'வறுமை கொரோனாவை விட கொடுமையானது : மக்களுக்கான தீர்வுகள் எவை?

26 May, 2020 | 12:18 PM
image

- எம்.டி. லூசியஸ்

'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது" வறுமையின் கொடூரத்தை வள்ளுவர் அன்றே அழகாக கூறிவிட்டார்.

ஒருவனால் நெருப்பில் கூட கண் அயர்ந்து உறங்க முடியும். ஆனால் அவனை வறுமை சூழ்ந்துகொண்டால், எந்த வகையிலும் அவனால் கண்மூடி உறங்க முடியாது என்பதே இந்த குறளின் பொருளாகும்.

அந்தளவுக்கு வறுமை என்பது மிக கொடூரமானதாகும். உலகில் ஏற்கனவே எண்ணிலடங்காதவர்கள் வறுமையால் செத்து மடிந்து விட்டார்கள். 

ஆனால் தற்போது உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்ற கொரோனா என்ற அரக்கனின் கொடூரத்தால் பல இலட்சம் உயிர்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி உண்மையை பலரும் அறியாமல் உள்ளனர்.

இந்நிலைமை எதிர்காலத்தில் மேலும் தீவிரமாக மாறி மனிதன் உயிர்வாழ்வதற்கான உரிமையை கேள்விக்கு உட்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

அந்த வகையில் இலங்கை மக்களும் இதற்கு விதி விலக்கானவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தட்டி தடுமாறி அபிவிருத்தியில் முன்னேற்றுமடைந்து வரும் போதேல்லாம் ஏதோ ஒரு காரணி, இலங்கை என்ற குட்டித் தீவை தட்டி தள்ளிவிடுகின்றது.

இதனால் பொருளதார நெருக்கடியில் இருந்து மீள்வது இலங்கைக்கு பாரிய சவாலாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி ஏழைகள் தான். குறிப்பாக இலங்கையில் கொரோனா தாக்கத்தால் பணம் படைத்த சிலரை விட அனைத்து மக்களும் ஒருவேளை உணவுக்கு பிறரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஊடரங்கு அமுலில் இருந்த இந்த இரண்டு மாத காலப்பகுதியில் தம்மிடம் இருந்து பொருட்களை விற்றும், அடகு வைத்தும், ஒரு மாதிரி காலத்தை கடத்தி விட்டனர்.

பலர் தொழில்களை இழந்துள்ளனர். சுயதொழிலில் ஈடுபவர்கள் ஏற்கனவே மரணத்தின் விளிம்பிற்கு சென்று விட்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களும் அரசியல் தலைவர்களும் இன, மத பேதம் இன்றி ஒன்றிணைய வேண்டும். வறுமை எனும் கொடூர போராட்டத்தை எவ்வாறு கையாளப் போகின்றோம்? எவ்வாறு வறுமையை வெற்றிக்கொள்ள போகின்றோம்?வறுமை பிடிக்குள் சிக்கியவர்களுக்கு எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுப்பது? முதலான கேள்விகளுக்கு விடை காணும் வகையில் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதுவே நாட்டின் முக்கிய தேவைப்பாடாக தற்போது காணப்படுகின்றது.

அந்த வகையில் 'வறுமை கொரோனாவை விட கொடுமையானது : மக்களுக்கான தீர்வுகள் எவை? " எனும் தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) சக்தி தொலைக்காட்டிசில் மின்னல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது.

இந்த காலக் கட்டத்திற்கும், எதிர்கால திட்டமிடலுக்கும் ஏற்ற வகையில் மிகச் சிறந்த தலைப்பை தெரிவு செய்திருந்தமை இங்கு பாராட்டதலுக்குரியதாகும்.

நாட்டில் ஒரு வேளை உணவுக்கே போராடும் ஏழையின் குரலை பொது இடத்துக்கு கொண்டு வரும் நிகழ்ச்சியாக இது இருந்தது.

குறிப்பாக நாட்டில் தமிழ் பேசும் மக்களில் பிரதிநிகள் கலந்து தமது மக்களின் வறுமை தொடர்பான பிரச்சினைகளையும் அதற்கான தீர்வு திட்டங்களையும் முன்வைத்திருந்தமை சிறப்பம்சமாகும்.

தமிழ்த் தேசியக்க கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத் தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இந்த வறுமை தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

'எமது நாட்டு மக்கள் உட்பட உலக மக்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்றால் நேரடியாக பலர் பாதிக்கப்படுவதற்கு அப்பால் உலகம் முழுவதும் பொருளதார சீரழிவு நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது. எமது நாட்டிலும் இந்த தாக்கத்தை தற்போது காணக்கூடியதாக உள்ளது.

