மாற்றப்பட வேண்டிய அணுகுமுறைகள் !

02 Jun, 2020 | 03:50 PM
image

-பி.மாணிக்கவாசகம்

இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடித்துச் செல்லப்படுகின்றது. அது ஒரு தேசிய பிரச்சினை. இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இன மக்களுடைய அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினை. அது இப்பொழுது அந்த நிலையில் இருந்து தேய்ந்து அந்த மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையாகப் பரிணமித்திருக்கின்றது.

ஒரே நாட்டில் வாழ்கின்ற சக இன மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைப் பின்போடுவது ஆரோக்கியமான அரச நிர்வாகமாக அமையாது. நீண்ட காலத்திற்கு அதனை இழுத்தடித்து, அந்தப் பிரச்சினையை மழுங்கடித்து விடலாம் என்ற நப்பாசையில் ஆட்சியாளர்கள் நடந்து கொள்வதைக் காண முடிகின்றது. ஆனால் அவ்வாறு அந்தப் பிரச்சினையை இல்லாமல் செய்துவிட முடியாது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளும், ஆட்சியாளர்களும் இந்த 'பின்போட்டு மழுங்கடிக்கும்' தந்திரோபாயத்தைத்தான் பின்பற்றி வருகின்றார்கள். பிரச்சினையைப் பின்போடுவது மட்டுமல்ல. அந்தப் பிரச்சினையை மேவி வேறு பல பிரச்சினைகளை உருவாக்கி அவற்றில் பிரதான பிரச்சினையை மூழ்கடிக்கச் செய்வதற்கான வழிமுறைகளையும் அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள்.

இத்தகைய போக்கு நீண்ட காலத்திற்கு அவர்களுக்கு வசதியானதாக அமையாது. ஏனெனில் சக இன மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், அவர்களை திருப்தியற்ற நிலையில் வைத்திருப்பது பேரின மக்களின் நிம்மதியைக் குலைப்பதற்கான முயற்சியாகவே ஒரு நாள் மாறும்.

ஏனெனில் பல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களும் வாழ்கின்ற பன்மைத்தன்மை கொண்டதாக நாடு திகழ்கின்றது. எனவே அரசியலில் மட்டுமல்ல. அனைத்து விடயங்களிலும் பன்மைத்தன்மை பேணப்பட வேண்டியது அவசியம். பன்மைத்தன்மை இல்லையேல் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும். தடைகள் ஏற்படும்.

இலங்கை ஒரு தீவு. சிறிய தீவக நாடு என்ற காரணத்திற்காக வேண்டுமானால் ஒற்றையாட்சி முறை அவசியம் என்று வாதிடலாம். ஆனால் அந்த ஒற்றையாட்சி என்பதற்கு ஒரே இனம். ஒரே மக்கள். ஒரே நாடு. ஒரே மதம் என்ற வரைவிலக்கணம் பொருத்தமாக அமையமாட்டாது. பல இனங்களும் பல்வேறு மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களையும் நாடு கொண்டிருக்கின்றது. ஆகவே பல்லினத்தன்மை பேணப்பட வேண்டியது அவசியம்.  

சிறுபான்மை இன மக்களை ஒரே இனமாக மாற்றுவது என்பது சாத்தியமாகாது அதேபோன்று அனைத்து மக்களும் ஒரே மதத்தைப் பின்பற்றுபவர்களாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.  கடுமையான சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட சீனாவில்கூட இத்தகைய ஓரினத்தன்மையை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் அவதிப்படுகின்றார்கள். மக்களுடைய மத சுதந்திரம், மொழியுரிமை, கலை, கலாசாரப் பண்பாட்டு உரிமைகளை இலகுவில் மாற்றி அமைத்துவிட முடியாது. அவற்றை இலகுவில் தூக்கி எறிந்துவிடலாம் என்பது நடவாத காரியமாகும்.

அதிகாரம் கையில் இருக்கின்றது என்பதற்காக பிடிவாதப் போக்கில் நாட்டை நிர்வகிக்க முடியும் என்றே ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள். இந்தப் பிடிவாதப் போக்கு நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் போகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆண்டான் அடிமைத்தனம் ஆரோக்கியமாகாது

சிறுபான்மை இன மக்களும் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். பாரம்பரிய வரலாற்றுப் பெருமையைக் கொண்ட சிறுபான்மை இன மக்கள் இந்த நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் ஒரு தேசிய இனம் சக தேசிய இன மக்களுக்கு இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ முடியாது. வாழவும் கூடாது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், மனித நாகரிகமும் வளர்ச்சியடைந்துள்ள இந்த நவீன காலத்தில் இத்தகைய ஆண்டான் அடிமைத்தனத்தை நோக்கிய அரசியல் பயணம் ஆரோக்கியமாக இருக்கமாட்டாது.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அந்த மக்களும் அவர்களுடைய அரசியல் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். அந்த நம்பிக்கைகளைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகளே நாட்டில் ஆட்சியாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக்ஷக்கள் அதிகாரத்தில் இருந்தபோதே இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அந்த மக்களை இராணுவமயமான ஒரு சூழலிலேயே வாழ்வதற்கு நிர்ப்பந்தித்திருந்தார்கள்.

அந்த நிர்ப்பந்தம் அவர்கள் எதிபார்த்தவாறு, அந்த மக்கள் மத்தியில் அவர்களுடைய அரசியல் செல்வாக்கை வளரச் செய்யவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வ காணவில்லையே என்ற அதிருப்திக்கே அவர்கள் ஆளாகியிருந்தார்கள்.

