பிரபல இந்தி நடிகர் துஷார்கபூர் திருமணம் செய்யாமலேயே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார். 

நடிகர் ஜிதேந்திராவின் மகனான இவருக்கு 39 வயது. இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். தனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்றும் இதனால் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்றும் கூறி வந்தார். ஆனால் குழந்தைக்கு தந்தையாக ஆசைப்பட்டார்.

இதையடுத்து, அவர் வாடகை தாய் மூலம் தனது குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தார். இதற்காக மும்பை ஜஸ்லக் வைத்தியசாலையை அணுகினார். அங்கு வாடகை தாய் மூலம் துஷார்கபூரின் குழந்தையை உருவாக்கும் சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதில் வெற்றியும் கிடைத்தது.

இந்த நிலையில் துஷார் கபூருக்கு நேற்று மும்பை வைத்தியசாலையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். குழந்தைக்கு லக்சயா என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தந்தையானது பற்றி நினைக்கும்போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்றார்.

தங்களது மகன் வாடகை தாய் மூலம் தந்தை ஆனதற்கு பெற்றோர் ஜிதேந்திரா - ஷோபாகபூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “நாங்கள் துஷர்கபூர் எடுத்த முடிவுக்கு முழு ஆதரவாக இருந்தோம். எங்கள் வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம். துஷார்கபூர் ஒரு அற்புதமான மகன். எல்லா விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவான். அவன் லக்ஷயாவுக்கு சிறந்த தந்தையாக இருப்பான் என்றனர்.