ஒரு நச்சுயிரி ஏற்படுத்திய மாற்றத்தின் புதிய யதார்த்தங்கள் 

16 May, 2020 | 08:03 PM
image

- சதீஷ் கிருஷ்ணபிள்ளை     

சூரியன் வழமை போல் உதிக்கிறது. பூக்கள் மலர்கின்றன. இயற்கையின் சக்கரம் சுழல்கிறது. 

மனித வாழ்வில் எல்லாம் மாறியிருக்கின்றன. நாம் வாழும் விதம், வேலை செய்யும் விதம், சிந்திக்கும் விதம் என்று எல்லாத்திலும் மாற்றம். 

ஒரு காதல் கவிதையில் கவிஞனொருவர் கூறுவதைப் போல, நேற்று போல் இன்று இல்லை என்றாகி விட்டது. நாளைய தினம் இன்று போல் இல்லாமல் இருக்கலாம்.

கண்ணுக்குத் தெரியாத நச்சுயிரி. அது பலிகொண்ட உயிர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைத் தாண்டியாகி விட்டது.

இந்தக் கிருமி உலகை விட்டுப் போகாது போல் தோன்றுகிறதென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கிறது.

அது மாத்திரமல்ல. நோயின் தாக்கம் மனிதகுலத்தை மன அழுத்தத்திற்குள் தள்ளி இருப்பதாக நிபுணர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

நச்சுயிரிக்கு முன்னர் நாம் வாழ்ந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்கப் போவதில்லை. புதிய வாழ்க்கையைப் பழக நேரிடும்.

கடந்த காலத்தில் இதுவே வழமை என நாம் வகுத்துக் கொண்ட வாழ்க்கை முறை இனிமேலும் இருக்காது. வழமைகள் புதிதாகும்.

புதிய வகை சமுதாயம். பூமியுடனான புதிய வகை உறவு என்று மனிதர்களாக வாழ்வதே புதிய அனுபவமாக இருக்கப் போகிறது.

மாற்றங்களை புரிந்து கொண்டு, அவற்றிற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்பவர்கள் பிழைப்பார்கள் என்பது உயிர் வாழ்தலின் நியதி. அது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

எது மாறும், எப்படி மாறும் என்று கேட்டால், எல்லாமும் மாறும் என்ற பதில் வருகிறது. கூடவே எப்படியும் மாறலாம் என்ற பதிலும்.

கொரோனா-வைரஸ் வர்க்க பேதங்கள் பார்க்கவில்லை. அரசியல்வாதி முதற்கொண்டு கடைநிலைத் தொண்டன் வரை சகலரையும் தொற்றியுள்ளது.

வேலை செய்யும் இடத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி புதியதொரு சமத்துவ உணர்வு ஏற்பட்டுள்ளது. இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆசுவாசம் தரலாம்.

இதன் மறுபக்கம் கசப்பானது. வீடுகளில் இருந்து வேலை செய்வது ஆரோக்கியம் தரும். வேலைக்காக வீதிகளில் இறங்கி நடப்பது உயிராபத்தை ஏற்படுத்தும்.

எனினும், எத்தனை பேருக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறி. தவிர, அதற்குரிய தொழில்நுட்ப வசதிகள் பற்றிய கேள்வியும் எழலாம்.

உலகம் முழுவதும் முறைசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களில் பாதிப் பேர் வேலை வாய்ப்பை இழக்கக்கூடுமென சர்வதேச தொழில் ஸ்தாபனம் எதிர்வுகூருகிறது.

எண்ணிக்கையில் குறிப்பிட்டால் 160 கோடி தொழிலாளர்கள். உலக நாடுகளின் அனைத்து அரசுகளும் ஒன்றுகூடி திட்டம் வகுத்தாலும் சகலருக்கும் நிவாரணம் வழங்க முடியாது.

இந்தத் தொழிலாளர்கள் தமது தொழில்களை அல்லது தொழில் செய்யும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது கடினம்.

