இந்திய - நேபாள முட்டுக்கட்டை நிலையின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்...

Published By: J.G.Stephan

30 May, 2020 | 10:38 AM
image

உலகின் மிகவும் நெருங்கிய அயல்நாடுகளான இந்தியாவும் நேபாளமும் தேசவரைபடம் சம்பந்தப்பட்டதும் இராஜதந்திர ரீதியிலானதுமான முட்டுக்கட்டைநிலையொன்றுக்குள் சிக்குப்பட்டிருக்கின்றன. இதை ஓரளவுக்கு அரசியல் முட்டுக்கட்டைநிலை என்றும் கூறலாம். இந்தியாவுடனும் சீனாவுடனுமான நேபாளத்தின் மேற்கு முச்சந்திக்கு அண்மையாக காலாபாணி என்று அழைக்கப்படுகின்ற சுமார் 330 சதுர கிலோமீற்றர் நிப்பகுதியின் உடைமை தொடர்பானதே இந்த தகராறு.

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ஒரு யூனியன் பிரதேசமாக அந்தஸ்து மாற்றம் செய்யப்பட்டதை காட்டுவதற்கு புதிய வரைபடமொன்றை இந்தியா 2019 நவம்பரில் வெளியிட்டபோது தகராறு மூண்டது. அந்த வரைபடத்தில் காலாபாணி பகுதி இந்தியாவுக்குள் இருப்பதாக காண்பிக்கப்பட்டதன் காரணத்தினால் நேபாளம் ஆட்சேபம் தெரிவித்தது. இந்திய வரைபடங்கள் எப்போதுமே காலாபாணியை அவ்வாறே காண்பித்திருக்கின்றன. எனவே, வரைபடத்தில் எந்த மாற்றமும்  இருக்கவில்லை.

இந்தியாவின் பாதுகாப்பு விநியோக மார்க்கங்களை பலப்படுத்துவதையும் திபெத்தில் உள்ள கைலாஷ் மான்சரோவருக்கு யாத்திரிகர்கள் இடர்பாடுகள் இல்லாமல் செல்வதற்கு வசதிசெய்வதையும் நோக்கமாகக்கொண்டு அமைக்கப்பட்ட தார்ஷுலாவிலிருந்து லிபுலேக கணவாய் வரையான வீதி திறந்துவைக்கப்பட்டதையும் நேபாளம் அடுத்ததாக ஆட்சேபித்தது. இந்த வீதி தனது சுயாதிபத்தியத்தை அத்துமீறி அமைக்கப்பட்டதாக நேபாளம் கூறியது. வீதி ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன, நேபாள பாராளுமன்றமும் கொந்தளித்தது, இப்போது காலாபாணி தனது பிராந்தியம் எனக் காண்பிக்கும் வரைபடத்தையும் நேபாளம் வெளியிட்டிருக்கிறது.

காலாபாணி இந்தியாவுக்குச் சொந்தமானது என்று  திரும்பத்திரும்ப கூறியிருக்கும் புதுடில்லி கொரோனாவைரஸ் நோய் ( கொவிட் -19) நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் ஊடாக தகராறுக்கு தீர்வுகாணத் தயாராயிருப்பதாகவும் அறிவித்தது.

நேபாளத்தின் உரிமைக்கோரிக்கைகள்  பிரிட்டிஷாருடன் 1816 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்ட சுகோலி உடன்படிக்கையை ( Sugauli Treaty ) அடிப்படையாகக்கொண்டவையே.அந்த உடன்படிக்கையில் நேபாளம் "  காளி ஆற்றுக்கு மேற்கேயுள்ள நாடுகளுடனான சகல உரிமைக்கோரிக்கைகளையும்  அல்லது தொடர்புகளையும் துறந்துவிட்டது".  ஆற்றுக்கு கிழக்கேயுள்ள நிலப்பகுதி நேபாளத்துடன் தொடர்ந்து இருந்தது. இது சில பழைய வருவாய்த்துறை பதிவுகளினாலும்  வர்த்தமானி அறிவித்தல்களினாலும் வலுப்படுத்தப்படுகிறது.

