“தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை” சட்டபூர்வமானதே ; சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை - பொலிஸார் அறிவிப்பு

Published By: Digital Desk 3

12 May, 2020 | 10:37 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ' தனிமைப்படுத்தல் ஊரடங்கு  நிலை' சட்ட பூர்வமானதே என பொலிஸார் இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். 

கொரோனா தொற்று பரவலை அடுத்து, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நிலையின் சட்ட பூர்வ தன்மை தொடர்பில் பல்வேறு  வாதங்கள் மாற்றுக் கருத்துக்கள் சமூகத்தில் உலாவரும் நிலையிலேயே பொலிஸார் இதனை அறிவித்தனர். 

பொலிஸ் தலைமையகத்தில்  இன்று மாலை,  பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன , சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  ருவன் குணசேகர பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன ஆகியோர் இணைந்து   விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி இதனை தெளிவுபடுத்தினர்.

கம்பஹா நீதிமன்றில் நேற்று நீதிவான் மஞ்சுள திலகரத்ன,  இந்த ' தனிமைபப்டுத்தல் ஊரடங்கு ' சட்ட ரீதியானதே என வழங்கிய தீர்ப்பினையும் இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு அறிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர்  சந்திப்பில் முதலில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன  கருத்து தெரிவித்தார்.

' இலங்கையில் முதல் உள்நாட்டு கொவிட் 19 தொற்றாளர்  கடந்த மார்ச் 11 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.  இந் நிலையில் மார்ச் 18 ஆம் திகதியாகும் போது, 64 தொற்றாளர்கள் பதிவாகினர்.

இந்நிலையில் தான்  சுகாதார, வைத்திய ஆலோசனைகளுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன்  மார்ச் 18 ஆம் திகதி புத்தளம்  மாவட்டம், கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கும் முதலில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து மார்ச் 20 ஆம் திகதி நாடு முழுதும் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கொரோன அவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலக நாடுகள் தனிமைப்படுத்தலை  சிறந்த வழியாக கருதிய நிலையில், உலக சுகாத்ர ஸ்தாபனத்தினதும் வழிகாட்டல்கள் இருந்த நிலையிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ' என தெரிவித்தார்.

 இதனையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமையின் சட்டபூர்வ தன்மை தொடர்பில்  பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன விளக்கியதுடன்,  நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் உள்ள, தளர்த்தப்பட்ட பகுதிகளில்  தனிமைப்படுத்தல் சட்ட அமுலாக்கம் தொடர்பிலும் அறிவித்தார்.

'  உண்மையில் நாம் இப்போது ஒரு தீர்மானமிக்க ஒரு கட்டத்தில் இருக்கின்றோம்.  சுமார் 60 நாட்கள் முடங்கியிருந்து, மக்கள் வழமைக்கு திரும்பி வருகின்றனர். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலேயே,  தனியார், அரச நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலைமை நாட்டில் மீண்டும் கொரோனா கொத்தனியொன்றினை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் நாம் மிக கவனமாக இருத்தல் வேண்டும்.

கொழும்பு , கம்பஹாவில் ஊரடங்கு நிலை உள்ள நிலையில் அதனை மீறி செயற்பட்டால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள். அதேபோல் , ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தொற்று நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல்  சட்ட விதிகளை எவரேனு மீறினால், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.

உண்மையில் 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க  தனிமைப்படுத்தல் மற்றும்  நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின்  உள்ள் விதிவிதானங்களின் பிரகாரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தனது அதிகாரத்தை செயற்படுத்த பதில் பொலிஸ் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூல  அனுமதியை வழங்க்கியுள்ளார். 18 விடயங்களை குறிப்பிட்டு அவர் அந்த அதிகார மாற்றத்தை அல்லது அனுமதியை வழங்கியிருந்தார்.

அதன்படியே நாம்  செயற்படுகின்றோம்.  அதற்கு அமையவே நாம்  மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த  தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமையை அமுல் செய்தோம்.

இது குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன. மனித உரிமை செயற்பட்டாளர்களாக கூறிக்கொள்ளும் சிலர்  இதனை விமர்சித்தனர். பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கை அமுல் செய்யாது ஏன் வேறு விதமாக  ஊரடங்கை அமுல் செய்கின்றனர் என கேள்வி எழுப்புகின்றனர்.

