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அதனடிப்படையில் இறுதித் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றோம். எனவே இத்தீர்மானங்கள் கல்வியமைச்சினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டவை எனக்கருத வேண்டாம்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்

அதன்படி அனைத்துப் பாடசாலைகளையும் இம்மாதம் 29 ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களாக மீளத் திறப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். முதற்கட்டமாக இம்மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஜுலை மாதம் 3 ஆம் திகதிவரை பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவேண்டும். இக்காலப்பகுதியில் பாடசாலைகளைச் சுத்திகரித்தல், தொற்றுநீக்கல், பாட அட்டவணை தயாரித்தல், மாணவர்களின் வருகையின் பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். 

இரண்டாம்கட்டமாக ஜுலை மாதம் 6 ஆம் திகதியிலிருந்து தரம் 5, 11 மற்றும் 13 மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வருகைதர வேண்டும். ஜுலை 17 ஆம் திகதி வரையில் வேறெந்த வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு சமுகமளிக்கத் தேவையில்லை. 

பின்னர் மூன்றாம்கட்டமாக ஜீலை 20 ஆம் திகதியிலிருந்து தரம் 10 மற்றும் 12 மாணவர்களும் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுவர். நான்காவது கட்டமாக ஜுலை 27 ஆம் திகதியிலிருந்து தரம் 3, 4, 6, 7, 8, 9 மாணவர்களும் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.

 ஐந்தாம்கட்டமாக தரம் 1 மற்றும் 2 மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் ஏனைய சூழலியல் காரணிகளைக் கருத்திற்கொண்டு பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு வகுப்புக்களுக்குமான பாடசாலை நேரம்

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டதும் ஒவ்வொரு வகுப்புக்களுக்கும் பாடசாலை நடைபெறும் நேரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலை 7.30 மணிக்கு பாடசாலை ஆரம்பமாகும். எனினும் தரம் 3, 4 மாணவர்களுக்கு மு.ப 11.30 மணிவரையும் தரம் 5 மாணவர்களுக்கு நண்பகல் 12 மணிவரையும் தரம் 6, 7, 8, 9 மாணவர்களுக்கு பி.ப 1.30 மணிவரையும் தரம் 10, 11, 12, 13 மாணவர்களுக்கு பி.ப 3.30 மணிவரையும் பாடசாலையை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரம் மற்றும் ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சைகள்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் முதல்வாரம் வரையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயர்தர மாணவர்களால் தமது கற்றல் செயற்பாடுகளைத் தொடர்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் குறைப்பைச் செய்து, பரீட்சை வினாத்தாளைத் தயாரிப்பது அல்லது பரீட்சைத் திகதியைப் பிற்போடுவது ஆகிய இரண்டு தீர்வுகளே எம்மிடம் காணப்பட்டன. 

இவையிரண்டில் முதலாவது தீர்வு சிறந்தது என்று நாம் ஆரம்பத்தில் கருதினோம். எனினும் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவையாக உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் முழுப்பாடத்திட்டத்தையும் பூர்த்திசெய்திருக்கிறார்கள். எனவே பாடத்திட்டக்குறைப்பை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே இச்சிக்கல்களையும், மாணவர்களின் மனநிலையையும் கருத்திற்கொண்டு உயர்தரப்பரீட்சையைப் பிற்போடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

அதன்படி க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி, அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி முடிவடையும். அதேபோன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையையும் பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அப்பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும்.

பாடசாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்தல்

பாடசாலைகளுக்கு வருகைதரும் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், பாடசாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப்பாதுகாப்பு அணுகுமுறைகள் உள்ளடங்கிய 'கொவிட் - 19 பரவலைத் தடுப்பதற்குப் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களைத் தயார்ப்படுத்துவதற்கான சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டல் கையேடு' ஒன்று கல்வியமைச்சினால் தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துவரும் போக்குவரத்து கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவருகின்றோம். இவ்விடயத்தில் பொதுப்போக்குவரத்து சற்று சவாலான விடயமாக இருக்கின்றது. எனினும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல்களை முன்னெடுத்துவருகின்றோம். 

எனவே பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பொய்யான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் கல்வியைக் கருத்திற்கொண்டு பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் வலியுறுத்துகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33