ஆபத்தாகும் அடிப்படைவாதம்

06 Jun, 2020 | 02:37 PM
image

-பி.மாணிக்கவாசகம்

அடிப்படைவாதம் என்பது ஆபத்தானது. அது தன்னை மட்டுமே முதன்மைப்படுத்துவது. பிற கொள்கைகள் தத்துவங்களை அது ஏற்பதில்லை. அனுமதிப்பதுமில்லை. தன்னுடைய கொள்கைகளே சிறந்தவை. ஏனையவற்றுக்கு இடமில்லை என்ற பிடிவாதப் போக்கைக் கொண்டிருக்கும். தன்னுடைய கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான அந்தப் பிடிவாதத்தில் எதனையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள். துணிந்து செயற்பட்டும் வருகின்றார்கள்.

இத்தகையதோர் ஆபத்தை நோக்கி இலங்கையும் நகர்ந்து கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் இப்போது தலையெடுத்திருக்கின்றது. அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த ஆட்சியாளர்களே அந்த அடிப்படைவாதத்தின் கிடுக்குப் பிடியில் சிக்கிவிட்டார்களோ என்று எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கின்றது.  

கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் உருவாகி வருகின்ற நிலைமைகளும், உருவாக்கப்படுகின்ற சூழலும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் இனவாதமும் பௌத்த மதவாதமும் செல்வாக்கு செலத்தியிருந்தன. அவற்றின் அடிப்படையில் பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார காலத்தில் தனது வாக்கு வேட்டையை நடத்தியிருந்தது.

பொதுஜன பெரமுன என்ற அரசியல் கட்சிக் கட்டமைப்புக்கு ஊடாக ராஜபக்ஷக்கள் சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொண்டிருந்த பிரசாரம் 69 லட்சம் வாக்குகளாக அவர்களுக்குப் பலனளித்திருந்தது. அந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் பேராதரவுடன் கோத்தாபாய ராஜபக்ஷ வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகினார்.

தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த சிங்கள பௌத்த மக்களுக்குப் பிரதியுபகாரமாக சிங்கள பௌத்த தேசியத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அவர் நாட்டம் கொண்டிருப்பது அரசியல் அரங்கில் படிப்படியாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த பௌத்த மதச் சார்பு நிலையிலான அவருடைய ஆட்சிப் போக்கு இந்த அரசு அடிப்படைவாதத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றதோ என்று தீவிரமாக எண்ணத் தூண்டி இருக்கின்றது.  

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் தலைநகராகிய கொழும்பிலும், நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய புறப் பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்திருந்ததை வெளிப்படுத்தியிருந்தன.

SL remembers 2019 Easter attack victims amid COVID-19 restrictions ...

பௌத்த மதத் தீவிரவாத அமைப்புக்களும் கதாநாயகர்களும்

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிரிகளாகக் கருதுபவர்களை அழித்தொழிப்பதிலும், அதற்காகத் தங்களுடைய இன்னுயிர்களைத் துச்சமாக மதித்து அழித்துக் கொள்வதிலும் எந்த அளவுக்குத் தீவிரமாக இருந்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அப்போது கண்கூடாகக் கண்டார்கள். அது மட்டுமல்லாமல் அந்தத் தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான புலன் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்ட விபரங்கள் இப்போதும் அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வதற்காகப் பாதுகாப்புப் படையினர் பல முனைகளில் மிகத் தீவிரமாகத் தேடுதல்களை நடத்தினார்கள். பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். அதேபோன்று பரந்து விரிந்த அளவில் விசாரணைகளை நடத்தி தாக்குதல்கள் தொடர்பான தகவல்களையும், அதன் பின்னணி பற்றிய விபரங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேநேரம், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியோடு இல்லாமல் செய்வதற்காக வெகுண்டெழுந்த பௌத்த மதத் தீவிரவாதிகள் முஸ்லிம் மக்கள் நெருக்கமாக வாழ்ந்த புத்தளம், குருணாகலை மாவட்டப் பிரதேசங்களில் தமது கைவரிசையைக் காட்டியிருந்தார்கள். இதனால் அந்த அப்பாவி மக்களின் வீடுகள் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டன. உயிரிழப்பும் ஏற்பட்டிருந்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் உலக அரங்கில் மிக மோசமான பயங்கரவாதமாகத் தலையெடுத்து பல நாடுகளையும் உலுப்பிக் கொண்டிருக்கின்றது. கொத்து கொத்தாக அப்பாவிப் பொதுமக்கள் அவர்களுடைய குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள். அந்தப் பயங்கர நிலைமைக்கு முடிவுகட்ட முடியாமல் உலக வல்லரசு நாடுகளும் திணறியதைக் காணக் கூடியதாக இருந்தது.

