தெற்காசியாவில் கொரோனா புரியாப்புதிர்

Published By: Digital Desk 3

10 May, 2020 | 09:36 PM
image

வட அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பாவுடனும் ஒப்பிடும்போது தெற்காசியாவில் வைரஸ் தொற்றுப்பரவலும்  மரணங்களும் மிகவும் குறைவு

உலகின் மிகவும் பழமைவாய்ந்த ஜனநாயகமும் மிகவும் பெரிய ஜனநாயகமும் அடிக்கடி ஒபபிடப்படுவதுண்டு.இத்தடவை ஒரு வித்தியாசமான முறையிலான ஒப்பீடு.அமெரிக்காவில் கொவிட் -- 19 வைரஸின் தொற்றுக்கு இலக்கான முதல் நபர் ஜனவரி 21 ஆம் திகதியும் இந்தியாவில் முதல் நபர் ஜனவரி 30 ஆம் திகதியும் கண்டுபிடிக்கப்பட்டனர்.உத்தேசமாக மூன்று மாதங்கள் கழித்து ஏப்ரில் 20 ஆம் திகதி அமெரிக்காவில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 7,23,605 ஆக இருந்தது.இந்தியாவில் அந்த எண்ணிக்கை 17,265 ஆகும்.அன்றைய தினத்தில் உலகில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கையின் 31.2 சதவீதமாக அமெரிக்க எண்ணிக்கையும் 0.75 சதவீதமாக இந்திய எண்ணிக்கையும் இருந்தன.அதேவேளை, உலக சனத்தொகையில் இதற்கு மாறாக, இரு நாடுகளினதும் பங்குகள் முறையே சுமார் 4 சதவீதமாகவும் 18 சதவீதமாகவும் இருக்கின்றன.

புதிரான நிலைவரம்

தெற்காசியாவுடன் ( பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை) ஒப்பிடும்போதும் அதே முடிவுகள் வருவது மேலும் அதிர்ச்சிதருவதாக இருக்கிறது.நேபாளத்திலும் கூட, கொவிட் -- 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் நபர் ஜனவரி பிற்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டார்.ஆனால், பிராந்தியத்தின் ஏனைய நாடுகளில் முதல் நபர் பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முற்பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டனர். ஏப்ரில் 20 ஆம் திகதி, உலக  சனத்தொகையில் 23.4 சதவீத பங்கைக்கொண்ட தெற்காசியா உலகில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் மொத்த எண்ணிக்கையில் 1.25 சதவீதத்தையும் மொத்த மரணங்களில் 0.5 சதவீதத்தையும் கொண்டிருந்தது.

தொற்றுநோய் பரவலுக்கு முன்னதாக இத்தகையதொரு யதார்த்தநிலையை கற்பனை செய்வதோ அல்லது எதிர்வு கூறுவதோ சாத்தியமானதாக இருந்திருக்காது.உலகின் தனிநபர் வருமானத்தில் வெறுமனே 16 சதவீதமானதாகவே தெற்காசியாவின் தனிநபர் வருமானம் இருந்து வருகிறது.உலகின் முன்னேறிய கைத்தொழில்மய நாடுகளின் தனிநபர் வருமானத்தின் 4 சதவீதமாகவே தெற்காாசியாவின் இந்த தனிநபர் வருமானம் விளங்குகிறது.உலகின் வறியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தெற்காசியாவில் வாழ்கிறார்கள்.அந்தளவுக்கு முற்றுமுழுதான வறுமை உயர்ந்தும் ஊட்டவினை மிகவும் தாழ்வானதாகவும் இருக்கிறது.உபகண்டத்தின்  சனத்தொகைச் செறிவே உலகின் ஏனைய பாகங்களைவிடவும் மிக உயர்வானதாக இருக்கிறது.

நகர்ப்புற சேரிகளிலும் கிராமப்புறங்களில் போதிய இடப்பரப்பில்லாத பகுதிகளிலும் நெருக்கமாக வாழ்கின்ற வறிய மக்கள் வேகமாகப் பரவும் இந்த வைரஸ் தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த பகுதிகளின் பொதுச்சுகாதார முறைகளும் வசதிகளும் உலகிலேயே மிகவும் மோசமானவையாக இருக்கலாம்.

