அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட ஐ.தே.க.

31 May, 2020 | 08:12 PM
image

-சத்ரியன்

இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளாக பல தசாப்தங்களாக கோலோச்சி வந்த- ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இது உச்சக்கட்ட சோதனைக் காலம்.

இந்த இரண்டு கட்சிகளும், தான் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்திருக்கின்றன. 

அவ்வப்போது, இந்தக் கட்சிகள் மோசமான தோல்விகளைச் சந்தித்து வந்தாலும், பின்னர் மீண்டெழுந்து ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. இவ்வாறானதொரு வரலாற்றைக் கொண்டிருந்த இந்த இரண்டு கட்சிகளும், இனி ஆட்சிக்கு வர முடியுமா என்ற சந்தேகம் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஆழமாகவே தோன்றியிருக்கிறது.

கடைசியாக இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து, 2015 இல் அமைத்துக்கொண்ட ஆட்சி தான், இந்தக் கட்சிகளின் இறுதியான ஆட்சியாக அமையும் போலத் தெரிகிறது.

இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைத்தது ஒரு வரலாற்று சந்தர்ப்பமாகவே, அப்போது பார்க்கப்பட்டது.

ஆனால் அதுவே இரண்டு கட்சிகளுக்கும் சாபக்கேடாக- அவற்றின் அஸ்தமனமாக மாறி விட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி இப்போது மைத்திரிபால சிறிசேனவும், வேறு சிலருமாக சுருங்கிப் போய் விட்டது, அதன் பெரும்பாலான உறுப்பினர்களையும், பிரமுகர்களையும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குப் பெயர்த்துக் கொண்டு போய் விட்டார்.

அதுபோலவே, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பெரும்பாலான முக்கியஸ்தர்களை அள்ளிக்கொண்டு போய், ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனியான கூட்டணியை உருவாக்கி விட்டார் சஜித் பிரேமதாச.

இப்போது, ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க போன்றவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில், அடுத்து வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு ஆட்சியமைக்கும் சூழல் வாய்க்கும் என்பது பகல் கனவாகவே  இருக்கும்.

மறுபுறத்தில் இந்தக் கட்சிகளில் இருந்து பிரிந்து போனவர்கள் அமைத்துள்ள கட்சிகளின் பலம் என்ன என்று பார்க்க வேண்டியதும் முக்கியம்.

குறிப்பாக, மகிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன, அசுர பலத்துடன் இருக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையாளர்களின் ஏக பிரதிநிதியாக அது மாறியிருக்கிறது.

அதனுடன் சவால் விடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவினாலோ, சஜித் பிரேமதாசவினாலோ முடியாத நிலையே காணப்படுகிறது.

While Ranil Agrees to make Sajith UNP Deputy Leader, Party ...

இரண்டு தரப்புகளும் ஒன்றாக இருந்தபோதே, மகிந்த அணியை வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், இப்போது, தனித்தனியாக வீழ்த்த முனைவது என்பது நடைமுறைச் சாத்தியமான ஒன்றாக இருக்க முடியுமா?

இரண்டு தரப்புகளும், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிடுகின்ற போதும், ஒன்றையொன்று வீழ்த்துவதிலேயே குறியாக இருக்கின்றன.

கடந்த வாரம், இந்த இரண்டு தரப்புகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இருவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள், கவனத்தைப் பெற்றிருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சியில் இப்போது சிறுபான்மையினருக்காக மாத்திரம் பேசுகின்றவர்களும் இல்லை, பௌத்த மதத்துக்கு எதிராக பேசுகின்றவர்களும் இல்லை என்று கூறியிருக்கிறார் ஐ.தே.க.வின் உப தலைவர் ரவி கருணாநாயக்க.

அதுபோலவே, விரைவில் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவைக் கைப்பற்றுவோம், தேர்தலில் ஐ.தே.க. படுதோல்வியடையும் அதற்குப் பின்னர் சிறிகொத்தாவுக்குள் நுழைவோம் என்று கூறியிருக்கிறார் சஜித் தரப்பைச்  சேர்ந்த அஜித் பெரேரா.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரையில், ஆட்சியைப் பிடிப்போம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைப்போம் என்று கூறிக்கொண்டிருந்த ஐ.தே.க.வின் இரண்டு அணிகளும், இப்போது என்ன நிலையில் இருக்கின்றன என்பதை துலாம்பரமாக விளக்குவதற்கு இந்த இருவரினதும் கருத்துக்களே போதுமானவை.

UNF Party Leaders To Meet Again This Evening: Prime Minister ...

சிறிகொத்தாவைக் கைப்பற்றும் கனவுக்குள் தமது இலட்சியத்தை சுருக்கிக் கொண்டிருக்கின்றது சஜித் அணி.