அத்தகைய பயங்கர நிலைமை இலங்கையிலும் உருவாகிவிடக் கூடாது என்பதில் அரசும் அரச படைகளும் மிகக் கவனமாக இருக்கின்றன. அதேபோன்று பௌத்த மதத் தீவிரவாதிகளும் நாட்டில் முளைவிட்டுள்ள அந்தப் பயங்கரவாதத்திற்கு எதிராக வெகுண்டெழுந்ததன் வெளிப்பாடாகவே முஸ்லிம் மக்கள் மீது கட்டுக்கடங்காத வகையில் வன்செயல்கள் கட்டவிழ்ந்திருந்தன என்று கூறப்படுகின்றது.

இலங்கை ஒரு பௌத்த நாடு. இங்கு சிங்கள பௌத்த தேசியமே முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்ற போக்கில் ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுபல சேனா, சிஹல உறுமய போன்ற தீவிர பௌத்த மதவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்று பௌத்த மதத்திற்கு ஆபத்து நேர்ந்திருக்கின்றது என்ற போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் முக்கியஸ்தர்களாகவும், கதாநாயகர்களாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் போன்ற பௌத்த பிக்குகள் வெளிப்படையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திற்கான செயலணி

ஆயினும் பௌத்த மதத் தீவிரவாதிகளின் செயற்பாடுகளினால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அடையாளம் காணப்படவில்லை. அவர்களுடைய செயற்பாடுகளுக்கு இவர்கள் முட்டுக்கட்டை போடவுமில்லை. மாறாக முஸ்லிம் மக்களும் அதேபோன்று இந்து மத வணக்கத்தலங்களும், புராதன இந்து மதத் தொல்லியல் இடங்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின. உள்ளாகி வருகின்றன. வன்முறைகளும் இதனையொட்டி தலைதூக்கி இருக்கின்றன.

பிரபாகரனின் உறுதி, நடத்தையை ...

இருந்த போதிலும் அமைச்சர்களும், அரச தலைவர்களும் பௌத்த மதத்தைப் போலவே ஏனைய மதங்களையும் அவற்றைப் பின்பற்றுபவர்கள் சுதந்திரதமாகவும் அச்சுறுத்தல்களின்றியும் கடைப்பிடித்து ஒழுக முடியும். அதற்கான உரிமைகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. நடைமுறையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று கூறுகின்றார்கள். அந்த மதங்கள் சார்ந்த விசேட தின வைபவங்களில் கலந்து கொள்கின்றார்கள். பண்டிகைகள் முக்கிய தினங்களில் அரச முறையாக வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.

இத்தகைய பின்புலத்தில்தான் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி அவற்றைப் பேணிப்பாதுகாப்பதற்கான செயலணி ஒன்றை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ உருவாக்கி இருக்கின்றார். இந்தச் செயணியின் தலைவராக முன்னாள் படை அதிகாரியும், இந்த அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளருமாகிய கமால் குணரட்ன நியமிக்கப்பட்டிருக்கின்றார்.  

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்லியல் நிலையங்கள் அனைத்தையும் கண்டறிந்து, அவற்றையும் அவற்றைச் சூழவுள்ள இடங்களையும் அடையாளப்படுத்தி தொல்லியல் செயல்வழி முறைகளின் ஊடாகப் பாதுகாப்பதற்கு இந்தச் செயலணி நடவடிக்கைகளை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

தொல்லியல் இடங்களைப் பராமரிக்கின்ற சர்வதேச நியமங்களுக்கும், உள்ளுர் நியமங்களுக்கும் அமைவாக இவற்றின் கலாசாரப் பெருமைகள் பராமரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் புராதன இடங்களாகிய தொல்லியல் இடங்கள் பல மதங்களையும் சார்ந்தவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அந்த மாகாணத்தின் வரலாற்று ரீதியான குடிமக்களாகத் தமிழ் மக்களும், அவர்களுடன் இஸ்லாமிய மக்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள்.

