கோத்தா அரசின் முக்கிய சவால்

16 May, 2020 | 02:28 PM
image

-கார்வண்ணன்

கடந்த வாரம், ஜனாதிபதி செயலகத்தில் ஒரு உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றிருந்தது. கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளமைப்பதற்கான வாய்ப்புகள், குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

கொரோனாவினால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு விட்டது, வெளிநாட்டில் இருந்து கிடைத்து வந்த சுற்றுலா, ஏற்றுமதி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானங்கள் பெரும்பாலும் முடங்கி விட்டன.

இவ்வாறான நிலையில், கொரோனாவுக்குப் பின்னரான காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீளமைப்பது என்ற கேள்வி அரசாங்கத்துக்கு உள்ளது.

அதற்கு விடை தேடும் முயற்சிகளில் பல்வேறு பொருளாதார நிபுணர்களும் இறங்கியிருக்கிறார்கள்.

ஏனென்றால், இப்போதைக்கு சுற்றுலாத் துறை வருமானம் கிடைப்பது சாத்தியமில்லை. வெளிநாட்டு வேலை வாய்ப்பும் அதிகரிக்காது, வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளும் இப்போது சுருங்கி விட்டது.

ஆக, ஏற்றுமதியை அதிகரிப்பது ஒன்று தான் இப்போது எஞ்சியிருக்கும் ஒரே வழி. இறக்குமதிகளை குறைத்து, ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் மூலம் மட்டும் தான், வருமானத்தைப் பெறக்கூடிய நிலை காணப்படுகிறது.

அதற்கான ஒரு புது வழியாகத் தான், இராணுவத்தை ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறக்கவுள்ளது. இராணுவத்தில், விவசாய செய்கையில் ஈடுபடும் ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று கடந்தவாரம் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

இராணுவத்தில் விவசாய பயிர்ச்செய்கைக்கான ஒரு அலகு உருவாக்கப்படவுள்ளது இதுதான் முதல் தடவை என்றில்லை. ஏற்கனவே போர் முடிந்த பின்னர், ஜெனரல் ஜகத் ஜயசூரிய தளபதியாக இருந்த போது, இராணுவத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கான ஒரு அலகு உருவாக்கப்பட்டது.

அதன் கீழ் பலாலி, கண்டகாடு, முழங்காவில், உள்ளிட்ட பல இடங்களில் விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட பல பண்ணைகளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு, அவற்றின் மூலமும் வருமானம் பெறப்பட்டது.

ஆனால், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால், விவசாயிகள் நட்டமடைந்தனர்.

அதனால் அவர்கள், எதிர்ப்புக் குரல் எழுப்ப நேரிட்டது. இந்த நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் பல விவசாயப் பண்ணைகளை இராணுவத்தினர் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இப்போது, கொரோனாவினால் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இதற்குப் பின்னர் ஏற்படப் போகும் நெருக்கடிகளைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் இராணுவத்தினரை விவசாயச் செய்கையில் ஈடுபடுத்தும் முயற்சிகளில் தற்போதைய அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

இந்த திட்டத்துக்கு முன்னோடியாக, பயன்படுத்தப்படாமல் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை இனங்காணும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

பிரதேச செயலகங்களின் ஊடாக இத்தகைய காணிகள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 4ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தைக் கூட்டியிருந்த போது, அதில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார்.

பிரதேச செயலகங்களின் மூலம் காணிகளின் விபரங்கள் இராணுவத்தினரால் திரட்டப்படுவதாகவும், ஏற்கனவே பொதுமக்கள் காணிகளைக் கேட்ட போது அதனை வழங்காத அரசாங்கம் இராணுவத்துக்கு வழங்குவது நியாயமற்றது என்றும் அவர் கூறியிருந்தார்.

அதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், எனினும் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்வதாகவும் பதிலளித்திருந்தார்.

இராணுவத்தில் ஒரு விவசாயப் பிரிவை உருவாக்கி, வெறுமையான நிலங்களில் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி ஈடுபட்டிருந்த போதும், அதுபற்றி பிரதமர் மகிந்த ராஜபக்ச அறியாமல் இருந்திருக்கிறாரா? என்பது ஆச்சரியம். 

அவ்வாறான ஒரு நிலைமை இருந்தால், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் நிலைதான் தற்போதும் தொடர்கிறது என்றே அர்த்தம்.

ஏனென்றால் அப்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு பக்கத்தில் அரச நிர்வாகத்தை இழுக்க முயன்றார், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றொரு பக்கத்துக்கு இழுக்க முயன்றார்.

இதனால் அரச நிர்வாகம் அங்கும் நகராமல், இங்கும் நகராமல், முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. தற்போதைய அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச என இரண்டு பெரும் பெருந் தலைகள் இருந்தாலும், அவர்கள் இருவருமே சகோதரர்கள், ஒரே கட்சியின் ஊடாக தெரிவானவர்கள்.

அவர்களுக்கிடையில் இடைவெளி ஒன்று இல்லையென்றால், பிரதமர் மகிந்தவுக்கு இந்த விடயம் நிச்சயம் தெரியாமல் போயிருக்க வாய்ப்பு இல்லை.

அல்லது, பிரதமர் நிலைமையை அறிந்து கொண்டே சமாளிக்க முற்பட்டிருக்கலாம். எது எவ்வாறாயினும், இராணுவத்துக்குள் விவசாய அணி உருவாக்கப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே, பல இடங்களில் இராணுவத்தினர் காணிகளை எடுத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

சில இராணுவ முகாம்களுக்குள்ளாகவே வெற்றுக் காணிகள் உள்ளன. பல இடங்களில் தரிசாக கிடக்கும் காணிகளை இராணுவம் பெற்றுக் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

இது இலங்கை முழுவதிலும் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டம் தான். தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க, ஒரு வழியை தேட வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது,

கொரோனா நெருக்கடிக்கு எவ்வாறு இராணுவம் அழைத்து வரப்பட்டதோ அதுபோலத் தான், விவசாய நெருக்கடியை தீர்ப்பதற்கும் இராணுவத்தை அழைத்துக் கொண்டு வர அரசாங்கம் முற்படுகிறது.

அதற்காகவே, மகாவலி, விவசாய , நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையாக காட்டப்பட்டாலும், மறுபக்கத்தில் இராணுவத்தையே எல்லாவற்றுக்கும் முன்னிறுத்தும் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தின் இலக்கை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு கிழக்கில் எல்லா மட்டங்களிலும் சீருடை மயமாகவே இருந்தது. ஆளுநர் வேலை தொடக்கம், விவசாயம் செய்வது வரை அவர்களே பார்த்துக் கொண்டனர். இப்போது, ஜனாதிபதி தொடக்கம், விவசாயிகள் வரை இராணுவ மயமாக, நாடு இருக்கிறது.

இந்த இராணுவ மயமாக்கலை முன்னர் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தான் எதிர்த்தார்கள்.

ஆனால் இப்போது, தெற்கில் உள்ள் சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கூட, அதனை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் எதிர்கொள்ளுகின்ற முக்கிய சவாலாக இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21