இந்த நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்கிறது.ஆனால், அதன் உரிமைக்கோரிக்கை  காளி ஆற்றையும் அதன் தோற்றுவாயையும் அடையாளப்படுத்துவது தொடர்பில் உடன்படிக்கையில்  காணப்படுகின்ற தெளிவின்மையில் இருந்தே எழுகிறது.இந்த ஆறு லிபுலேக்கில் ஆரம்பமாகி பிறகு ஏனைய கிளை ஆறுகளுடனும் நீரோடைகளுடனும் கலந்திணைந்து மகாகாளியாகிறது என்பதே இந்திய நிலைப்பாடு.ஆனால், காளி லிம்பியாதுரவில் ஆரம்பமாகிறது என்றும் லிபுலேக்கில் இருந்து ஆரம்பமாகிற நீரோடை லிபுகோலா என்று அழைக்கப்படுகிறது என்றும் நேபாளம் வாதாடுகிறது.இதனாலேயே தகராறு.இந்த  இரு நீரோடைகளுக்கும் இடையிலான பகுதியே காலாபாணியாகும்.நேபாளத்தை தெராய் பிராந்தியத்தில் (தென்பகுதி ) உள்வாங்குவதற்காக உடன்படிக்கை சில திருத்தங்களுக்கு உள்ளானது ; இறுதியாக அது 1860 நவம்பர் 15 பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

பிரிட்டிஷாரால் 1816 -- 1860 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட வரைபடங்கள் பொதுவில் நேபாளத்தின் நிலைப்பாட்டுக்கு அனுகூலமானவையாகவே இருந்தன.ஆனால், அதற்கு பிறகு வெளியிடப்பட்ட வரைபடங்கள் இந்திய நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவையாக இருந்தன. உகந்த நிலஅளவைகள் ஊடாக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை மாற்றியிருக்கக்கூடியதும் அல்லது திபெத்தை சென்றடைவதற்கு லிபுலேக் கணவாயை பயன்படுத்துவதில் பரந்தளவிலான மூலோபாய நலன்களுக்கும் வாணிப நலன்களுக்கும் உதவக்கூடியதாக சாதுரியமான முறையில்  இந்த நிலைப்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானித்திருக்கக்கூடியதும் சாத்தியமே. காலாபாணிக்கும் லிபுலேக்கிற்குமான நுழைவுரிமை பிரிட்டிஷாரால் சுதந்திர இந்தியாவிடம் கையளிக்கப்பட்டது.

 அத்துமீறலைச் செய்ததாக இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவது ஆதாரமற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு வெகுமுன்னதாக அல்லது குர்க்கா மன்னர்கள் குமாவோன் மற்றும் கார்வால் பிராந்தியங்களை இணைத்து பின்னர் சுகோலி உடன்படிக்கையி்ன் கீழ் விட்டுக்கொடுப்பதற்கு முனனதாக, கைலாஷ் மான்சரோவருக்கான யாத்திரைக்காக இந்த மார்க்கத்தை இந்தியர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.இந்த மார்க்கம் இந்தியாவுக்கு ஆழமான ஆன்மீக மற்றும் பண்பாட்டு நாகரிக முக்கியத்துவம் உடையதாகும்.லிபுலேக்கை சீனா 1954 சமாதான சகவாழ்வு உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுடனான கலாசார மற்றும்  வர்த்தக இடைத்தரிப்பு மையங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது.பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டில் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையொன்றிலும் இது வலியுறுத்திக் கூறப்பட்டது.

இந்தியாவின் நிலைப்பாட்டை சுமார் 150 வருடங்களாக நேபாளம் ஏற்றுக்கொண்டிருந்தது.காலாபாணி, லிம்பியதுர மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகள் இந்தியாவுக்குள் இருப்பதாக காண்பிக்கும் இந்திய வரைபடங்களை நேபாளம் பயன்படுத்தியுமிருக்கிறது.1980 களில் இதற்கு ஆட்சேபங்கள் கிளப்பப்பட்டன.ஆனால், முடியாட்சிகள் அவற்றை அலட்சியம் செய்தன.நீண்டகாலமாக தீர்த்துவைக்கப்படாமல் இருந்துவரும்  பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக காலாபாணி உட்பட இரு பகுதிகளைத் தவிர எல்லையின் முழூ நீளத்தையும்்இரு நாடுகளுமே அளவீடு செய்தன.இந்த பிரச்சினைகள் இராஜந்திர பேச்சுவார்த்தைகளின் மூலமாக தீர்த்துவைக்கப்படும் என்று பரஸபரம் இணங்கிக்கொள்ளப்பட்டது.