பல இனங்கள் பல மதங்கள் என்ற பல்லினத் தன்மை கொண்ட கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களைக் கண்டறிவதற்கும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்குமாக நியமிக்கப்பட்டுள்ள விசேட செயலணியின் 11 பேரும் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவின் தலைவர் அதிகார பலமும், செயல்வல்லமையும் கொண்ட பதவியாகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன என்பது குறிப்பிடத்தக்கது.

சிதறடிக்கும் நோக்கம்

இந்தக் குழுவில் எல்லாவெல மெத்தானந்த தேரர், பனமுரே திலகவன்ச தேரர் ஆகிய இரண்டு தீவிர பௌத்த மதச் செயற்பாட்டாளர்களாகிய பௌத்த மதத் தலைவர்களும், ஒரு காணி ஆணையாளர்கள், நில அளவையாளர், ஒரு பேராசிரியர், ஒரு விரிவுரையாளர், ஒரு மருத்துவர், சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் என பல்துறை சார்ந்தவர்களும் இடம்பெற்றிருக்கின்றார்கள்.

இராவணன் இலங்கை மன்னன் அல்ல ...

கிழக்கு மாகாணத்தில் 70 வீதமான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த குடிமக்கள்; வாழ்கின்றனர். ஆனால் அந்தப் பிரதேசத்தின் தொல்லியல் இடங்களைக் கண்டறிந்து பராமரிக்கும் பணியில் முழுக்க முழுக்க சிங்களவர்களைக் கொண்ட செயலணி ஒன்றே நியமிக்கப்பட்டிருக்கின்றது. தொல்லியல் இடங்கள் என்பதும், அந்த விவகாரம் என்பதும் முழுக்க முழுக்க சிவில் நிலைமை சார்ந்தது. ஆனால் சிவில் நிலைசார்ந்த நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு வேலைத்திட்டத்திற்கு சிங்கள பௌத்த மத ரீதியான பெரும்போக்கைக் கொண்டவர்களை உள்ளடக்கியவர்களும், இராணுவத் தலைமையும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் செயலணியின் செயற்பாடுகள் முழுக்க முழுக்க சிங்கள பௌத்த மதம் மற்றும் சிங்கள பேரின நலன் சார்ந்ததாகவும் இருக்கும் என்பதை இதற்கென நியமிக்கப்பட்டுள்ளவர்களில் இருந்து தெளிவாக உணர முடிகின்றது. வலிந்த சிங்களக் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற ஒரு முக்கிய பிரதேசமாக கிழக்கு மாகாணம் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதேவேளை வடக்கையும் கிழக்கையும் வரலாற்று ரீதியான தாயமாகக் கொண்டுள்ள தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான பிரதேசமாகக் குறித்து, அதன் அடிப்படையில் அந்தப் பிராந்தியத்திற்கு சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரப் பகிர்வு முறையிலான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வே பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு முன்னதாக இந்தத் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் தனிநாடு கோரி தமிழ் இளைஞர்களினால் ஆயுதப் போராட்டமும் நடத்தப்பட்டிருந்தது. அந்தப் போராட்டத்தின் இறுதி அலகில் தீவிரமாகப் போராடிய விடுதலைப்புலிகள் அரச படைகளினால் 2009 ஆம் ஆண்டு இராணுவ ரீதியாக மௌனிக்கச் செய்யப்பட்டார்கள். அந்த ஆயுதப் போராட்டத்தின்போதும், அதன் பின்னரும், தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டு அரசியல் நிலைப்பாட்டைத் தகர்ப்பதற்காக வடக்கும் கிழக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் துண்டாடப்பட்டு வந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை முழுமையாகச் சிதறடிப்பதற்கான செயற்திட்ட வலையமைப்பை அடிப்படையாகக் கொண்டே கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் பிரதேசங்களைக் கண்டறிந்து பராமரித்துப் பாதுகாப்பதற்கான செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பது மிகத் தெளிவாகி உள்ளது.  

கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் பிரதேசங்களை அடையாளம் கண்டு பராமரிப்பதற்கான உயர் மட்ட தரத்திலான செயலணி நியமிக்கப்பட்டதையடுத்து, அத்தகைய அமைப்பொன்றை உருவாக்கிச் செயற்படுவதற்கான தேவை என்ன? அது இப்போது ஏன் அவசியமாகியிருக்கின்றது? இந்தக் கேள்விகள், இந்த செயலணி உருவாக்கம் பற்றிய செய்திகள் வெளியாகியதும் இயல்பாகவே பலருடைய மனங்களிலும் எழுந்தன. ஆனாலும், அந்தக் கேள்விகளுக்கு அந்தச் செயலணியை நியமித்த ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அராசங்கத்திடமிருந்தோ வரவில்லை.