ஆனால், கொவிட் -- 19 வைரஸ் தொற்று நிலைவரங்களை ஒப்பிடும்போது முடிவுகள் புராயாப்புதிராக மாத்திரமல்ல, திகைப்பைத் தருவதாகவும் இருக்கிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் கிழக்காசியாவுடன் அல்லது அவற்றின் சொந்த  சனத்தொகைப் பருமனுடன்  ஒப்பிடும்போது தெற்காசியாவில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களினதும் அதனால் மரணமடைந்தவர்களினதும் எண்ணிக்கைள் மிகவும் குறைவானவையாக இருக்கின்றன.உண்மையில், உலகின் அந்தப் பகுதிகளைப் போலன்றி, தெற்காசிய நாடுகள் சமூகத்தொற்று பெருக்கநிலைக்கு வராத ஆரம்பக்கட்டங்களிலேயே இருக்கின்றன என்று வாதிடுவது பொருத்தமானதாகும்.வைரஸ் தொற்று எண்ணிக்கையில்  கடும் முனைப்பான அதிகரிப்பு பின்னரான கட்டங்களில் அல்லது ஒரு  இரண்டாவது சுற்றில் ஏற்படக்கூடும்.

ஆனால், சாத்தியப்பாடுகளை மதிப்பிடுவதோ அல்லது எதிர்வுகூறல்களைச் செய்வதோ எளிதாக சாத்திரமாகக்கூடியதல்ல.ஆனால், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் வைரஸ் பரவலின் நிலைவரம் தொடர்பான வரைகோடு கிடைமட்டமாகுவதற்கான சாத்தியம்  இருப்பதை இதுவரையில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் உணர்த்துகின்றன.மாலைதீவிலும் நேபாளத்திலும் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் பூட்டானில் ஒற்றை இலக்கத்திலும் இருக்கின்றன.

இரு சாத்தியமான விளக்கங்கள்

உலகின் பல பாகங்களையும் விட தெற்காசியாவின் நிலைவரம் இதுவரை  மேம்பட்டதாக இருக்கின்ற இந்தச் சூழ்நிலையை எவ்வாறு விளங்கப்படுத்த முடியும் ? 1918 ஸ்பானிய சளிக்காய்ச்சல் (Spanish influenza)தொற்றுநோயினால் உலகில் பலியான சுமார் 5 கோடி மக்களில் இந்தியாவைச்சேர்ந்தவர்களின் எண்ணிக்கை  கோடியே 80 இலட்சத்துக்கும் 2 கோடிக்கும் இடைப்பட்டதாகும்.இதுவே கடந்தகால அனுபவமாக இருக்கிறது.அதை அடிப்படையாக வைத்து இயல்பான முறையில் சிந்தித்துப் பார்ப்போமானால், தற்போதைய கொவிட் --19 வைரஸினால் இந்தியாவில்  பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களினதும் பலியானவர்களினதும் தொகை மிகவும் அதிகமானதாகவே இருந்திருக்கும் என்ற முடிவுக்கே வந்திருப்போம். சாத்தியமான இரு விளக்கங்கள் குறித்து பார்ப்போம்.

முதலாவதாக, புள்ளிவிபரங்கள் குறிப்பாகச் சொல்வதை விடவும் யதார்த்தநிலை மிகவும் மோசமானதாக இருந்திருக்கலாம்.ஏனென்றால், சனத்தொகையின் மிகப்பெரிய பருமனையும் மருத்துவ பரிசோதனைக்கான கருவிகளின் பற்றாக்குறையையம்  அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது என்பது நிச்சயமானதாகும்.திருத்தியமைக்கப்படக்கூடிய புள்ளிவிபரங்கள் வேண்டுமானால் இலக்கங்களை மாற்றலாம்.ஆனால், மேறபடி ஒப்பீடுகளில் இருந்து வெளிக்கிளம்புகின்ற சமச்சீரற்றதன்மையை(Asymmetry) மாற்றிவிட முடியாது.

இரண்டாவதாக, இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை  மற்றும் நேபாள அரசாங்கங்களினால் மார்ச் கடைசி வாரம் தொடங்கி இன்னமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற ஊரடங்கு ( Lockdown ) சில பயன்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெளிவானது. விரிந்துபரந்த நிலப்பரப்புடைய இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஊரடங்கு உலகிலேயே மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடியதாக இருக்கக்கூடும்.இரு பரமாணங்களைக் கொண்ட பௌதீக இடைவெளி (Physical distancing )யின் ஊடாக வைரஸ் தொற்றுச்சங்கிலியை முறிப்பதே(Breaking the chain of transmission) பொதுவான நோக்கமாக இருந்தது. ஒரு பரிமாணம் மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைத்திருப்பது.ஆனால், உருவாக்கப்பட்ட இந்த பௌதீக இடைவெளி இடவசதிகளையும் கதவுகளையும் கொண்ட வீடுகளில் வசிக்கும் வசதிபடைத்த மக்கள் பிரிவினருக்கு மாத்திரமேயானது.