அதுமட்டுமன்றி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமது வாழ்க்கையை உரிமையுடன் கூடிய வாழ்க்கையாக மறுசீரமைப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசு வேண்டுமென்றே தவறியிருந்தது என்ற உணர்வுக்கே அவர்கள் ஆளாகியிருந்தார்கள். பிரதான வீதிகளையும் நகரங்களையும் கட்டியெழுப்பிய அன்றைய அரசு அந்த மக்களுடைய மனங்களில் இடம் பிடிக்கத் தவறியிருந்தது.

இந்தத் தவறு எத்தகையது என்பதை 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் ராஜபக்ஷக்களுக்குத் தெளிவாக உணர்த்தி இருந்தார்கள். அந்த முறையுடன் அவர்கள் நிற்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் நான்கு வருட கூட்டாட்சியின் பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்கள் ராஜபக்ஷக்கள் மீது தாங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை அல்லது அரசியல் ரீதியான நல்லெண்ணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்தி இருந்தார்கள். வரப்போகின்ற பொதுத் தேர்தலிலும் அந்த மக்கள் தங்களுடைய மன உணர்வுகளை என்ன என்பதை வாக்குகளின் மூலம் வெளிப்படுத்துவார்கள் எதிர்பார்க்கலாம்.

சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்று நம்புகிறோம் என்று கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். தமிழருக்கு ஒரு தீர்வு கிடைப்பதை, ஜனாதிபதி ராஜபக்ஷவினாலும் தடுக்க முடியாது. எவராலும் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கூற்று அவருடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற அதேவேளை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ராஜபக்ஷக்கள் ஆர்வமற்றிருப்பதையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். இது ஓர் அரசியல் ரீதியாக கருத்தேயன்றி வேறு ஒன்றுமில்லை.

மனமாற்றமும் அணுகுமுறையும்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஆட்சியாளர்கள் நாட்டமில்லாதிருப்பதைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, இந்த விடயத்தில் சர்வதேச அழுத்தம் இருக்கின்றது. சர்வதேசம் இந்த விடயத்தில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதையே அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆனால் சம்பந்தனின் இந்தக் கருத்து ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெருட்டுவதாகவே அரச தரப்பினருக்கு உறைத்திருக்கின்றது. இதனால்தான் இந்த நேர்காணல் குறித்து கருத்து வெளியிட்ட அரச தரப்புப் பேச்சாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்ல விடுதலைப்புலிகளின் பாணியில் மிரட்டி தீர்வு கேட்பதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் என கூறியிருக்கின்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அரவணைத்துச் செல்வதற்கே அரசு விரும்புகின்றது. ஆனால் கூட்டமைப்பு இன்னும் பழைய நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. கூட்டமைப்பினர் தங்களுடைய நிலைப்பாடுகளைக் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகளின் பாணியில் மிரட்டி தீர்வு கேட்பதைக் கைவிட வேண்டும். தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை எப்போது வழங்க வேண்டும் எப்படி வழங்க வேண்டும் என்று அரசுக்குத் தெரியும் என முன்னாள் அமைச்சரும் அரச பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு தேர்தலில் ராஜபக்ஷகள் அமோகமாக வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இந்தத் தேர்தல் வெற்றியிலும் பார்க்க நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி என்ற நாட்டின் அரச தலைவர் பதவி முக்கியமானது. அது முழு நாட்டிற்கும் தலைமை ஏற்று ஆட்சி நடத்துகின்ற பொறுப்பாகும். எனவே, வெற்றிக்குக் காரணமானவர்களை மாத்திரம் கருத்திலும் கவனத்திலும் கொள்வது அந்தப் பதவிக்கும், அதன் மூலமான ஆட்சிக்கும் பொருத்தமாக அமையாது.

நாட்டின் தலைவர் நாட்டின் அதிபர் என்ற வகையில் தேர்தலில் தம்மைவிட்டுப் பிரிந்திருந்த அல்லது விலகியிருந்த மக்களின் மனங்களையும் வென்று அடுத்த தேர்தலில் முழு நாட்டு மக்களினதும் ஆதரவையும் அபிமானத்தையும் பெற முயற்சிப்பதே சிறந்த அரசியல் சாணக்கியமாகும். அதற்கு அரச தரப்பிலேயே அரசியல் ரீதியான மனமாற்றம் ஏற்பட வேண்டும்.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தினால் நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது யுத்தத்தில் அடைந்த வெற்றியின் மூலம் நாடு நிலவழியில் ஒன்றாகி இருக்கின்றது. ஆனால் நாட்டு மக்கள் இன்னும் ஒன்றிணையவில்லை. அதனால் நாடு முழுமையாக ஒருமைப்படவில்லை என்பது கசப்பான உண்மை. இந்தக் கசப்பு நிலைமையை வளரவிடுவதும், அல்லது தொடரவிடுவதும் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. பதினொரு வருடங்கள் கழிந்துவிட்டன. இதற்கிடையில் கொரோனா வைரஸ் என்ற நச்சுக்கிருமி நாட்டை ஆக்கிரமித்து பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இந்தப் பாதிப்புகளில் இருந்து மீண்டு எழுவதற்கு நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் ஏனைய தரப்பினரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே  தவிர்க்க முடியாத இந்தத் தேவையை உணர்ந்து அரசும் அரச தரப்பினரும் தங்களுடைய அணுகுமுறைகளை மாற்றி முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலம் அனைவரையும் சுபிட்சமான ஒரு நிலைமையை நோக்கி நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களையே சார்ந்திருக்கின்றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்