அவர்கள் இவ்வாறான அறிக்கைகள் ஊடாக, மறைமுகமாக,  வீட்டுக்குள் தனிமையாக இருக்கும் மக்களை வீதிக்கு இழுக்க முற்படுகின்றார்கள்.

இந்த தனிமைபப்படுத்தல் ஊரடங்கை அமுல் செய்ததனாலேயே, இன்று உலகவில்  13, 14 வீதமாக பதிவாகும் மரணங்கள் எமது நாட்டில் குறைந்த வீதத்தில் உள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கும்  அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. எனினும் அந்த சட்டத்தின் கீழ் ஊரடங்கை அமுல் செய்வதற்கான எந்த தேவையும் இல்லாத இவ்வாறான சந்தர்ப்பத்தில், சட்டத்தில் உள்ள பூரண அனுமதியின் பிரகாரமே நாம்  தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல் செய்தோம்.

எமது அண்டைய நாடான இந்தியாவில் கூட அவர்கள் நாட்டை முற்றாக முடக்கி வைக்க,  இத்தகைய சட்டத்தையே பயன்படுத்தினார்கள்.  ஆங்கிலயர் எமக்கு வகுத்துகொடுத்த  தனிமைப்படுத்தல் மற்றும்  நோய் தடுப்பு சட்டத்தை ஒத்த சட்டமே இந்தியாவிலும் அதே காலப்பகுதியில் ஆங்கிலேயரால் வகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இரு சட்டங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. அதன் கீழேயே இந்தியாவிலும் முழு நாடும் முடக்க்ப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கின் போது நாம் கையாண்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  சிகை அலங்கார நிலையங்கள், அழகுக்கலை நிலையங்கள் போன்றன இயங்குவதானால் தொடர்ந்தும்  உரிய சுகாதார பரிசோதகர்களின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும்.

வாராந்த, நாளார்ந்த  சந்தைகள்  மக்கள் ஒன்று திறளும் அத்தனை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் தடைச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளிலும் , கொழும்பு கம்பஹாவிலும் அரச , தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் இயங்க அரம்பித்துள்ளன. அதன்படி அவர்கள் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள உரிய ஆலோசனைகளை பின்பற்றுகின்றார்களா,  தனிமைப்படுத்தல், நோய்  தடுப்பு சட்ட விதிவிதனக்களை கையாளுகிறார்களா என நாளை முதல் நாம்  சோதனைச் செய்யவுள்ளோம்.

இதற்காக உளவுத் துறையினர், சுகாதார பரிசோதகர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள உள்ளோம். மீள தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிறுவனங்கள், வர்த்தக  நிலையங்களில் உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாதுவிடத்து,  தனிமைப்படுத்தல், நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த நிறுவனங்கள், நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சட்ட மா அதிபர் அங்கீகரித்துள்ள நிலையில் எமது நடவடிக்கைகள் தொடரும்.' என தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, கம்பஹா நீதிமன்றின் உத்தரவினை முன்வைத்து , தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை சட்டபூர்வமானது என விளக்கினார்.

' கடந்த மார்ச் 18 முதல் இலங்கையில் அமுல் செய்யப்படும்  தனிமைப்படுத்தல்  ஊரடங்கு நிலை சட்டபூர்வமானது என்பதை கம்பஹா நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.

 உண்மையில் பொலிஸார், கம்பஹா பகுதியில் ஊரடங்கு வேளையின் போது,  மருந்தகம் ஒன்றினை திறந்து வைத்திருந்த ஒருவரைக் கைது செய்தனர். அவருக்கு எதிராக ஊரடங்கு உத்தரவை மீறியமைக்கு மேலதிகமாக வேறு குற்றச்சாட்டுக்களும் இருந்தன.

