சோதனைக் களமாகமாறியுள்ள இயல்பு நிலை

28 May, 2020 | 08:19 PM
image

பி.மாணிக்கவாசகம்

இக்கட்டான நிலைமையில் உள்ள நாடு, கொரோனா வைரஸ், பொருளாதாரம், அரசியல், தேர்தல் என பலமுனை சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றது. கடினப் பாதையொன்றின் ஊடாகவே இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும் என்று நிலைமைகள் கோடி காட்டுகின்றன.

கொரோனா நோய்த்தொற்று சமூகத் தொற்றாக மாறாத வகையில் தடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு சாதனை என்றே கூற வேண்டும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலக சுகாதார நிறுவனமும் கூட, இலங்கை அரசு, கொரோனாவை சிறப்பாகக் கையாண்டிருப்பதாகவே குறிப்பிட்டிருக்கின்றது.

தேசிய முடக்கமும் ஊரடங்கு உத்தரவும் நடைமுறையில் இருந்தவரையில் எல்லாமே ஓரளவு சரியாக இருந்தாலும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, இயல்பு நிலைமைக்குத் திரும்பத் தொடங்கியிருக்கின்ற நிலைமையை ஒரு சோதனைக்களமாகவே அதிகாரிகள் நோக்கியுள்ளனர்.

சுகாதார நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியது அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள். முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, இடைவெளியைப் பேணுவது உள்ளிட்ட முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்போதும் எல்லா இடங்களிலும் கைக்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ள போதிலும், எந்த இடத்திலும் யாரோ ஒருவரிடம் இருந்தோ அல்லது பலரிடம் இருந்தோ இந்த நோய்க்கிருமி பரவக்கூடிய நிலைமை உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் அடிக்கடி அறிவுறுத்திய வண்ணம் இருக்கின்றார்கள்.

சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த முன்னெச்சரிக்கையையும் அறிவுறுத்தல்களையும் மக்கள் தீவிரமாகக் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம். அது தனிமனிதப் பொறுப்பு மட்டுமல்ல. சமூகப் பொறுப்புமாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ள தேசியப் பொறுப்பாகவும் அதனைக் குறிப்பிட முடியும்.

தேசிய இடர் - ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்

நாட்டு மக்களுக்கு மட்டுமே இந்தப் பாரிய பொறுப்பு இருப்பதாகக் கூறி, ஒதுங்கிவிட முடியாது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. உற்பத்தி முயற்சிகள், பொருளாதார வருவாய்த்துறைகள் என்பனவும் செயற்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது.

தொழில்துறை உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள், வருவாய்த்துறை சார்ந்தவர்கள் இரண்டு மாத தேசிய முடக்கம் காரணமாகத் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அவற்றில் பணியாள்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும்கூட ஒரு நடவடிக்கையாக இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. இதனைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்த முயற்சிகள் ஊழியர்கள், பணியாளர்கள், தொழிலாளர்களின் கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பாதிக்கும் வகையில் அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அது மட்டுமன்றி, தமது தொழில் முயற்சியின் ஊற்றுக்கண்ணாக உள்ள ஊழியர்கள், பணியாளர்கள், தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை சீராக வழங்க வேண்டும். ஏற்கனவே ஏற்பட்டுள்ள நட்டத்தைக் காரணம் காட்டி அவர்களுடைய ஊதியத்தில் கைவைக்க முற்படக் கூடாது. அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முற்படக் கூடாது. கூடிய அளவில் அவர்கள் அனைவரும் தொழில்வாய்ப்பு பெற்றிபருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கூடிய நேரம் அவர்களைப் பணிகளில் அமர்த்தி அவர்களுடைய உழைப்பைச் சுரண்டுவதற்கும் முயற்சிக்கக் கூடாது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று என்ற தேசிய இடர் காரணமாக அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்து செயற்பட வேண்டிய கட்டாய நிலைமைக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.

தொழில்துறைகளைப் போலவே, கொரோனா வைரஸினால் அரசியலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அரசியலைப் பொறுத்த மட்டில் பாதிப்பு என்பதிலும் பார்க்க, அரசியல் நலிவடைந்திருக்கின்றது, கொரோனாவினால் நசுக்கப்பட்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். அவ்வாறு குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக அமையாது.

