`பட்டினிச் சாவு` அச்சத்தில் முல்லைத்தீவு மீனவர்கள்

18 May, 2020 | 08:37 PM
image

முல்லைத்தீவு கடற்பகுதியிலிருந்து நந்திக்கடல்  களப்பு பகுதி ஊடாக வீசும் கடற்காற்றில் வீச்சு வலையைப் பின்னிக் கொண்டே அடிக்கடி தலையை வலதுபுறமாகச் சாய்த்து தனது கட்டைக் கால் கீழே விழுந்து சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்துகொள்கிறார் செல்லையா யோகேந்திரராசா.

அவரைப் போன்று ஆயிரக்கணக்கான மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் கொரோனோ நோயின் காரணமாக நிலவும் ஊரடங்குக்கு மத்தியில், நந்திக்கடல் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மீன்பிடி காரணமாக தமது எதிர்காலம் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளனர்.

கொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்த செல்லையா, கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில், தனது இடது கால் மற்றும் வலது கண் ஆகியவற்றை இழந்தார். மேலும் அவரது கையொன்றும் செயலிழந்து போயிற்று.

ஒரு காலத்தில் முதலாளியாகப் பலருக்கு கடற்தொழில் வாய்ப்பளித்த செல்லையா இப்போது வட்டுவாகல் பகுதியில் வீதியோரமாகச் சிறிய கொட்டகை ஒன்றில் வீச்சு வலை பின்னி, அதை விற்று வாழ்க்கையை நடத்துகிறார்.

அவரது வாழ்வாதாரமாக இருந்த அதுவும் தற்போது கொரோனாவின் காரணமாக நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

’’மூலப் பொருட்களை எடுப்பதும் பிரச்சினை, அதை எடுத்து நாங்கள் செய்தாலும், அதை விற்று வாழ்வாதாரத்தை முன்னெடுப்பது பெரிய கஷ்டமாக இருக்கிறது. எங்களுக்கு அரசாங்கம் ஒரு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு மட்டும் தந்துள்ளது. மேலும், மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில்தான் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டிருக்கிறேன்’’ என்று மிகவும் வேதனையுடன் கூறுகிறார் செல்லையா.

நந்திக்கடல் களப்புப் பகுதியிலுள்ள மக்களின் முக்கியத் கைத்தொழிலும் வாழ்வாதாரமும் மீன்பிடிப்பதேயாகும்.

அந்தக் களப்புப் பகுதியும், அரசாங்க அதிகாரிகள் மற்றும் நீரியல் திணைக்களத்தால் உரிய வகையில் பராமரிக்கப்படாமலும் சட்ட விரோத மீன்பிடி காரணமாகவும் தமது வளங்களை இழந்து வருவதாகவும் அதனால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் கூறுகின்றனர்.

நந்திக்கடல் வாவியின் கரையோரமாக இருக்கும் வட்டுவாகல், கோரோனா நோயின் காரணமாக- ஊரடங்கு நிலையில்- பேய் நகரம் போல ஆளரவமற்று காட்சியளிக்கிறது. அங்குள்ள மக்கள் ஒரு முறை அரசு கொடுத்த கொடுப்பனவுக்கு அப்பாற்பட்டு வெளிநாடுகளில் இருக்கும் உறவுகள் அனுப்பும் பணத்திலேயே தங்கியிருக்கின்றனர்.

தங்கூசி வலைகள், சுருக்கு மடி வலைகள் ஆகியவற்றைப் பாவித்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பதால், அந்தக் களப்புப் பகுதியில் நீரியல் வளங்கள் மற்றும் சுற்றுசூழல் மீட்டெடுக்க முடியாத வகையில் அழிவை சந்திப்பதாக உள்ளூர் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

பாதிப்பில்லாத வீச்சு வலையைப் பின்னுவதற்கு பத்து நாட்களாகும். அப்படியான வலை அந்த வாவியிலுள்ள உயிரியல் வளங்களை நீடித்துப் பாதுகாக்கும் என முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கூறுகின்றனர்.

வட்டுவாகல் பாலம், போரின் இறுதிக் கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு மௌனமான சாட்சியாக இருக்கிறது.  ஏனெனில் அங்குதான் ஏராளமானோர் அரச படைகளிடம் கையளிக்கப்பட்டனர் அல்லது சரணடைந்தனர். அப்படியானவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க உறவினர்கள் நம்பிக்கையை மீறி முயல்கின்றனர்.

நாயாறு மற்றும் வட்டுவாகல் போன்ற பகுதிகளில் மீன்பிடியை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் எதிர்காலம் இருண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. 

அரசிடம் தாங்கள் செய்த முறைப்பாடுகளுக்கு எந்த பதிலும் இல்லை என்று அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பு மற்றும் நந்திக்கடல் நீரேரிப் பகுதியில் கடற்தொழிலில் சட்டவிரோத நடவடிக்கையே இப்போது அன்றாட செயல்பாடாகிவிட்டது, தென்னிலங்கையிலிருந்து வரும் மீனவர்கள் புல்மோடை தொடக்கம் கொக்கிளாய் வரையிலான பகுதியை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கடற்தொழில் செய்கின்றனர் என்று அப்பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

‘’நாங்கள் செய்யும் சூடவலைத் தொழில் சட்டத்துக்கு முரணான தொழிலாகவும், அவர்கள் செய்கின்ற லைட் ஹோஸ், சுருக்குமடித் தொழில்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டத் தொழிலாகவும் தற்போது மாறிக்கொண்டிருக்க சூழ்நிலையைத்தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்’’ என்கிறார் நாயாறு மீனவர் சங்கத்தின் உறுப்பினர் கமலேஸ் குமார்.

முல்லைத்தீவு மாவட்டத்து மீனவர்கள் ‘’ நாளாந்தம் அச்சத்திலும் உயிராபத்திலும் வாழ்கிறார்கள்’’ என்றும் தமது வாழ்வாதாரம் சூனியமாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். 

நாயாறு மீனவர் சங்கத்தின் தலைவர் கணேசமூர்த்தி இந்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, அதை முற்றாக ஒழிக்க அவர் உறுதியளித்ததாலும் அது நடைபெறவில்லை என்கிறார். ‘’ 

பெரிய படகுகளைக் கொண்டு சுருக்கு மடி வலையைப் பயன்படுத்துபவர்கள் கடற்கரைக்கு அருகில் மீன்பிடிப்பதால், பாரம்பரிய முறையில் தொழில் செய்யும் உள்ளூர் கடற்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அந்த படகுகள் கடற்பரப்பிலிருந்து 20-30 கிமீ தொலைவில் மீன்பிடித்தால் பிரச்சினை இருக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி காரணமாக நாளாந்தம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று முல்லைத்தீவு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் யூட் நிக்ஸன் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சில பெரிய முதலாளிகள் தமது சுயநலன் மற்றும் இலாபத்துக்காக, ஐயாயிரம் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரங்களைக் கெடுக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

``முல்லைத்தீவில் நடைபெறும் சட்டவிரோத மீன்பிடிப்பு, உள்ளூர் மீனவர் சமூகத்தின் மீதான நேரடித் தாக்குதல். கொரோனா நோயின் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனால் பட்டினிச் சாவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்`` என்கிறார் யூட் நிக்ஸன்.

கடல் மாதா தங்களுக்கு நியாயம் பெற்றுத் தருவாள் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

-சிவா பரமேஸ்வரன் ( முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54