எனவே, என்ன காரணத்துக்காக காலாபாணி பிரச்சினை தொடர்பில் நேபாள அரசாங்கம் இப்போது நெருக்குதலைக் கொடுக்கிறது? பிரதமர் கே.பி.ஒலீ ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தோன்றியிருக்கும் அதிகாரச்சண்டை உட்பட பாரதூரமான உள்ளக  எதிர்ப்புக்கு தற்சமயம் முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது.அவரது ஆட்சிமுறையின் தோல்வியும் வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையுமே இந்த எதிர்ப்புக்கு பெருமளவில் காரணமாகும்.

 அரசியலமைப்பு வரைவு பிரச்சினையில் இந்தியா செய்த தவறான தலையீடு மற்றும் பொருளாதார பலவந்தப்படுத்தல்களுக்கு எதிராக போராடியதன் மூலமாக 2015 ஆம் ஆண்டில் இருந்து தனது தேசியவாத பிரதிமை யை ஓலீ வலுப்படுத்திவந்திருக்கிறார்.காலாபாணி தொடர்பில்  இந்தியாவுடன்  ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை நிலை, புதிய அரசியல் வாழ்வொன்றை தனக்கு கொடுக்கும்.என்று அவர் நம்புகிறார்.

காலாபாணியில் இருந்து இந்தியாவை வெளியேற்றுவதற்கு சீனாவினால் நேபாளம் தூண்டப்படுகின்றது என்று இந்தியாவில் இராஜதந்திர சமூகம் அஞ்சுகிறது. பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுகள் நிறுவனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் இந்திய இராணுவ தளபதி என்.எம்.நவ்ரானே மறைமுகமாக  குறிப்பிட்டதை இங்கு நினைவுபடுத்தலாம். அது 1954 ஆம் ஆண்டிலும் 2015 ஆம் ஆண்டிலும் இந்திய நிலைப்பாட்டுக்கு சீனா வழங்கிய அங்கீகாரத்துடன் வெளிப்படையாகவே முரண்படுகிறது.ஆனால், இராஜதந்திரத்தில் சீனா நேர்மையாக நடந்துகொள்வது அரிது.மூலோபாய அடிப்படையில் அமெரிக்காவுடனான   இந்தியாவின் நெருக்கம் அதிகரிப்பது குறித்து சீனா அதிருப்தியடைந்திருக்கிறது.எல்லையோரமாக இந்தியாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை தரமுயர்த்தும் திட்டங்களையும் பெய்ஜிங் ஆட்சேபித்திருக்கிறது.தார்ஷுலா - லிபுலேக் வீதி அத்தகைய ஒரு திட்டமாகும்.

 இந்தியாவுக்கு தொந்தரவைக் கொடுப்பதும் புதுடில்லியில் இருந்து காத்மாண்டுவை அந்நியப்படுத்துவதும் சீனாவின் பரந்துபட்ட நோக்கத்துக்கு உதவும்.இந்த பின்புலத்திலேயே , நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐக்கியத்தை பேணுவதிலும் பிரதமர் ஒலீயின் ஆட்சியை பாதுகாப்பதிலும் சீனா காட்டும்  தீவிர ஈடுபாட்டை நோக்கவேண்டும்.

முட்டுக்கட்டை நிலையை நீடிக்கவிடுவது நேபாளத்தினதோ அல்லது இந்தியாவினதோ நலன்களுக்கு நல்லதல்ல. மூன்றாம் தரப்புகள் அவற்றின் அனுகூலத்துக்காக அதை பயன்படுத்திக்கொள்ளும்.இந்தியாவும் நேபாளமும் அவற்றின் பரஸ்பர நலன்களையும் அக்கறைகளையும் கருத்திற்கொண்டு, நிலைமைக்கு தக்கபடி பரஸபர விட்டுக்கொடுப்பின் அடிப்படையிலான இராஜதந்திரத்தின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது அவசியம்.

-எஸ்.டி.முனி-
 (எஸ்.டி.முனி புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கைகள் பிரிவின் தகைசார் பேராசிரியராவார் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45