நந்தவனத்து ஆண்டிகள்

07 Jun, 2020 | 10:14 PM
image

-என்.கண்ணன்

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க கூட்டு அரசாங்கத்தின் முக்கியமான சாதனையாக சுதந்திர ஆணைக்குழுக்களை நிறுவியதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தற்போதைய அரசாங்கம் அதிகாரங்களை தன்னிச்சைப்படி பயன்படுத்த முடியாமல் இருப்பதற்கு, இந்த ஆணைக்குழுக்கள், ஒரு முக்கியமான தடையாக இருக்கின்றன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாயினும், பிரதமராயினும், சுதந்திர ஆணைக்குழுக்களின் முடிவுகளில் தலையீடு செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது.

குறிப்பாக, தேர்தல்கள் ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்படும் சூழலை உருவாக்கிக் கொடுத்தது இந்த ஆணைக்குழு தான்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டும் இருக்கிறது.

ஆனால் அந்த அங்கீகாரமும், ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு, தற்போதைய அரசாங்கத்தின் போக்கு, மாத்திரம் காரணமல்ல. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் காணப்படும் முரண்பாடுகள் தான் இந்த நிலைக்கு முக்கியமான காரணம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருக்கும் மகிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் திணைக்களத்தில், நீண்டகாலம் சேவையாற்றிய – தேர்தல்களுடன் தொடர்புடைய விடயங்களில், அனுபவமும், அதுசார்ந்த அறிவும் உள்ள ஒருவர்.

ஆனால், ஏனைய இரண்டு உறுப்பினர்களும் அவ்வாறான அனுபவம் கொண்டவர்களல்ல. அவர்கள் வேறு வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலுக்கும், ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் தோன்றி வருகின்றன.

இந்த முண்பாடுகள் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே அவ்வப்போது தென்பட்டது. பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் முன்வைத்த சில யோசனைகள்- தெரிவித்த கருத்துக்களை, மகிந்த தேசப்பிரிய நிராகரித்திருந்தார். அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்று கூறி தட்டிக் கழித்திருந்தார்.

அதேவேளை, ஆணைக்குழுவின் பல்வேறு செயற்பாடுகளின் சுயாதீனத்தன்மையை, உறுதிப்படுத்துவதில் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலுக்கு அதிக பங்கு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆணைக்குழுவின் தலைவர், சில வேளைகளில் எடுக்க முயன்ற முடிவுகளை அவர் தடுத்து நிறுத்தியிருக்கிறார் அல்லது விமர்சனம் செய்திருக்கிறார்.

இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் அதிகம் ஏற்பட்டன.

இவ்வாறான முரண்பாடுகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியானதால், இரண்டு பேருமே மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிகிறது. இந்த முரண்பாடுகள் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் கேள்வி எழுந்த போது, ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒத்த கருத்து இருக்க வேண்டும் என்று மகிந்த தேசப்பிரிய கூறியிருந்தார்.

அதற்கு பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஆணைக்குழுவின் ஒத்த கருத்துடையவர்கள் தான் இருக்க வேண்டும் என்றால், அதற்கு 3 உறுப்பினர்கள் தேவையில்லை என்றும், ஒருவரே போதும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது மாற்றுக் கருத்துக்களை விவாதித்து சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடியதாக ஆணைக்குழு இருக்க வேண்டும் என்பதே, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் கருத்தாக இருந்தது.

அதற்கு மாறாக, ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்தியில், மாற்றுக் கருத்துகளின்றி - ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மகிந்த தேசப்பிரிய எதிர்பார்க்கிறார்.

தேர்தலை நடத்துவதென்பது ஒரு பெரும் சவாலுக்குரிய விடயம். அதனைச் செய்து முடிப்பதற்குள், பல சமயங்களில் போதும் போதும் என்றாகி விடும்.

அப்படியான சிக்கல் நிறைந்த- சவால்கள் நிறைந்த ஒரு ஆணைக்குழுப் பணியை சுதந்திரமாக மாத்திரமன்றி, அமைதியாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் மகிந்த தேசப்பிரிய.

ஆனால், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், கலகம் பிறந்தால் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறவராக இருக்கிறார். எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ அதை பட்டென்று போட்டு உடைத்து விடக் கூடியவர் அவர். அவரது இந்த இயல்பு, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதும் அதில் தொடர முடியாத நிலையை ஏற்படுத்தியது.