ஏனெனில் அரசியல் நிலைமைகள் அந்த அளவுக்கு நாட்டில் மோசமடைந்திருக்கின்றன. கொரோனா நாட்டில் காலடி எடுத்து வைத்த நேரத்தில்தான் பொதுத் தேர்தலுக்கான பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. தேர்தலுக்குத் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுக் கொண்டிருந்தன.

கொரோனா வைரஸ் தொற்றிப்பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசிய முடக்க நிலைமையும் அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் நோயிடர் சூழலில் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் போனது. தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் - குறிப்பாக தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுத்தால் எல்லோரையும் பற்றிப் பிடித்து உயிர்ப்பலி கொள்வேன் என்று அசரீரி முறையில் கொரோனா அச்சுறுத்தியது.

அரசியலை உலுப்பிக் கொண்டிருக்கின்றது

அந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிய வேண்டிய சூழலில் தேர்தல் திணைக்களம் தேர்தல் திகதியை முதலில் காலவரையறையின்றி பின்போட்;டது. தேர்தலை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் அழுத்தம் காரணமாக ஜுன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

அந்தத் திகதியிலும் தேர்தலை நடத்த முடியாத சூழலையே கொரோனா ஏற்படுத்தி உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் இல்லையென்று சுகாதாரத் துறையினர் அறிவித்த பின்னர் ஏழு வாரங்கள் கழிந்த பின்பே தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

மறுபுறத்தில் கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதனால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி, அந்த நோயிடரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகளில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தின.

அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது. கலைக்கப்பட்டதனால் இறந்துபோன நாடாளுமன்றத்திற்கு உயிரூட்ட முடியாது என்று திட்டவட்டமாக அவர் அறிவித்துவிட்டார்.

எதிர்க்கட்சியினர் விடுவதாக இல்லை. கலைக்கப்பட்டதனால் நாடாளுமன்றம் இறந்துவிட்டது எனக் கூற முடியாது. பொதுத் தேர்தலின் மூலம் 2015 ஆம் ஆண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்திற்கு செப்டம்பர் மாதம் வரையில் பதவிக்காலம் இருக்கின்றது. எனவே இடையில் அதனைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எடுத்த நடவடிக்கை இடம்பெறவில்லை. எனவே நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிரணியினர் உச்ச நீதிமன்றத்திடம் நியாயம் கேட்டுள்ளார்கள்.

ஜனாதிபிதக்கே உரிய, தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரத்தை, தேர்தல் ஆணைக்குழு தனது கையில் எடுத்து நோயிடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜுன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முற்பட்டிருப்பது அடிப்படை உரிமை மீறல் என்று குறிப்பிட்டு அதனைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

ஜுன் 20 ஆம் திகதியும் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளதையடுத்து, தேர்தலை நடத்துவதற்குரிய திகதியைத் திட்டவடடமாகத் தீர்மானிக்க முடியாத சூழலுக்குள் தேர்தல் திணைக்களம் தள்ளப்பட்டிருக்கின்றது.

தேர்தலை நடத்துவது பற்றிய விடயம் இவ்வாறு சிக்கலுக்குள்ளே தள்ளப்பட்டு இழுபறி நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதா இல்லையா என்பது குறித்தும், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியுமா இல்லையா என்பது குறித்தும் நீதிமன்றம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. அது ஒரு சிக்கல்கள் மிகுந்த அரசியலமைப்பு விவகாரமாக உருவெடுத்து நாட்டின் அரசியலை உலுப்பிக் கொண்டிருக்கின்றது.

மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமைகள்

இவ்வளவுக்கும் கொரோனா வைரஸ் என்ற நச்சுக்கிருமியே காரணம். மனிதரை அசுர வேகத்தில் தொற்றிப் பிடித்து, வகை தொகையின்றி உயிர்களைக் காவு கொள்கின்ற இந்த நச்சு வைரஸ் அரசியல், பொருளாதாரம், சமூக உறவு நிலை, தனிமனித உறவு நிலை என அது ஊடுருவாத இடமே இல்லை எனலாம்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சூழலில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோயிடரினால் அசாட்சியின் செயற்பாடுகள் கேள்விக்கு உள்ளாகி இருக்கின்றன. மூன்று மாத காலப்பகுதிக்குள் தேர்தi நடத்தி புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்துவிட வேண்டும் என்ற தேர்தல் சட்டத்திற்கமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

