கொரோனா வைரஸும் எண்ணெய் விலை வீழ்ச்சியும் ; சவூதி அரேபியா எதிர்நோக்கும் இரட்டை நெருக்கடி

Published By: Digital Desk 3

15 May, 2020 | 10:35 AM
image

முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மானின் தலைமையின் கீழ் பொருளாதாரத்தை - எண்ணெய் ஏற்றுமதியில் மாத்திரம் பிரதானமாக தங்கியிருக்காமல் - பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்துவதற்கும் முரட்டுத்தனமான வெளியுறவுக்கொள்கை நிலைப்பாட்டின் ஊடாக பிராந்தியத்தில் செல்வாக்கை அதிகரிப்பதற்கும் சவூதி அரேபியா மேற்கொண்டுவந்திருக்கும் முயற்சிகள் பிரச்சினைக்குள்ளாகியிருக்கின்றன.கொரோனாவைரஸ் தொற்றுநோயும் எண்ணெய் விலை வீழ்ச்சி என்ற இரட்டை நெருக்கடியே இதற்கு காரணமாகும்.

பெற்றோலியம் துறையில் இருந்தே 87 சதவீதமான பட்ஜெட் வருவாய்களை பெறுகின்ற இராச்சியம் " வேதனைமிகு " பொருளாதாரத் தீர்மானங்கள் சிலவற்றை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு எதிர்நோக்கப்படுகின்ற " மோசமான நெருக்கடியில் " இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக பிராந்திய நடவடிக்கைகளை குறைத்துக்கொள்வதற்கு தயாராயிருப்பதை இதன் மூலமாக சவூதி அரேபியா சமிக்ஞை காட்டியிருக்கிறது.

பெறுமதிசேர் வரியை(வற்) அதிகரிப்பது, அரசாங்க ஊழியர்களுககான வாழ்க்கைச்செலவு உதவித்தொகையில் குறைப்பு உட்பட பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராச்சியம் தீர்மானித்திருப்பதாக உத்தியோகபூர்வ சவூதி பத்திரிகை நிறுவனம் ( Saudi Press Agency ) மே 11 ஆம்  திகதி அறிவித்தது.

இறுதியாக ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் தாக்கத்தின் விளைவாக ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருப்தற்காக 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட  உதவித்தொகைக் கொடுப்பனவு ஜூன் முதலாம் திகதியளவில் இடைநிறுத்தப்படும்.

அதே வருடம் கொண்டுவரப்பட்ட பெறுமதிசேர் வரி தற்போதைய 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக ஜூலை முதலாம் திகதியளவில் அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி சவூதி பத்திரிகை நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஐந்து வருடகாலப் போருக்குப் பிறகு யேமன் நாட்டில் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தமொன்றை சவூதி இராச்சியம் கடந்த மாதம் அறிவித்தது.சில பகுதிகள் ஷியா ஹௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அயல்நாட்டில் பெரும் செலவுபிடிக்கிற இராணுவரீதியில்  தலையீடு செய்வதை கைவிடுவதற்கு றியாத் நாட்டம் கொண்டிருக்கிறது என்பதன் தெளிவான சமிக்கையாக இது அமைந்தது.

பல தசாப்தங்களுக்கு பிறகு மோசமான நெருக்கடி

நெருக்கடியைக் கையாளுவதற்கு வேதனைதரக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது என்று நிதியமைச்சர் முஹம்மட் அல் - ஜதான் முன்னதாக எச்சரிக்கை செய்திருந்தார்." கடந்த பல தசாப்தங்களில் முன்னர் ஒருபோதுமே இந்தளவு கடுமையான நெருக்கடியை இராச்சியம் கண்டதில்லை " என்று அரச தொலைக்காட்சி சேவையான அல் - அரேபியாவுக்கு மே 3 ஆம் திகதி அவர் கூறினார்.

இராச்சியத்தின் பட்ஜெட்டை 2019 டிசம்பரில் சவூதி அதிகாரிகள் அறிவித்தபோது மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 60 டொலர்களுக்கும் அதிகமானதாக இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி சவூதி அரேபியா  இவ்வருடம் பட்ஜெட்டை சமநிலைப்படுத்தவேண்டுமானால், ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை சுமார் 76 டொலர்களாக இருப்பது அவசியமாகும்.ஆனால், சர்வதேச அளவுமட்டமான பெறன்ற் மசகு எண்ணெயின் விலை மார்ச்சில் 50 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது.மே 11 பிற்பகல் லண்டனில் பெறன்ற் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு  26.31 டொலராக இருந்தது.

மோசமடையும் நிலைவரத்துக்கு மத்தியில், செலவினங்களைச் சமாளிப்பதற்காக சவூதி அரசாங்கம் அதன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் கைவைத்தது.மார்ச்சில் அதன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் முன்னென்றுமில்லாத வகையில் 2400 கோடி டொலர்கள் இறக்கம் ஏற்பட்டதை இராச்சியம் கண்டது. அதாவது கையிருப்பு 47 கோடி 90 இலட்சம் டொலராக இருந்தது.பிணைமுறிச் சந்தையில் இருந்து கடனாக  கோடிக்கணக்கான பணத்தையும் அது திரட்டுகிறது.