தொழிலாளர்களை உரிமைகளை இழப்பதால், கிளர்ச்சிகளும் போராட்டங்களும் தலைதூக்கலாம். இது சமூக கொந்தளிப்புகளாக மாறவும் முடியும்.

இந்த நெருக்கடி சவாலானது. நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசுகள் எல்லைகளைத் தாண்டி செயற்படும் சாத்தியங்கள் உள்ளன.

சில அரசுகள் விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து, கட்டுப்பாடுகளை விதிக்கவோ தளர்த்தவோ கூடும். இதற்கு நியூசிலாந்தும், இந்தியாவின் கேரள மாநிலமும் சிறந்த உதாரணங்கள்.

தடுமாறும் தலைவர்களைக் கொண்ட அரசுகள், முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகளிலும் இறங்கலாம். தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பலாம்.

முடக்கநிலையை நீக்குவதற்காக சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் மேற்கொண்ட அறிவிப்புக்கள் சிறந்த உதாரணம்.

அமெரிக்காவில் தெளிவான தேசிய மட்டக் கொள்கைகள் இல்லாமல் மாநில ஆளுனர்கள் தனித்தனி தீர்மானங்களை மேற்கொள்வதால், நாடே குழம்பிப் போயிருப்பதையும் கூறலாம்.

நெருக்கடி நிலையைக் காரணமாகக் காட்டி, அரசியல் தலைவர்கள் அதிகாரங்களைக் குவிக்கவும் கூடும். நெருக்கடி தீர்ந்த பின்னர் அதிகாரங்களைக் கைவிடுவார்களா என்பது நிச்சயமில்லை.

கொரோனா-வைரஸ் என்ற நச்சுயிரி, ஜனநாயக அரசியலை மாத்திரமன்றி, கலாசார மரபுகளையும், பழக்கவழக்கங்களையும் புரட்டிப் போட்டுள்ளது.

வணக்கஸ்தலங்கள் மூடியே கிடக்கின்றன. ஏப்போது திறக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லை. கொண்டாட்டங்களைத் தள்ளி வைத்திருக்கிறோம்.

முகக்கவசம் அணியாத மனிதர்களைப் பார்க்க முடியாதுள்ளது. ஒருவர் நம்மைப் பார்த்து புன்முறுவல் பூத்தால் அந்த சந்தோஷ உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது.

ஒருவர் தும்மினால் அச்சப்படுகிறோம். அருகில் வந்தால் சமூக இடைவெளி இல்லையே என்று பயப்படுகிறோம். ஒருவரது துணையே ஆறுதல் என்ற நிலை மாறி, ஒருவர் பக்கத்தில் வருவது ஆபத்தானது என்பது கசப்பான யதார்த்தமாகியுள்ளது.

தம்மைச் சுற்றிலும் பிணியும், மரணங்களும். தனித்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம். எதிர்காலம் பற்றி பயம். எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு மனிதரிலும் உளத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா-வைரஸ் உலகளாவிய உளச்சுகாதார நெருக்கடியாக மாறலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

அன்று வழமையான வாழ்க்கையில் அடுத்தவரைப் புரிந்து கொள்வது முக்கியமாக இருந்தது. புதிய வாழ்க்கையில் அடுத்தவரின் பயம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதை வழமையாக்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மறுபுறத்தில், ஆக்கபூர்வமான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அன்று தேசப்பற்று என்றால் சீருடை அணிந்து விரைப்பாக சல்யூட் அடிக்கும் படைவீரரின் உருவம் மனதில் தோன்றும். இன்று சுகாதாரப் பணியாளர்களின் தியாகம் தேசப்பற்றாக நோக்கப்படுகிறது.