விடுதலைப் புலிகள் எதிர்ப்புத் தெரிவித்ததே அதற்குக் காரணம் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருப்பதை தற்போதைய அரசாங்கமும் கூட விரும்பவில்லை.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுகிறார் என்றும், கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரல்படியே நடந்து கொள்கிறார் என்றும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பலரும் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

இதன் மூலம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை, எதிர்க்கட்சிகள் குழப்புகின்றன என்ற கருத்தை ஏற்படுத்த முனைகிறது அரசாங்கம்.

இவ்வாறாக ஒரு பக்கத்தில் அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் மகிந்த தேசப்பிரிய என இரண்டு பக்க சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறார் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்.

அவர், சட்டங்கள் உரிய முறைப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய ஒருவர், அதற்காக வளைந்து கொடுக்கக் கூடாது என்று கருதுபவர்.

இந்தநிலையில், மகிந்த தேசப்பிரிய தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழிங்கிய செவ்வியில் ரட்ணஜீவன் ஹூல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தொடர்பாக தாம் அரசியலமைப்புச் சபையிடம் முறையிடப் போவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தாம் ஆணைக்குழுவில் தொடர்வதா என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார் மகிந்த தேசப்பிரிய.

ஓய்வெடுக்கப் போகிறேன் அல்லது பதவியில் இருந்து விலகப் போகிறேன் என்று மகிந்த தேசப்பிரிய, கூறுவது இது முதல் தடவையோ இரண்டாவது தடவையோ அல்ல.

பணிச் சுமை அதிகமாக உள்ளது என்றும், தேர்தல் முடிந்த பின்னர் பதவி விலகுவதாகவும் அவர் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை அவர் அப்படிச் செய்யவில்லை.

விலகும் எண்ணமும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. தேர்தல் சிக்கல்களை முன்னரே கணித்து அதனை எதிர்கொள்வதற்குத் தகுதியான ஒருவர் முக்கியம். அத்தகைய ஒருவராக மகிந்த தேசப்பிரிய இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேவேளை, ஏனைய உறுப்பினர்களும் தமது எதிர்பார்ப்புக்கேற்றவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவரது பலவீனம்.

இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி போல, அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஆட்டிப் படைத்தவர் ரி.என்.சேஷன்.

அவர் தான் இந்தியாவில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயற்படுவதற்கு அடித்தளம் போட்டவர். அவருக்குப் பின்னர், அவ்வாறானதொரு வல்லமையும், ஆற்றலும் கொண்ட தேர்தல் ஆணையத் தலைவர் எவரும் இந்தியாவில் உருவாகவில்லை.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் கணிசமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதுபோலத் தான், இலங்கையிலும் தேர்தல் விடயங்களில் அனுபவம் பெற்றவராக மகிந்த தேசப்பிரிய இருந்தாலும், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலுடன் அவர் கொண்டுள்ள முரண்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன.

இரண்டு தரப்புகளும் தமது பக்கம் உள்ள நியாயங்களை கூறுகின்றன. இதனால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுதந்திரத் தன்மை தான் பந்தாடப்படுகிறது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் உள்ள கருத்து முரண்பாடுகளால், ஆணைக்குழு பலவீனமடைந்து விடுமோ, அதன் சுயாதீனத் தன்மைக்கு பங்கம் வந்து விடுமோ என்ற அச்சமும் தோன்றியிருக்கிறது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கொண்டு வரப்பட்ட, 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் ஒழித்து, அதிகாரங்களை குவிக்கின்ற முனைப்பில் தற்போதைய அரசாங்கம் இருக்கிறது.

இவ்வாறான நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மத்தியில் தோன்றியிருக்கின்ற முரண்பாடுகள், தற்போதைய அரசாங்கத்துக்கு சாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆணைக்குழுக்களை நியமித்து கண்டது என்ன என்று கேள்வி எழுப்புகிறது அரசாங்கம்.

சண்டை பிடிப்பதற்காக இந்த ஆணைக்குழு தேவையில்லை என்று மக்கள் ஆணையை அரசாங்கம் கோரினாலும் ஆச்சரியப்பட முடியாது.

இவ்வாறான நிலையில் ஆணைக்குழு உறுப்பினர்கள் நந்தவனத்து ஆண்டிகளாக இல்லாமல் பொறுப்புடன் நடந்து – மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வது முக்கியம். அப்போது தான் சுதந்திர ஆணைக்குழுக்களை இல்லாதொழிக்கும் முயற்சிகளை தோற்கடிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48