ஆனால் சிங்கள பௌத்த தேசியத்திற்காகத் தனது சிவில் நிலைமைகளையும் கடந்து மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக் கேள்விளுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

'வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகமல்ல. இந்தப் பிரதேசங்களும் சிங்கள பௌத்தர்களின் பூமிதான். முழு நாடுமே சிங்கள பௌத்த நாடுதான் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு இராணுவமே பாதுகாப்பு. இதைவிடுத்து புலம்பிக் கொண்டிருப்பதில் பலனில்லை' என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலணியின் நியமனம் குறித்தும், அதன் செயற்பாடுகள் குறித்தும் பல தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள். ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து அந்தப் பிரதேசத்தின் குடிப்பரம்பல் நிலைமையில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஆட்சியாளர்களின் போக்கில் நிலைமையை இன்னும் மோசமாக்குவதற்கே இந்த செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது என்று தமிழ்த்தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த சந்தேகத்தை ஞானசார தேரரின் கூற்று உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் இனம்புரியாத அச்ச நிலைமை தோன்றியிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உள்ளுரில் மட்டுமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும் என்று பேர்ள் எனப்படும் இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு கூறியிருக்கின்றது.

பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான செயலணி என்ற பெயரில் முழுக்க முழுக்க முப்படைகளின் தளபதிகளையும், புலனாய்வு அமைப்புக்களின் தலைமை அதிகாரிகளையும் உள்ளடக்கி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய தலைமையில் உருபாக்கப்பட்டுள்ள மற்றுமொரு செயலணியையும் அந்த அமைப்பு குறித்துக் கூறியிருக்கின்றது.

கிழக்கில் காத்திருக்கும் பெரும் ...

ஏன்....?

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் இடங்களைப் பராமரிக்கும் நடவடிக்கை என்ற பெயரில் அந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே பௌத்த மத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள இடங்களை அதிகாரப் போக்கில் சட்ட ரீதியாக நிலைநிறுத்துவது இந்தச் செயலணியின் முக்கிய நோக்கம் என்று அந்த மாகாணத்தில் எழுந்துள்ள மத ரீதியான முறுகல் நிலைமைகளில் நன்கு பரிச்சயமுள்ள பிரமுகர்கள் கூறுகின்றார்கள்.

குறிப்பாக தொல்லியல் இடங்களைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் குடியேறியுள்ள சிறுபான்மை இன மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்குரிய முன்னோடி நடவடிக்கைகளில் இந்தச் செயலணி ஈடுபடும் என்பதில் சந்தேகமே இல்லை என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றார்கள்.

ஏற்கனவே அந்த மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் தொல்லியல் இடங்களிலும் பிற மதங்களின் புராதன வழிபாட்டு இடங்களிலும் பௌத்த பிக்குகள் சிலர் பௌத்த மத தீவிரவாதிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் சமூகங்களிடையே அமைதியின்மையையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருந்ததை அனைவரும் அறிவார்கள்

அந்த சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் விசாரணை மட்டங்களில் இழுபறி நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த சம்பங்களில் அதிகார மேலாதிக்க நிலையில் செயற்பட்டுக் கொண்டிருகின்ற பௌத்த மதத் தலைவர்களும் அவர்களைச் சார்ந்தோரும், பிரச்சினைக்குரிய இடங்களில் ஏற்கனவே காலம் காலமாகக் குடியிருந்து வரும் குடும்பங்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில்; ஈடுபட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய ஒரு நிலைமையில்தான் தொல்லியல் இடங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதாகக் கூறி அதிக அதிகார சக்திவாய்ந்த உயர் மட்ட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள பௌத்த தேசியம் என்ற அரசியல் நிலைப்பாட்டைக் கடந்து இன ரீதியாகவும் மத ரீதியாகவும் அடிப்படைவாத நிலைப்பாட்டுக்குள் பிரவேசிக்கின்ற நிலைமையையே இந்த கிழக்கு மாகாணத்திற்கான செயலணி உருவாக்கச் செயற்பாடு உணர்த்துகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04