பயங்கரவாதம் என்ற சொல் கிடப்பில் போடப்பட்டு, கண்ணுக்குத் தெரியாத கிருமி பொது எதிரியாக மாறியிருக்கிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தத் தடுமாறும் அரசியல் தலைவர்கள், கடும் குற்றவாளிகளை விடவும் மோசமாக விமர்சிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், டொனல்ட்  ட்ரம்ப் கோமாளியாகவும், தொற்று நோயியல் விஞ்ஞானி அன்டனி பொவ்சி அறிவாளியாகவும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒருபுறத்தில் ஒன்லைன் வாழ்க்கை டிஜிட்டல் இடைவெளியை தீவிரப்படுத்தி இருந்தாலும், இதன்மூலம் அநாவசிய செலவுகள் குறைந்திருக்கின்றன.

வளர்ச்சி கண்ட நாடுகளில் ஒன்லைன் வகுப்புக்கள் மூலம் சகல மாணவர்களும் பாடங்களைக் கற்று அறிவைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

பரீட்சை மூலம் தகைமைகள் தீர்மானிக்கப்படும் போட்டித்தன்மையை அடிப்படையாகக் கல்வி முறையைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில், வசதி படைத்த மாணவர்கள் பந்தயத்தில் வெற்றி பெற முடிகிறது. இல்லாதவர்கள் பின்தள்ளப்படுகிறார்கள்.

சுகாதாரத்துறையில், டெலி மெடிசின் முறையின் மூலம் மருத்துவ ஆலோசனை பெற முடிவதால் செலவுகள் குறைந்திருக்கின்றன. மருத்துவர்களின் நேரத்தை ஒதுக்க காத்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் போகலாம்.

விஞ்ஞானம் மேலோங்கியிருப்பது முக்கியமான மாற்றம். கொரோனாவைரஸ் நெருக்கடியை அரசியலாக்க முனைந்தவர்கள் மூக்குடைந்து நிற்கிறார்கள். அந்த நெருக்கடிக்கு விஞ்ஞானமே தீர்வென்ற உண்மையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இதுவரை காலமும் நுகர்வுக் கலாசாரத்திற்குள் பெற்றோலையும், எரிவாயுவையும் முன்னிறுத்தி செய்யப்பட்ட அரசியல் வெறும் போலி என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னர், நம்மை எந்த சட்டதிட்டங்கள் கட்டுப்படுத்தினவோ, அவை செயலற்றவையாக மாறியுள்ளன. கடன்களைக் கட்டாயமாக திருப்பி செலுத்து என்று நிர்ப்பந்திக்க முடியாது. ஒரு தொழிலாளி விடுமுறையில் இருந்தால், அவரது சம்பளத்தை வெட்டவும் முடியாது.

ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல் என்பதையும் நச்சுயிரி மாற்றியிருக்கிறது. தினம் குறித்த திகதியில் சகல வாக்காளர்களும் வாக்களிப்பது ஜனநாயக மரபென்றாலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு ஒரு மாதகாலம் வரை நீடிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதா, மக்கள் ஜனநாயக உரிமைகளை நிறைவேற்ற அனுமதிப்பதா என்ற தெரிவுகளுக்கு மத்தியில் அரசியல் தலைவர்கள் இரு தலைக்கொள்ளி எறும்புகளாய் தடுமாறும் நிலை தோன்றியுள்ளது. எது சரியான தெரிவு என்பதை மக்கள் அறிந்து, அரசியல் தலைவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய கால அவகாசமும் மக்களுக்கு கிடைத்துள்ளது.

இத்தகைய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு வித்திட்ட நச்சுயிரி விரைவாக மறைய வேண்டும் என்பது மக்களின் பிரார்த்தனை. அது மறைந்து விடக்கூடிய சாத்தியம் இல்லை என்பது கசப்பான யதார்த்தம். இந்த யதார்த்தம் கற்பிக்கும் பாடமொன்று உள்ளதாயின், எது வழமையானதாக இருந்ததோ, அதனை விடவும் மாறுபட்ட சூழ்நிலையை சகித்துக் கொண்டு, சூரியனையும், மலர்களையும் ரசித்துக்கொண்டு வைரஸுடன் வாழப் பழகுதல் சிறந்தது என்பதே அந்தப் பாடமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49