மெகா நகரங்களில் புலம்பெயர்தொழிலாளர்கள் போதிய இடவசதியில்லாமல்--ஒரு அறையில் 10 பேர் வரையில் தங்கியிருப்பது போன்று -- நெருக்கியடித்துக்கொண்டு வசிக்கின்ற நகர்ப்புறச் சேரிகளில் இது சாத்தியமில்லை.இன்னொரு விடயம் நரங்களுக்குள் அல்லது மாநிலங்களூடாக மக்கள் நடமாட முடியவில்லை.புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது கிராமங்களுக்கு திரும்பமுடியவில்லை.வைரஸைக் காவிகளாக இருக்கக்கூடிய  பிரசைகளோ அல்லது வெளிநாட்டவர்களோ வெளிநாடுகளில் இருந்து வரமுடியவில்லை.இது சமூகத்தொற்று (Community transmission ) சங்கிலிக்கான சாத்தியத்தை தடுத்து வைரஸின் புவியியல் பரவலைக் குறைத்திருக்கிறது ; ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தால் தோன்றியிருக்கக்கூடிய நிலைவரத்துடன் ஒப்பிடும்போது வைரஸ் தொற்றின் வரைகோட்டை கிடைமட்டமாக்கியிருக்கிறது.

எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய -- வெளிப்படையான இந்த விளக்கம் அவசியமானது, ஆனால், போதுமானதல்ல.ஏனென்றால், ஊரடங்கை நடைமுறைப்படுத்திய ஏனைய நாடுகளினால் குறிப்பாக, மிகமிக முன்னேறிய பொதுச்சுகாதார முறைகளைக் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளினால் வைரஸின் மிகப்பெரியளவு பரவலின் வேகத்தைக்( Phenomenal spread) குறைக்கக்கூடியதாக இருக்கவில்லை.நோயின் தாக்கம் நாடுகளுக்கிடையில் வேறுபடமுடியும் ; வேறுபடுகிறது.கலாசாரங்கள், நோய்தடுப்பு ஆற்றல் அல்லது வானிலை ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் இதற்கு காரணமாயிருக்கலாம்.நான் ஒரு தொற்றுநோயியல் நிபுணரோ அல்லது நோய்நுண்மவியல் நிபுணரோ அல்ல.ஆனால், ஒரு சமூக விஞ்ஞானி.பல காரணிகளின் சேர்க்கையொன்றை என்னால் அவதானிப்பது சாத்தியம்.

சாத்தியமான கருதுகோள்கள்

காசநோய்க்கு எதிராக கட்டாயமாக   பி.சி.ஜி.தடுப்பூசியை மக்களுக்கு ஏற்றுவதை நடைமுறையில் கொண்டுள்ள நாடுகள் கொவிட் -- 19 வைரஸினால் பாதிக்கப்படுகின்ற அல்லது அதனால் மரணமடைகின்ற ஆபத்தைக் குறைவாகக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.உதாரணத்துக்கு,  ஐபிரியன் தீபகற்ப நாடுகளான ஸ்பெயினையும் போர்த்துக்கலையும் ஒப்பிடுவோம்.ஏப்ரில் 20 ஆம் திகதி ஸ்பெயினில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,96,000 ஆகவும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,500 ஆகவும் இருந்த அதேவேளை, போர்த்துக்கலில் அந்த எண்ணிக்கைகள் முறையே 20,200 ஆகவும் 700 ஆகவும் இருந்தது.பி.சி.ஜி. தடுப்பூசி ஏற்றுதல்  போர்த்துக்லில் கட்டாயமானதாக இருப்பதும் ஸ்பெயினில் அவ்வாறு கட்டாயமானதாக இல்லாதிருப்பதும் தற்செயலான ஒன்று மாத்திரமா?.கொவிட் -- 19 வைரஸினால் வதைக்கப்பட்ட அமெரிக்காவிலோ அல்லது இத்தாலியிலோ சகலருக்கும் பி.சி.ஜி.தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஒருபோதும் நடைமுறையில் இருந்ததில்லையே? உண்மையில், விஞ்ஞானரீதியான விசாரணை மாத்திரமே காரணத்தையும் தாக்கத்தையும் நிறுவமுடியும்.