இந்த கொரோனா தொற்றால் நாளாளந்த வருமானத்தை பெறும் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று ஏனைய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில நிறுவனங்கள் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் அரைவாசியை வெட்டி விடுகின்றார்கள். இதனால் பொருளாதார நெருக்கடி பாரிய மோசமான நிலைக்கு வந்துள்ளது.

இந்த நேரத்தில் நாம் இவ்விடயத்தை இரண்டு விதமாக நோக்க வேண்டும். முதலாவதாக தற்போதைய நிலையில் மக்களை உயிருடன் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். வீட்டிலேயே முடங்கி கிடப்பவர்களின் வாழ்வதாரத்துக்கு அரசாங்கம் தான் உதவி செய்ய வேண்டும்.

இதேவேளை தற்போதைய நிலையிலே இருந்து பொருளாதார மாற்று கட்டமைப்பு ஒன்றை நாம் உருவாக்க வேண்டும். இந்த கொரோனா அழிவிலிருந்து நாம் வெளியில் வரும் போது, உலக பொருளாதார கட்டமைப்பு என்பது முற்றிலும் வேறுப்பட்டதாக காணப்படும்.

இதனை சரியான முறையில் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து திட்டமிடல்களை இப்போது இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

அவ்வாறான பட்டசத்திலேயே வறுமையால் மக்கள் பலியாகாத நிலைமையை ஏற்படுத்த முடியும் என்றார். 

இதனையடுத்து அரசாங்க தரப்பை சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் வறுமைக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்கலாம் என்பது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.

'இந்த பிரச்சினை தமிழ் மக்களுக்கு மாத்திரமானதல்ல. நாட்டுக்கே உரிய பிரச்சினையாகும். வல்லரசு நாடுகள் கூட இன்று ஆட்டம் கண்டு போயுள்ளன. இதனால் பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை இந்த கொரோனா தொற்றை மிகவும் இலாவகமாக கையாள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட பாராட்டியிருந்தார்.

ஆனால் கொரோனா தொற்றால் வறுமை என்பது அனைவரையும் பாதிப்படைய செய்துள்ளது. 1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டார நாயக்க காலக்கட்டத்தில் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் தரிசு நிலங்கை சுத்தம் செய்து விசவாயம் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தது போன்று நாம் அனைவரும் தற்போது இதனை செய்ய எத்தணித்துள்ளோம்.

இந்த நேரத்தில் அரசாங்கத்தை நம்பி வாழாமல் சுய பொருளதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் நாம் செயற்பட வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூ ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில், எமது மார்க்கத்திற்கு அமைய, எம்மிடம் உள்ள சொத்து, உடமைகளை அடிப்படையாக வைத்து மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வறுமை ஒழிப்பை ஒழிக்கும் வகையில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை இஸ்லாம் காலம் காலமாக பின்பற்றி வருகின்றது.

இந்த நேரத்தில் உணவு உற்பத்தியை மாத்திரம் முன்னிலைப்படுத்தி கதைப்பது பொறுத்தமானது அல்ல. உலக மயமாக்கலின் பின்னர் தற்போதைய சூழலில் பல நாடுகள் இறக்குமதியை கட்டுப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு நாடும் அதன் அந்நிய செலாவனியை ஏனைய நாடுகளுக்கு செல்ல விடாமல் கட்டுப்படுத்துவதை நோக்காக கொண்டே செயற்படும்.

சுற்றுலாத்துறை போன்றவை நீண்ட காலத்துக்கு முடக்கப்படும் ஆபத்து உள்ளது. இதுபோன்று வெவ்வேறு துறைகளில் காணப்படும் குறைப்பாடுகளை இனங்கண்டு ஆட்சியாளர்களுக்கு அதற்கான தீர்வு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு துறைகளிலும் பாதிக்கப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எவ்வாறு மாற்று தீர்வுகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

ஆகக் குறைந்த பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்யும் நாடாக இலங்கை காணப்படுகின்றது. இந்நிலையிலேயே சுகாதார நடைமுறைகளை கவனமாக iயாண்டு எதிர்கால ஆபத்து தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக எதிரணியை இணைத்துக்கொண்டே இதற்கு தீர்வை பெற வேண்டும். ஆனால் எமது நாட்டில் அந்நிலைமை இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என்றார்.