ஐ.தே.க.வுக்குள் இப்போது சிங்கள பௌத்த சிந்தனைக்கு விரோதமானவர்கள் இல்லை என்று கூறி, எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட ஆரம்பித்திருக்கிறது ரணில் தரப்பு.

ஆக, இரண்டு தரப்புகளுமே இப்போது, தமது இலக்கை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கைப்பற்றுவது தான் எந்தவொரு கட்சியினதும் இலட்சியமாக இருக்க வேண்டும்.

ஆனால் சிறிகொத்தாவை கைப்பற்றுவதையே இலக்காக கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு எப்போது ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் வரும் என்று தெரியவில்லை.

அதுபோலவே, ரணில் தரப்பு இப்போது, தங்களைத் தாங்களே தூய்மையான ஐ.தே.க.வினர் என்பதை, விட, தூய்மையான பௌத்த சிங்கள கொள்ளையுடையவர்கள் என்று காட்டிக்கொள்ள முனைகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க.வின் தோல்விக்கு, சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக பெரும்பான்மையின சிங்கள பௌத்தர்களின் பக்கத்தில் இருந்து கட்சி நழுவிச் சென்றதே, முக்கியமான காரணம்,  என்று கூறப்பட்டது.

அத்துடன், பௌத்த மதத்துக்கு எதிராக ஐதேக தலைவர்கள் பலர், வெளியிட்ட கருத்துக்களும் அந்தக் கட்சியின் தோல்விக்கான காரணமாக சொல்லப்பட்டது.

குறிப்பாக மங்கள சமரவீர போன்றவர்கள் பௌத்த மதம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களும், ஐதேகவின் தோல்விக்கு காரணமாக கருதப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் கருத்துக்களை ஐதேக புறக்கணித்தது தவறான மூலோபாயம் என்பதே, பெரும்பாலானோரின் கருத்து.

2015 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளால் வெற்றியைப் பெற்றது போல, 2019 இலும் வெற்றி பெற்று விடலாம் என்று அந்தக் கட்சி கருதியது.

Daily Mirror - Sajith at Katugampola rally

ஆனால், சிங்கள பௌத்த வாக்காளர்கள் அதற்கு மாறாகவே சிந்தித்தனர். அல்லது சிந்திக்கத் தூண்டப்பட்டனர்.

மகிந்த தரப்பின் இந்த தூண்டுதலுக்கு சிங்கள பௌத்த வாக்காளர்கள் இலகுவாக வசப்பட்டனர். அதனால், ஐதேக படுதோல்வி காணும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

சிங்கள மக்கள் அதிகம் வாழும் இடங்களில், ஐதேகவுக்கு தோல்வி ஏற்பட்டாலும், வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் தற்போதைய ஜனாதிபதியை மிகமோசமாக தோற்கடித்திருந்தார் சஜித் பிரேமதாச.

ஆனாலும், ஐதேக உபதலைவர் ரவி கருணாநாயக்க தற்போது கூறுகின்ற கருத்து, அந்த வாக்காளர்களுக்கு செய்யப்படும் துரோகம் என்றே கூற வேண்டும்.

ஐ.தே.க.வில் இப்போது சிறுபான்மையினருக்காக மட்டும் பேசுபவர்கள் இல்லை என்று அவர் கூறியதன் மூலம், இப்போது சிங்கள பௌத்தர்களுக்காக பேசுகின்றவர்கள் தான் கட்சியில் இருக்கிறார்கள் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

அதுபோலத் தான், பௌத்த மதத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தி அவர், சிங்கள பௌத்த வாக்குகளை கவருவதற்கும் எத்தனிக்கிறார்.

இது ஐதேகவும் மூட, பொதுஜன பெரமுனவின் போட்டியைச் சமாளிக்க , இனவாதத்தை கையில் எடுக்கத் தயாராகி விட்டதோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது,

இனவாதத்தின் மூலம் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று மகிந்த – கோத்தா தரப்பு தெளிவாகப் புரிய வைத்துள்ள நிலையில், ஐதேகவும் அத்தகையதொரு வழியைத் தேட ஆரம்பித்திருப்பது ஆச்சரியமில்லை.

ஆனால், காலம் தாழ்த்தி சிங்கள பௌத்தர்களின் பக்கம் சாய முனையும் ஐதேகவை நம்புவதற்கு சிங்கள மக்கள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

அதுபோலவே, தம்மை நட்டாற்றில் விட்டு நழுவ முனையும்,? ஐதேகவை, சிறுபான்மையினரும் நம்பத் தயாராக இல்லை.

ஆக, அரசனையும் கைவிட்டு புருசனையும் கைவிட்டு நிற்கும் நிலையை நோக்கித் தான், ஐதேக தள்ளப்பட்டுக்  கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54