வைரஸின் தாக்கம்

கொரோனாவைரஸ் தொற்றுநோய் நெருக்கடியை மேலும் மோசமாக்கியிருக்கிறது.ஊரடங்கின் கீழ் பெரும்பாலான பொருளாதார செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.மார்ச்சில் இராச்சியம் கடைகளை, பிரமாண்டமான கடைத்தொகுதிகளை, உணவகங்களை, சிற்றுண்டிச்சாலைகளை மற்றும் ஏனைய பொது இடங்களை மூடிவிட்டது.மக்காவுக்கான வருடாந்த ஹஜ் யாத்திரை உட்பட சகல யாத்திரைகளும் தடங்கலுக்குள்ளாகின.

1798 ஆம் ஆண்டு நெப்போலியன் எகிப்தை தாக்கியபோது இடைநிறுத்தப்பட்டதற்குப் பிறகு இப்போது தான் முதற்தடவையாக  ஹஜ் யாத்திரை நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட போதிலும், நாட்டில் வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டேயிருந்தது.அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனாவைரஸ் நிலைவர அவதானிப்பு நிலையத்தின் தகவல்களின்படி, மே 11 மாலை அளவில் இராச்சியத்தில் 39,000 க்கும் அதிகமானவர்கள் கொரானோவைரஸ் தொற்றக்குள்ளாகியதாகவும் 246 பேர் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.அவை எல்லாவற்றுக்கும் உச்சத்தில் பொருளாதார இன்னல்களும் தீவிரமடைந்தன.இராச்சியத்தின் நிகர உள்நாட்டு உற்பத்தி  இவ்வருடம் 2.3 சதவீதம் வீழ்ச்சி காணும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்மதிப்பீடு செய்திருக்கிறது.

" தொற்றுநோய்க்கு வெகு முன்னதாகவே சவூதி அரேபியாவில் நிலைவரம் படுமோசமாகிக்கொண்டுவந்தது. இராச்சியத்தின் மீது பொருளாதார நெருக்குதல்கள் ஏற்கெனவே குவியத்தொடங்கியிருந்தன.இதனுடன் சேர்த்து,யேமனுக்கு எதிராக யுத்தத்தையும் சவூதி  நடத்திக்கொண்டிருந்தது. இவையெல்லாவற்றுக்கும் மேலாக, முடிக்குரிய இளவரசர் தன்னை தாராளவாதத்தின் ஊற்றுக்கண்ணாக காட்சிப்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை, உண்மையில் அவர், தீர்மானங்களை எடுப்பதில் மிகவும் தீவிரமாக உணர்ச்சிக்கு ஆட்படக்கூடிய  கடுமையான எதேச்சாதிகார ஆட்சியாளராக வெளிப்பட்டுக்கொண்டிருந்தார் " என்று சவூதி அரேபியாவுக்கான முன்னாள் இந்திய தூதுவர் தல்மிஸ் அஹமட் கூறினார். எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சியும் வைரஸ் தொற்றுநோயும் நிலைவரத்தை மேலும் இடர்மிக்கதாக்கிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெற்றிபெறமுடியாத எண்ணெய் யுத்தம்

அண்மைய எண்ணெய் நெருக்கடி முற்றிலும்  சவூதி அரேபியா தனக்கு தானாகவே வருவித்துக்கொண்டதாகும். 'ஒபெக் பிளஸ் கூட்டுப்பங்காண்மை' தொடர்பிலான புதிய கொள்கைகளை எவ்வாறு பரிசீலனைக்கு எடுக்கமுடியும் என்பது குறித்து ரஷ்யாவுடன் ஆராய்வதற்குப் பதிலாக, முடிக்குரிய இளவரசர் முன்யோசனையின்றி ரஷ்யாவை நிராகரித்து அறவே  வெல்லமுடியாத எண்ணெய் யுத்தம் ஒன்றைத் தொடங்கினார். அந்த யுத்தம் சவூதி அரேபியாவை மாத்திரமல்ல, தங்களது  எண்ணெய் வருவாயில் தங்கியிருக்கின்ற பிராந்தியத்தின் பெரும் எண்ணிக்கையானநாடுகளையும் காயப்படுத்திவிட்டது " என்று அஹமட் ' த இந்து ' விடம் கூறினார். ( ஒபெக் பிளஸ் கூட்டுப்பங்காண்மை (OPEC -- plus) என்பது பெற்றோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் ( Organisation of Petroleum Exporting Countries - OPEC ) ஐந்து தாபக நாடுகளான ஈரான், ஈராக், குவைத், சவூதி அரேபியா மற்றும் வெனிசூலா ஆகியவற்றுக்கு புறம்பாக  எண்ணெயை ஏற்றுமதி செய்கின்ற வேறு பல நாடுகளையும்  சேர்த்துக் குறிப்பிடுவதாகும் )