ஆனால் அந்த மூன்ற மாதங்களுக்குள் தேர்லை நடத்த முடியாத ஒரு இக்கட்டான சூழலை கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைகின்ற செப்டம்பர் மாதத்தில்கூட தேர்தலை நடத்த முடியுமா என்ற சந்தேகக் கேள்வி எழுப்பப்படுகின்ற அளவில் கொரோனாவின் தாக்கம் வலிமை பெற்றிருக்கின்றது.

தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய நாடாளுமன்றமே கூட வேண்டும். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவே முடியாது என்பது நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியின் இறுக்கமான அரசியல் நிலைப்பாடு.

நாடாளுமன்றத்தை மூன்று மாதங்களுக்கு மேல் செயலிழந்த நிலையில் வைத்திருக்க முடியாது. ஏனெனில் அரச செலவினங்களுக்கான நிதியைக் கையாள்வதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற இறுக்கமான, தவிர்க்க முடியாத அரசியல் ரீதியான நிபந்தனை உண்டு.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் திறைசேரியில் இருந்து ஜனாதிபதி நிதியைப் பெறுவாரேயானால், அது அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிய செயற்பாடாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் நோயிடரினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டதனால் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி தவிக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு அவசியம்.

வருவாய்த்துறைகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அரசு பெற்றுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு உரிய தவணையில் கடன் தொகைகளைச்செலுத்த முடியாத நிலைமைக்கு நாடு ஆளாகியிருக்கின்றது. இந்தப் பொருளாதார ரீதியான பாதிப்பு என்பது கொரோனா வைரஸினால்; ஏற்பட்டதல்ல.

கொரோனா வைரஸ் தொற்றிப் பரவுவதற்கு முன்பே நாட்டின் பொருளாதார நிலைமை ஆரோக்கியமாக இருக்கவில்லை. பல்வேறு தேவைகளுக்காகப் பிற நாடுகளிடம் பெற்ற கடன்களை உரிய தவணையில் செலுத்துவதில் சிக்கல்களை நாடு எதிர் கொண்டிருந்தது. அந்த சிக்கல்களைக் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு அந்த நிலைமைகளை மேலும் மோசமாக்கி உள்ளது.

பொருளாதாரம் புதிதாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும்

நாட்டின் பொருளாதார நிலைமைகளை அரசாங்கம் மக்களுக்குத் தெரியாமல் மறைக்கின்றது என்பது முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சியின் குற்றச்சாட்டாகும். நாடு கடன்களில் மூழ்கிவிடுகின்ற அபாயகரமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த கடன்தொகை தேசிய உற்பத்தியில்  நூற்றுக்கு 87 வீதமாக இருந்தது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அது 93 வீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டு 2021 இல் அது நூற்றுக்கு நூறு வீதமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை 2023 ஆம் ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்தொகை ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கக் கூடும். இந்த வருடத்தில் மாத்திரம் 300 கோடி அமெரிக்க டொலரைக் கடனாகச் செலுத்த வேண்டி உள்ளது. இந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் நாளொன்றிற்குள் மாத்திரம் 100 கோடி அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டி இருக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க, பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துகின்ற நாட்டின் நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மையானவையா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வில்லை. இத்தகைய பாரதூரமான நிலைமைகளை நாட்டு மக்களிடம் இருந்து ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மறைத்திருக்கின்றது. உண்மையான நிலைமைகளை வெளிப்படுத்தாமல் நாட்டு மக்களை இருளில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமாகிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் தவறான வழியில் வழிநடத்த முற்பட்டிரக்கின்றனர் என்ற ரீதியில் அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆணிவேராக அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைத்துறை மற்றும் உல்லாசப் பயணத்துறை என்பவற்றில் இருந்து உடனடியாக வருமானத்தைப் பெற முடியாத சூழல் உருவாகி இருக்கின்றது. ஆடைத்தொழிற்சாலைகளின் உற்பத்தியை ஏற்றுமதி செய்வதற்கான நிலைமையை கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டிருக்கின்றது.