இதேவேளை அரச தரப்பில் உள்ள ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன சார்பில் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான அலி சப்ரி தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இந்த கொரோனா தாக்கத்தின் போது, மூன்று முக்கிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து அரசாங்கம் செயற்பட்டிருந்தது.

இந்த தொற்றில் இருந்து நாட்டை பாதுகாப்பதே பிரதானமாக நோக்கமாக காணப்பட்டது. இரண்டாவதாக வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், மூன்றாவதாக அத்தியாவசிய தேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல்.

இந்த செயற்பாடுகளை அரசாங்கம் சிறப்பாக செய்திருந்தது. இதுவரை 55ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 2ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைளும் பதிவாகியிருந்தன.

அதிக ஆபத்து உள்ள பகுதிகளிலேயே பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும். அதனைவிடுத்து ஏனைய பகுதிகளில் சோதனைகளை செய்வதால் பணம் வீண்விரயமே ஏற்படும்.

எனவே இதில் குறை கூற முடியாது. தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களே நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் ஒருவர் கூட இனங்காணப்படவில்லை. இது ஒரு சிறப்பான விடயமாகும்.

இதேவேளை 5 ஆயிரம் ரூபா சரியான முறையில் தொழில் இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் பாரிய பொருளதார நெருக்கடி ஏற்படும் என்பது உண்மையாகும்.

இதை அனைவரும் ஒன்றிணைந்தே எதிர்கொள்ள வேண்டும். உணவு இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் பகிர்ந்தளிக்க வேண்டும்.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து செயற்பட வேண்டும். எல்லாவற்றையும் விட தற்போதைய நிலையில் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதன்போது முன்னாள் அமைச்சரும் தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தனது பதிவை முன்வைத்திருந்தார்.

சுதாதார பிரச்சினையாக உருவெடுத்த கொரோனா பொருளதாக பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த கொரோனாவால் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மலையக மக்களும், கொழும்பு நகர்புற மக்களும் மற்றும் வடக்கு கிழக்கில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுமே பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்று தான், மேற்குறிப்பிட்டவர்கள் தற்போது கொரோனாவால் துன்பங்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5ஆயிரம் ரூபா விடயத்தில் பாரிய குறைப்பாடுகள் உள்ளன. 5 ஆயிரம் என்பது வாழ்வதாரத்துக்கு போதாது. நாம் 20 ஆயிரம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம். 

ஆனால் தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏதோ ஒன்றை கூறி விட்டார் என்று கூறிக்கொண்டு அந்த 5 ஆயிரம் ரூபாவையும் வழங்காமல் இருக்க பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் முண்டியத்துக்கொண்டிருக்கின்றர்.

இந்த நேரத்தில் அபிவிருத்தி திட்டகளை நிறுத்தி அந்த பணத்தை கொண்டு மக்களின் உயிர் வாழும் உரிமையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை அரச தரப்பில் செயற்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

கொரோனா தேசிய பிரச்சினையை தாண்டி சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த கொரோனா நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையை உணர்த்தியுள்ளது.

அதாவது சுய உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்பதோடு உற்பத்தி பொருளதாரத்தின் முக்கியவதுத்தை எமக்கு உணர்தியுள்ளது.

கிராமங்களில் தன்னிறைவு சூழல் என்ற முறைமையை சரியாக கட்டமைக்க வேண்டும். நீர் நிலத்தை அதிகமாக கொண்ட எமது நாட்டில் உற்பத்தி பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

இதன் மூலமே வறுமை பிடிக்குள் இருந்து மக்களை மீட்டு வாழ்வாதாரத்தை சிறப்பாக்க முடியும். இதனோடு விவசாயம், பண்ணை உற்பத்தி மீன் பிடி போன்றைவற்றையும் ஊக்குவிக்க வேண்டும்.

அதேபோன்று கிழக்கில் யுத்த காலத்தில் செயலிழந்த தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான தனது கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நீண்ட கால திட்டமிடல்கள் மற்றும் குறுகிய கால திட்டமிடல்கள் என்ற அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும்.

தற்போது மக்கள் ஊரடங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால திட்டமிடல்களுக்கு அமைய இந்த நேரத்தில் இம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

இந்த காலப்பகுதியில் சுயதொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கொழும்பில் நூற்றுக்கு 60 வீதமானோர் சுயதொழில் செய்து வாழ்பவர்கள் ஆவர்.