எண்ணெய் உற்பத்தியை  அதிகரிப்பதற்கு மார்ச் முற்பகுதியில் தீர்மானித்த சவூதி அரேபியா, உற்பத்தி அளவைக் குறைப்பதற்கு ரஷ்யாவுடன் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு தவறியதை அடுத்து சந்தைப்பங்கை வென்றெடுப்பதற்கான ஒரு முயற்சியாக எண்ணெய் வாங்குபவர்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்க முன்வந்தது.தேவையான அளவைவிடவும் கூடுதல் விநியோகம் காரணமாக எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.தினமொன்றுக்கான எண்ணெய் உற்பத்தியை 97 இலட்சம் பீப்பாய்களினால் குறைப்புச் செய்வதற்கு சவூதி அரேபியர்கள், ரஷ்யர்கள் மற்றும் முக்கியமான எண்ணெய் உற்பத்தியாளர்களும் ஏப்ரில் 13 ஆம் திகதி இணங்கிய நேரமளவில், காலம் கடந்துவிட்டது.வைரஸ் ஊரடங்குகளுக்கு மத்தியில் உலக பொருளாதார நடவடிக்கைகள் அரைவாசியாக குறைந்த நிலையில், தினசரி எண்ணெய்த்தேவை ஏற்கெனவே 2 கோடிக்கும் அதிகமான பீப்பாய்களினால் வீழ்ச்சியடைந்துவிட்டது.

வரலாற்றை மாற்றும் நெருக்கடியொன்றை தாங்கள் எதிர்நோக்குவதை சவூதி அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர்." கொரோனாவைரஸுக்கு முன்னர் இருந்த நிலைவரத்துக்கும் வழிமுறைகளுக்கும் உலகமோ அல்லது சவூதி அரேபியாவோ திரும்பிச்செல்லும் என்று நான் நினைக்கவில்லை " என்று இராச்சியத்தின் நிதியமைச்சர் அல் -- ஜதான் இம்மாத ஆரம்பத்தில் கூறினார் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு புறம்பாக, முடிக்குரிய இளவரசரினால் முன்னெடுக்கப்பட்ட பெரும் செலவிலான திட்டங்களில் சிலவற்றை  இராச்சியம் பின்போட்டது.மக்கா மசூதி விஸ்தரிப்பு, விளையாட்டு ஸ்ரேடியம் மற்றும் பாலைவனத்தில் 50 ஆயிரம் கோடி டொலர்கள் செலவில் மெகாசிற்றி ஆகியவை பின்போடப்பட்ட திட்டங்களில் முக்கியமானவை.

" உலக பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் நிலையில், எண்ணெய் விலைகள் நெருக்கடிக்கு முன்னரான நிலைக்கு திரும்பிச்செலவது தற்போதைக்கு சாத்தியமேயில்லை.அதனால், புதிய கொள்கைத் தீர்மானங்கள் குறித்து இராச்சியம் சிந்திக்கவேண்டியிருக்கிறது" என்று அஹமட் கூறினார்.இராச்சியத்தின் நிலைவரம் பற்றிய தனது மதிப்பீடு " எதிர்மறையானதாகவே " இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், நாட்டை மீண்டும் துடிப்பான இயக்கநிலைக்கு கொண்டுவருவதற்காக முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் -- சல்மான் பல தீவிரமான உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கை நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். 

" இராச்சியம் உள்நாட்டுசெலவினங்களில் குறைப்பைச் செய்யவேண்டியிருக்கிறது.புதிய தொழில் வாய்ப்புகளுக்காக இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படவேண்டும்.முடிக்குரிய இளவரசர் உறுதியளித்த -- பொறுப்புக்கூறக் கடமைப்பட்டதும் ஒத்துணர்வுமிக்கதுமான அரசியல் ஒழுங்கு ஒன்றைக் கட்டியழுப்பவேண்டும். அரச குடும்பத்திற்குள் முரண்பாடுகள் களையப்பட்டு சுமுக உறவு நிலை ஏற்படுத்தப்படவேண்டும்..... அரச குடும்பம் ஐக்கியப்பட்டதாக இருந்தால் மாத்திரமே அது நாட்டை சட்டமுறைப்படியாக ஆட்சி செய்யமுடியும் " என்றும் அஹமட் கூறினார்.

வெளியுறவுக்கொள்கையைப் பொறுத்தவரை, முதற்படியாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவகாரங்களைக் கையாளவேண்டும்.சவூதிஅரேபியாவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளை நடத்தினால், யேமனில் இருந்து சிரியா மற்றும் ஈராக் வரை பிராந்தியத்தின் பெருவாரியான முரண்நிலைகளை கையாளக்கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரான்லி ஜொனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04