முன்னணி பல்தேசிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஸ்தாபித்துள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனம், அண்மையில் சட்டவிரோதமான முறையில் போலியான தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றமை காரணமாக ஏற்படக்கூடிய  பாதிப்புகள் மற்றும் தாக்கங்கள் என்பன தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

போலிகளிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் அங்கமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முத்தரப்பு கொள்ளளவு கட்டியெழுப்பல் பயிற்சிப்பட்டறையின் முதலாவது அங்கமாக இது அமைந்துள்ளதுடன், பொது மக்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் அமைந்திருந்தன. 

இதற்காக புலமைச்சொத்து உரிமை மீறல்கள் குறித்த விடயங்கள் பற்றி ஆராயும் வகையில் சட்ட அதிகாரிகளுடன் கைகோர்த்து செயலாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போலி வியாபாரங்கள் காரணமாக பெருமளவு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்களில், அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW), சிலோன் டொபாக்கோ கம்பனி (CTC), மைக்குரோசொஃப்ட் மற்றும் மருந்துப்பொருட்கள் துறை ஆகியவற்றுடன் இணைந்து சுதத் பெரேரா அசோசியேட்ஸ், ஸ்ரீ லங்கா பொலிஸ், ஸ்ரீ லங்கா சுங்கத் திணைக்களம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியன இந்த திட்டத்தில் கைகோர்த்திருந்தன. 

இந்த விழிப்புணர்வு செயற்பாடுகள் சட்டபூர்வமான, தேசிய மட்ட, பிராந்திய மட்ட மற்றும் சர்வதேச ரீதியான பிரச்சினைகள், சுங்க பரிசோதனை தொழில்நுட்பங்கள், தவறுகளை மேற்கொள்வோருக்கு சட்டரீதியில் எவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் மற்றும் அவசியமான ஒழுங்கிணைப்பு சேவைகள் போன்றன விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன. 

இந்த செயற்பாடு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரி சபையின், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் திருமதி. சந்திரிகா திலகரட்ன கருத்து தெரிவிக்கையில், போலியான தயாரிப்புகள் காரணமாக சகல பங்காளர்களாலும் ஏற்படக்கூடிய செலவீனங்கள் மற்றும் பாதகமான தாக்கங்கள் காணப்படுகின்றன. 

இவற்றில் வரி இழப்புகள், இதர வருமானங்கள் போன்றன இழக்கப்படுகின்றன. அத்துடன், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதுடன், புத்தாக்கம் மற்றும் முதலீடுகளுக்கு குறைந்தளவு வரவேற்பு, குறைந்தளவு தொழில் வாய்ப்பு போன்றன ஏற்படுகின்றன. 

சர்வதேச ரீதியில் போலித்தயாரிப்புகள் காரணமாக சுமார் 750,000 தொழில்கள் இழக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாம் ஒரு நாடு எனும் வகையில், வலிமையான சிவில் மற்றும் குற்றசட்டங்களை பின்பற்றி, புலமைச்சொத்து உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. 

இதன் மூலமாக எம்மால் புத்தாக்கங்களையும் சிந்தனைகளையும் மேம்படுத்த முடியும், நுகர்வோரை பாதுகாப்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

வறுமை, புலமைச்சொத்து உரிமை விவகாரம் தொடர்பில் விருப்பு வெறுப்பு கலந்த நிலை நுகர்வோரின் நிலைப்பாடு, குற்றவியல் வலையமைப்புகளின் ஈடுபாடு மற்றும் சட்டவிரோதமான பொருட்களை இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருத்தல் போன்ற காரணங்களால் இந்த பிரச்சினை சர்வதேச மட்டத்தில் காணப்படுகிறது. 

வருடாந்தம் சட்டவிரோதமான சிகரட் விற்பனையின் மூலமாக அரசாங்கத்துக்கு ஏற்படும் வருமான இழப்பு சுமார் 2 பில்லியன் ரூபாயாக அமைந்துள்ளது. மேலும், உயர் மட்ட சட்ட விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்கள் சிகரெட் கடத்தலில் ஈடுபட அதிகளவு ஆர்வம் காண்பிக்கின்றன, ஏனெனில் இதில் குறைந்த இடருடன் அதிகளவு வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. இந்தத் துறையில் குற்றமிளைத்தவர் இனங்காணப்பட்டாலும், அவருக்கு மிகவும் குறைந்த மட்டத்தில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன என சிலோன் டொபாக்கோ கம்பனியின் நாட்டுக்கான பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத தயாரிப்புகளின் வியாபார தடுப்பு முகாமையாளர் விங் கொமான்டர் (ஓய்வுபெற்ற) சஞ்ஜய பெர்னான்டோ அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் விநியோகிக்கப்படும்  25%-30%  மருந்துப் பொருட்கள் தரம் குறைந்தனவாக அல்லது போலியானவையாக அமைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது. 