இவர்களின் வருமானம் முற்றாக இந்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மக்களின் வாழ்க்கை நிலைமை மிக மோசமாக இருக்கின்றது என அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தினோம்.

ஆனால் இவர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு குறைப்பாடாகவே இருந்து. 5 ஆயிரம் ரூபா வழங்கியதிலும் கூட பாரிய குறைப்பாடுகள் உள்ளன. செல்வந்தர்களும், பள்ளிவாசல்களினாலும் மற்றும் ஏனைய பிரிவினராலும் கொழும்பில் உள்ளவர்களுக்கு உதவி செய்தமையால் தான் மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என்றார்.

இதேவேளை அரச தரப்பில் இருந்து செயற்படும் முன்னாள் பிரதியமைச்சரும் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதன் தனது நிலைப்பாட்டை முன்வைத்தார்.

ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று கொரோனா தொற்றால் அதிக வறுமை பிடிக்குள் சிக்கியுள்ளார்கள். குறிப்பாக தமிழர்களே கூடுதலாக வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக வங்கியின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை பிரகாரம் யுத்தம் முடிவடைந்த பகுதிகளிலேயே அதிகளவு வறுமை காணப்படுகின்றது.

இந்த வறுமையை போக்க அபிவிருத்தி இடைவெளியை நிரப்ப வேண்டிய கடப்பாடு உள்ளது. ஆனால் மனோ கணேசன் கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அபிவிருத்திகளை முன்னெடுக்காமல் இருப்பதால் தான் இன்று வறுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பத்து மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும் காணப்படுகின்றன. எட்டாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது.

இதில் 40 வீதமானவர்கள் விவசாயம் மீன் பிடி தொழிலை நம்பி வாழ்கின்றவர்கள். இவர்களுக்கு மாற்று திட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தால் நிலைமை சீராக இருந்திருக்கும்.

வடக்கில் பல இளைஞர்கள் தொழில் வாய்ப்பு இன்றி உள்ளார்கள். நான் பிரதியமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் விவசாய அமைச்சின் ஊடாக சுமார் 600 மில்லியன் ரூபா பண உதவியை விவசாய முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினேன். இதன் மூலம் சுயதொழில் முயற்சியாளர்கள் உருவாகினார்கள் என்றார்.

மலையக மக்களை பிரதிநித்துவம் செய்து முன்னாள் அமைச்சர் திகாம்பரம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இந்த கொரோனா தொற்கு இன மத மொழில் அரசியலை பார்த்து வந்தது இல்லை. இதன் போது நாம் அரசியலுக்கு அப்பாற் சென்று செயற்பட வேண்டும்.

ஆனால் இலங்கையில் எந்த அனர்த்தம் ஏற்பட்டாலும் மலையக மக்களுக்கு நிவாரணங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் உழைத்தால் மாத்திரமே வாழ முடியும்.

கொழும்பில் பல மலையக இளைஞர்கள் சிக்கித் தவித்தார்கள். இவர்களுக்கு சரியாக உதவிகள் கிடைக்கவில்லை. மலையக மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றார்கள். 5 ஆயிரம் ரூபாவை கூட அரசியல் இலாபம் வைத்து வழங்குகின்றார்கள்.

மலையக மக்கள் வருமானமும் குறைவாக உள்ளது. எனவே அரசாங்கம் ஏனைய மக்களுக்கு போன்று மலையகத்தவர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆளம் தரப்பு அமைச்சரான டக்ளஸ் தேவானந்தவிடம் கேள்வி ஒன்றை தொடுத்திருந்தார்.

கேள்வி : அமெரிக்கா, இந்தியா, சீனா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து நிதி உதவி கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிதி உதவிகள் கிடைக்கப்பெற்றதா? மக்களுக்கு இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துகின்றீர்கள்?

இதற்கு பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எனக்கு தெரிந்த வகையில் இன்னும் அந்த நிதி நாட்டை வந்தடையவில்லை என்றார்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் அரச தரப்பில் செயற்படும் சட்டத்தரணி அலி சப்ரியிடம் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

கேள்வி: வியாபாரிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. மத்திய வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிடப்பட்டது. நிதி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி பிரிவிலிருந்து ஒரு சுற்றறிக்கை வெளியாகியிருந்தது.

இதில் எந்த சுற்றறிக்கையை பின்பற்றுவது என்பது தொடர்பில் வியாபாரிகள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லையே?

