படு­கொலை செய்­யப்­பட்ட புங்­கு­டு­தீவு மாண­வி­யான வித்­தியா வாழ்ந்த கிராம சேவகர் பிரி­வி­லுள்ள குடும்­பங்­களின் விப­ரங்கள் தொடர்­பான பூரண அறிக்­கையை நீதி­மன்றில் சமர்ப்­பிக்­க­வேண்டும் என ஊர்­கா­வற்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்­த­ர­விட்டார். அத்­துடன் குறித்த வழக்கு விசா­ரணையை எதிர்­வரும் 13ஆம் திக­தி­வரை நீதிவான் ஒத்­தி­வைத்தார்.

இதே­வேளை வித்­தி­யாவின் படு­கொலை தொடர்பில் தற்­போது முக்­கிய சாட்­சிகள் வெளி­வரத் தொடங்­கி­யுள்­ள­தாக குறித்த வழக்கை விசா­ரணை செய்­து­வரும் குற்­றப்­பு­ல­னாய்வு கூட்­டுக்­கொள்ளை பிரிவு பொறுப்­ப­தி­காரி ஐ.பி.நிஷாந்த சில்வா மன்றில் தெரி­வித்தார்.

குறித்த மாண­வியின் வழக்கு விசா­ரணை நேற்­றைய தினம் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்­காக எடுத்­து­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன்­போதே நீதிவான் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார்.

நீதிவான் மேலும் குறிப்­பி­டு­கையில்;

குறித்த மாணவி வாழ்ந்த கிராம சேவகர் பிரிவில் படு­கொலைச் சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் வாழ்ந்த குடும்­பங்­களின் விப­ரங்கள் தொடர்­பான பூரண அறிக்­கை­யையும், இச் சம்­பவம் இடம்­பெற்­றதன் பின்னர் இப் பகு­தியில் வசித்து வரும் குடும்­பங்கள் தொடர்­பான பூரண அறிக்­கை­யையும், சமர்ப்­பிக்­க­வேண்டும். அத்­துடன் இச் சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் இப் பிர­தே­சத்தில் வசித்து சம்­பவம் இடம்­பெற்­றதன் பின்னர் வேறு இடங்­க­ளுக்கு இடம்­மாறிச் சென்­ற­வர்கள் தொடர்­பான பூரண அறிக்­கை­யையும் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­க­வேண்டும்.

இச்­சம்­பவம் இடம்­பெற்ற பின்னர் அங்கு வாழ்ந்த குடும்­பங்கள் தொடர்­பா­கவோ அல்­லது அங்­கி­ருந்து இடம்­மாறிச் சென்­ற­வர்கள் தொடர்­பா­கவோ ஆவ­ணங்கள் அல்­லது அறிக்­கை­களை குறித்த பகு­திக்­கான கிராம சேவகர், பிர­தேச செய­ல­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தால் அவ்­அ­றிக்­கை­களை பிர­தேச செயலர் அடுத்த வழக்கு தவ­ணைக்கு முன்­ன­தாக நீதி­மன்றில் ஒப்­படைக் கவேண்டும்.

இவ்­வ­ழக்கு விசா­ரணை தொடர்­பாக சம்­பவம் இடம்­பெற்ற பகு­தியை சேர்ந்த அல்­லது இவ் வழக்கு தொடர்­பாக உண்­மை­ய­றிந்­த­வர்கள் எந்­த­ள­விற்கு முன்­வந்து இப் புலன்­வி­சா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கி­றார்­களோ அந்­த­ள­விற்கு விசா­ர­ணை­களை விரை­வாக நடத்த முடியும்.

மேலும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் இவ் விசா­ர­ணையை மிகுந்த சிர­மத்­திற்கு மத்­தி­யிலும் மேற்­கொண்டு வரு­கின்­றனர். எனவே சம்­பவம் தொடர்­பாக உண்­மை­ய­றிந்­த­வர்கள் முன்வந்து வழக்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங் கவேண்டும்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றவாளியாக கருதமுடியாது என்றார்.