இதன்போது அவர்சார்பில்  நடை முறையில் உள்ள ஊரடங்கு நிலைமை சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. அதன்படி அது குறித்து  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவும் நானும் நீதிமன்றுக்கு விளக்கங்களை சமர்ப்பித்தோம். அதன்படி கம்பஹா நீதிவான் மஞ்சுள திலகரத்ன  பொலிஸார் அமுல் செய்யும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட ரீதியானதே என 15 பக்கங்களைக் கொண்ட தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீதிவானின்  உத்தரவில் இரு விடயங்கள் மிக முக்கியமானவை.  ஊரடங்கு நிலையை பிறப்பிக்க முடியுமான பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க எந்த அவசியமும் நாட்டில் இல்லை என நீதிவான் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் பிறப்பிக்க முடியுமான ஊரடங்கு நிலைமையும் பிறப்பிக்கப்பட எந்த நிலைமையும் நாட்டில் இல்லை என்பதை நீதிவான் உறுதி செய்தே, 1897 ஆம் ஆண்டின் 3 அம் இலக்க  தனிமைப்படுத்தல்,  நோய் தடுப்பு சட்டத்தின் கீழும்,  1925.08028 அன்று வெளியிடப்பட்ட 7481 அம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்,  கடந்த மார்ச் 20 அம் திகதி வெளியிடப்பட்ட 2167/18 எனும் வர்த்தமானி, கடந்த மார்ச் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2168/6 எனும் வர்த்தமானி அறிவித்தல்  ஆகியவற்றுக்கு அமைவாக, பொலிஸார் அமுல் செய்யும்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை சட்டபூர்வமானது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 2020.03.18 முதல்  இதுவரை  நேரத்துக்கு நேரம்  நோய் நிலைமையை கருத்தில் கொண்டு பல்வேறு பிரதேசங்களில் அமுல் செய்யப்பட்ட  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட பூர்வமானதாகும் என நீதிமன்ரம் உறுதி செய்தது.' என்றார்

இதனையடுத்து பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன , ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

கேள்வி: கொரோனாவை தனிமைப்படுத்தலுக்குறிய நோயாக பிரகடனம் செய்து மார்ச் 20 ஆம் திகதியே வர்த்தமானி வெளியிட்ப்பட்டது. அப்படி இருக்கையில் எப்படி மார்ச் 18 ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல் செய்ய முடியும்?

பதில்: கொரோனா நிலைமை திடீரென ஏற்பட்டது.  அதனாலேயே அந்நிலைமையை கையாள சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய  தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல் செய்ய வேண்டி ஏற்பட்டது. அப்போதும் வர்த்தமானியை வெளியிட தேவையான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

கேள்வி: இலங்கை முழுதும் நோய் கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கே உள்ளது என்று கூறினீர்கள். அவரின் அதிகாரத்தை பொலிஸார் செயற்படுத்துவதாக கூறுகின்றீர்கள். சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அதிகாரமளிக்கும் வர்த்தமானி மார்ச் 25 ஆம் திகதியே வெளியிடப்பட்டுள்ளது. அப்படியானால் அதற்கு முன்னர் எப்படி அவரது அதிகாரத்தை பொலிஸார் பயன்படுத்தலாம்

பதில்:  இல்லை  இது 1925 அம் அண்டின் வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவே அந்த அதிகாரம் சுகாதார  சேவைகள் பணிப்பாளருக்கு வழங்கப்ப்ட்டுள்ளது. மார்ச் 25 ஆம் திகதி வர்த்தமானியில், சிலோன் என இருந்த பதம் திருத்தப்பட்டு இலங்கை  என மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

கேள்வி:   தனிமைப்படுத்தல் ஊரடங்கை பிறப்பிக்கும் அதிகாரம்  பொலிஸாருக்கு உள்ளதாக கூறுகின்றீர்கள். எனினும் ஊரடங்கு அறிவித்தல் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளரினாலேயே வெளியிடப்படுகின்றது. இது எந்த வகையில் சட்ட ரீதியானது?

பதில்: இது நல்ல கேள்வி. உண்மையில் சுகாதார துறையுடன் ஆராய்ந்து தனிமைப்படுத்தல் சார்ந்த ஊரடங்கு நிலைமைகளை பொலிஸாரே தீர்மானிப்பர். குறிப்பாக அது சார்ந்த நிபந்தனைகள், கட்டளைகளாக பெரும்பாலும் இங்குள்ள இருவருமே ( ருவன் குணசேகர, ஜாலிய சேனாரத்ன்வை சுட்டிக்காட்டுகின்றார்) தயாரிப்பர். பின்னர் அது  பொலிஸ் தலைமையகத்தினால் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அமுல் செய்வதற்காக அனுப்படும். அப்போது,  அந்நிறுவனங்களில் பலமான ஊடக கட்டமைப்பை கொண்டுள்ள ஜனாதிபதி ஊடக பிரிவுக்கும் நாம் இதனை அறிவிப்போம். அதன் பின்னர் அவர்கள் இதனை  ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பர். இங்கு தீர்மானம் பொலிஸாரினாலேயே எடுக்கப்படும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02