பதில் - (அலி சப்ரி) : மத்திய வங்கி அல்லது ஜனாதிபதி பிரிவிலிருந்து சுற்றறிக்கைகள் வெளியாகிருந்தால் அதன் பிரகாரம் சலுகைகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதனையடுத்து அரச தரப்பில் செயற்படும் சட்டத்தரணி அலி சப்ரி முன்னாள் அமைச்சர் திகாம்பரத்திடம் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

கேள்வி: அரசாங்கத்தால் பல வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட் டு வருகின்றன. இந்த வேலைத் திட்டங்களை மேலும் முன்னேற்றமாக செய்வதற்கு உங்களின் பரிந்துரைகள் என்ன?

பதில் - (திகாம்பரம்) : இந்த காலக்கட்டத்தில் அரசியல் இலாபம் இன்றி செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டாலே மக்களுக்கு முழுமையான உதவி கிடைக்கும் என்றார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் திகாம்பரம் அரச தரப்பில் செயற்படும் சட்டத்தரணி அலி சப்ரியிடம் கேள்வி ஒன்றை தொடுத்தார்?

கேள்வி: 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெருந்தோட்ட மக்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மாதாந்த சம்பளம் 5ஆயிரத்துக்கும் குறைவாகவே கிடைக்கின்றது. இந்த பணத்தை வைத்து அவர்களால் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாது. இதற்கான அரசாங்கத்தின் தீர்வு என்ன?

பதில் - (அலி சப்ரி) : குறிப்பாக தொழில் இல்லாமல் வறுமையில் வாடுபவர்களுக்கே தற்போது  நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. அரசாங்கத்திடமும் பணம் இல்லை. உங்களின் நிலைப்பாடும் சரியானது. எனினும் அரசியல் இலாபம் இன்றி தான் உதவிகள் வழங்கப்பட்டன என்றார்.

இவ்வாறு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தமது சமூகம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளையும் அதற்கு தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

கொரோனாவுக்கு எதிரான சமர் இன்னமும் முடிந்த பாடில்லை. சுகாதார பிரச்சினையாக உருவான இந்த கொரோனா, தற்போது சமூக, பொருளாதார அழிவை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழை மக்கள் படும் துயம் சொல்லில் அடங்காதவை. கொரோனாவால் ஏற்பட்ட அடிப்படை பிரச்சினையாக வறுமை உருவாகியுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் 45 இலட்சம் பேர் மாத சம்பளத்தை உரிமையோடு எதிர்பார்க்க முடியாத நிலைமையில் வாழ்பவர்கள் ஆவர்.

20 இலட்சம் பேர் நாள் சம்பளத்தை நம்பி வாழ்வாதாரத்தை கொண்டு செல்பவர்கள். யுத்தத்தால் வடக்கு கிழக்கில் 85 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றனர்.

மலையக மக்களின் வாழக்கையை விவரிக்க முடியாத கொடுமை. இது போன்று ஒவ்வொரு பிரிவு மக்களும் வறுமை என்னும் பிடியில் சிக்குண்டுள்ளார்கள்.

ஏற்கனவே வறுமை சக்கரத்தில் சுழன்ற இவர்கள் தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வறுமையின் உச்சத்திலேயே இருக்கின்றார்கள்.

இம் மக்களை பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். நண்பன், அயலவன், குடும்பம், சமூகம், அரசியல்வாதி செல்வந்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பயணித்தால் மாத்திரமே இந்த வறுமையில் சிக்கி பசியால் பலியாகுவர்களை காக்க முடியும்.

மக்கள் பிரதிநிதிகள் தம் மக்கள் தொடர்பில் முறையான வேலைத்திட்டங்களை எடுப்பதோடு பொறுப்புடன் செயற்பட வேண்டும். வாய் பேச்சு வீரர்களாக மாத்திரம் இருந்து விடக்கூடாது.

இங்கு மனிதாபிமானம் என்பது வெல்லப்பட வேண்டும். இவ்வுலகில் மனிதர்கள் நிறையபேர் வாழ்கின்றார்கள். ஆனால் மனித நேயத்துடன் வாழ்பவர்கள் எத்தனை பேர்?

உன் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ உயிரோடு இருக்கின்றாய். ஆனால் பிறல் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

எனவே மனிதத்தை போற்றுவோம் வறுமையை ஒழிப்போம். ஒன்றுபடுவோம் வெற்றிக்கொள்வோம்.

'இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது'

வறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால், வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை. எனவே வறுமை என்ற கொடூரத்தை இந்நாட்டை நீங்க செய்வோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41