ஆனால், பி.சி.ஜி.தடுப்பூசி   காசநோய்க்கு அப்பாலும் மனிதர்களின் நோய்எதிர்ப்பு ஆற்றலில் ஒரு தூண்டுதல் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றது போலத் தொன்றுகிறது. சில நாடுகள் கொவிட் --19 வைரஸுக்கு எதிராக பி.சி.ஜி. தடுப்பூசியை பரிசோதித்துப்பார்ப்பது அல்லது சுகாதாரப் பணியாளர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு வழிவகையாக அதை சிந்திப்பது அந்தக் காரணத்துக்காகப்போலும்.அதே போன்றே,சில நாடுகள் சுகாதாரப் பணியாளர்களுக்கான நோய்தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதற்கும்  கொவிட் -- 19 நோளிகளுக்கு  சிகிச்சையளிப்பதற்காகவும் இந்தியாவிடமிருந்து ஹைட்ரொக்சிகுளோறோகுயினை பெருந்தொகையாக வாங்குகின்றன.தெற்காசிய நாடுகளில், பி.சி.ஜி. தடுப்பூசி சகலருக்கும் கட்டாயமானது என்கிற அதேவேளை, மக்களின் நோய் எதிர்ப்பு முறைமை வாழ்நாள் பூராகவும் மலேரியாவின் தாக்கத்திற்கு உட்படுவதற்கான சாத்தியத்தைக் கொண்டதாக இருக்கிறது.தெற்காசியாவில் இதுவரையில் கொவிட் --- 19 வைரஸ் பரவல் ஒப்பீட்டளில்  மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதற்கு சாத்தியமான விளக்கமாக இது இருக்கக்கூடும்.

வாழ்வும் வாழ்வாதாரமும்

ஊரடங்குகள் வைரஸ் பரவலைத் தணித்திருக்கின்றன என்பது தெளிவானது.அவ்வாறு செய்ததில் ஊரடங்குகள் உயிர்களைக் காப்பாற்றியிருக்கின்றன.ஆனால், அதேநேரம் அவை வாழ்வாதாரங்களை அபகரித்துவிட்டன.தெற்காசிய நாடுகளில் தொழிலாளர் படையில் அனேகமாக 90 சதவீதம் சுய வேலைகளை செய்பவர்களையும் நாட்சம்பள அடிப்படையிலா சமயாசமய ஊழியர்களையும் எந்தவிதமான சமூகப்பாதுகாப்பும் இல்லாத முறைசாரா துறைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களையும் கொண்டதாகவே விளங்குகிறது.

ஊரடங்குகளின் விளைவாக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் தொழில்களை இழந்துவிட்டனர்.அதனால், வருமானத்தையும் இழந்து தங்களது வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்துவிட்டனர்.இந்த நிலைவரம் வறியவர்கள் மீதும் வறுமைக்கோட்டுக்கு சற்று மேலே இருப்பவர்கள் மீதும் அளவுக்கொவ்வாத சுமையை திணிக்கிறது.அவர்களைப் பொறுத்தவரை, ஊடாட்டம் பிணிகளினால் பீடிக்கப்படுவதற்கும் பட்டினி கிடப்பதற்கும் இடையிலானதே தவிர வேறு தெரிவு கிடையாது.உயிரைப் பாதுகாப்பதற்கு வாழ்வாதாரங்கள் இன்றியமையாதவையல்லவா?

ஊரடங்குகள் அகற்றப்பட்டதும் உடனடியாக பிரச்சினைகள் மறைந்தோடிவிடப்போவதில்லை.6 வாரங்களாக அல்லது அதையும் விட கூடுதலாக மூடப்பட்டிரு்கும் பொருளாதாரங்கள் வீழ்ச்சியுறும் நிலைக்கு நெருக்கமாக வந்துவிடும்.குறுகிய கால அடிப்படையில் நோக்கும்போது இது குடும்பங்களையும் நிறுவனங்களையும்  பொறுத்தவரை உயிர்வாழ்வுக்குரியதும் பொருளாதார உறுதிப்படுத்தலுக்கும் உரிய  ஒரு விடயமாகும்.

இவ்வருடம் பொருளாதார வளர்ச்சி எதிர்மயைானதாக அல்லது  பூச்சியமாக இருக்கும்.நடுத்தரக்கால அடிப்படையில் நோக்குகையில் இது பொருளாதார மீட்சிக்கானதாகும். அதற்கு கணிசமான காலம் செல்லும். தெற்காசிய நாடுகளில்   வறுமை அதிகரித்துவரும் அசமத்துவத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றபோதிலும்,  கடந்த 25 வருடகால துரித பொருளாதார வளர்ச்சி முழுமையான வறுமையை கணிசமானளவுக்கு குறைப்பதற்கு அந்த நாடுகளுக்கு உதவியிருக்கிறது.ஜயகோ....முழுமையான வறுமை( Absolute poverty) மீண்டும் அதிகரிக்கப்போகின்றது.அதேவேளை, பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும் அதிகரிக்கும்.

தீபக் நாயர்

  ( தீபக் நாயர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் தகைசார் பொருளியல் பேராசிரியருமாவார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13