கிளெக்சோஸ்மித்கிளைன் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை செயற்பாடுகளுக்கான சிரேஷ்ட முகாமையாளர் விங் கொமான்டர் (ஓய்வுபெற்ற) மிகார பெரேரா விளக்கமளிக்கையில், பல மருந்துப் பொருட்கள் இரகசியமான முறையில் போலியாக தயாரிக்கப்பட்டு, சந்தைகளில் மிகவும் இலகுவாக அறிமுகம் செய்யப்படுகின்றன. இதற்கு குறித்த தயாரிப்புகளின் தரம் குறித்து பரிசோதிப்பதற்கு போதியளவு உயரதிகாரிகள் இன்மை மற்றும் இலகுவில் விநியோக கட்டமைப்பில் இணைக்கக்கூடிய  வாய்ப்புகள் காணப்படுகின்றமை போன்றன காரணங்களாக அமைந்துள்ளன என குறிப்பிட்டார்.

போலியான கணனி மென்பொருள் பாவனை என்பது மற்றுமொரு பிரதான பிரச்சினையாக அமைந்துள்ளது. அசல் தயாரிப்புகள் விலையில் உயர்வாக அமைந்துள்ளமையால் பெருமளவானோர் போலியான தயாரிப்புகளை நாடுகின்றனர் என மைக்குரோசொஃப்ட் ஸ்ரீ லங்காவின், ஒழுக்கச் செயற்பாடுகள் முகாமையாளர் சட்டத்தரணி அரோமி சில்வா தெரிவித்தார். ஒன்லைன் மூலமாக இடம்பெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் இந்த போலியான மென்பொருட்களின் பாவனை காரணமாக அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த துறைகளைச் சேர்ந்த போலியான மற்றும் தரம் குறைந்த தயாரிப்புகள் போன்றன இலங்கையின் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. 

போலியான வாகன உதிரிப்பாகங்கள் துறையும் வாடிக்கையாளர்களுக்கு போதியளவு விழிப்புணர்வு இன்மை காரணமாக பெருமளவு சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது. குறுங்கால பண சேமிப்புக்காக உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு என்பது அசாதாரணமாக கருதிவிடக்கூடாது என அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் பொது முகாமையாளர் பிரசாந்த வைத்தியரட்ன தெரிவித்தார். 

எந்தவொரு வாடிக்கையாளரும் ஏதேனும் சந்தேகங்களைக் கொண்டிருப்பாரேயானால், எமது நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அவர்களுக்கு உதவிகளை வழங்க தயாராகவுள்ளனர் என்றார்.

சுங்க நுகர்வோர் பாதுகாப்பு அலகின் பதில் பொறுப்பதிகாரி அஷ்ரஃவ் சம்சுதீன் கருத்து தெரிவிக்கையில், 

வருடாந்தம் இலங்கையில் சுமார் 8சதவீதமான போலியான பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. போலித் தயாரிப்புகளின் வியாபாரத்தின் காரணமாக ஏற்படக்கூடிய மறைத்தாக்கங்கள் காரணமாக, இந்த விடயத்தை நாம் பாரிய சட்ட விரோதமான செயலாக கருதி அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து, போலியான தயாரிப்புகளின் வியாபாரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

அனைவரின் கவன ஈர்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் புலமைச்சொத்து உரிமை பேணப்பட வேண்டும். அமெரிக்க வர்த்தக சம்மேளனம் என்பது கடத்தல் வியாபாரங்களையும் சட்ட விரோதமான செயற்பாடுகளை இழப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. சகல ஆர்வமுள்ள பங்காளர்களுடனும் கைகோர்த்து செயற்படுமாறு அமெரிக்க வர்த்தக சம்மேளனம் அழைப்புவிடுத்துள்ளது.