ஆடைத்தொழிலில் இலங்கைக்கு வருமானத்தை அளித்து வந்த நாடுகள் கொரோனா நோயிடரினால் பாதிக்கப்பட்டுள்ளதனால், .ஏற்றுமதித்துறை ஸ்தம்பிதமடைந்திருக்கின்றது. அதேபோன்று அந்நிய செலவாணிக்கு ஆதாரமான உல்லாசப் பயணத்துறையும் இப்போதைக்குத் தலையெடுக்கமாட்டாது. ஏனெனில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உல்லாசப் பயணிகள் இப்போதைக்கு இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

இது என்ற விடயங்களைத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியகட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நிதி முகாமைத்துவ சட்டத்துக்கமைய  நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் நிதி நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரியுள்ளார்.

நிதி நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டு, அதன் அடிப்படையில் புதிய  பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

என்ன செய்யப் போகின்றது?

நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்களும் எச்சரிக்கைத் தொனியும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு நடவடிக்கையாகக் கருதப்படக் கூடியவை அல்ல. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் ரீதியானதொரு கோரிக்கையாகக் குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்ற அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பளிக்கப் போகின்றது என்று தெரியவில்லை.

ஆனால் கொரோனா வைரஸ் நோயிடர் அச்சமில்லாத நிலைமையில் விரைவில் தீர்ந்துவிடும் என்று கூற முடியாதுள்ளது என்பதே சுகாதாரத்துறையினருடைய கருத்து. அதாவது நாடு கொரோனா வைரஸுடன் வாழ வேண்டிய நிலைமையே நீடிக்கப் போகின்றது என்பது அவர்களுடைய கருத்தின் உட்கிடக்கை.

அரசாங்கத்தின் நிதியைக் கையாள்வதற்கு ஜனாதிபதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே உள்ளன. நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அதற்கு அவசியம். மீள் நிகழ்கின்ற சம்பளக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அராசங்கத்தின் செலவினங்களுக்கு என்ன செய்வது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கின்றது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடன் வாங்கித்தான் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அவல நிலைமைக்கு அரசாங்கம் ஆளாகியிருக்கின்றது. கொரோனா நோயிடர் சூழலில் ஆயிரத்தைநூறு ரூபா பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முண்டியடித்து உயிர்விட வேண்டிய நிலைமைக்கே நாட்டில் வறிய குடும்பங்களும் வசதியற்ற குடும்பங்களும் ஆளாகி இருக்கின்றன.

பெற்ற கடன்களை தவணை தவறாமல் எப்படி செலுத்துவது என்பதற்கு வழிதெரியாத நிலைமைக்கு அரசாங்கம் ஆளாகியிருக்கின்றது. நாடாளுமன்றம் கலைக்கபட்டிருப்பதனால் நிதித்தேவைகளைக் கையாள்வதற்குரிய அதிகாரமற்ற நிலைமைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டிருக்கின்றார். ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்தும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும் இந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைகின்ற செப்டம்பர் மாதத்திலேனும் தேர்தலை நடத்த முடியுமா என்பது தெரியவில்லை.

அரசாங்கத்தின் முன்னால் இதுபோன்ற பிரச்சினைகள் எரியும் பிரச்சினைகளாக எழுந்து நிற்கின்றன. இவற்றுக்குத் தீர்வு காண்பதற்குக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த வகையில் நிலைமைகளுக்கு முகம் கொடுக்கத்தக்க வகையில் புதிய சட்டங்களை உருவாக்கிச் செயற்பட வேண்டியது அவசியம்.

இதனை செய்வதற்கு அரசாங்கம் முன்வருமா அல்லது 69 லட்சம் மக்களுடைய வாக்குகளின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு உரிய நிறைவேற்று அதிகாரத்தையும் ஆட்சி உரிமையையும் பெற்றிருக்கின்றோம். ஆகவே கொரோனா வைரஸ் நோயை எதிர்த்து அரசாங்கம் என்ற வகையில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பே இல்லாமல் தனித்துச் செயற்பட்டதைப் போன்று ஏனைய எரியும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துத் தீர்வு காண்போம் என்று வீம்புக்குக் கத்தியை விழுங்கியதைப் போன்று செயற்படுமா?

என்ன செய்யப் போகின்றது?  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04