சாகடிக்கப்படும் சிறுபான்மையினர்

Published By: Digital Desk 3

10 May, 2020 | 01:46 PM
image

- ஹரிகரன்

கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் பேரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இதனைச் சாட்டாக வைத்து, சில தரப்புகளை நசுக்குவதற்கு முனைப்புகள் காட்டப்படுவதான குற்றச்சாட்டுகள், உலகெங்கும்  கூறப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஒரு ருவிட்டர் பதிவை இட்டிருந்தார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த சிங்களப் பெண் ஒருவருக்கு நடக்கும் இறுதிச்சடங்கில் மரணமான பெண்ணின் உறவினர்கள் அருகேயிருந்து அஞ்சலி செலுத்த, பௌத்த பிக்குகள் சமயச் சடங்குகளை நடத்துகின்ற இரு படங்களையும், முஸ்லிம் பெண் ஒருவரின் உடலுக்கு (அவருக்கு தொற்று என கூறப்பட்டது தவறு என்று, பின்னர் உறுதியானது) உறவினர்கள் அருகே செல்ல அனுமதிக்கப்படாமல், தூர நின்று மௌலவி ஒருவர் சமயச் சடங்குகளை செய்யும் ஒரு படத்தையும் வெளியிட்டு-  இரு தாய்மார்களின் பிரியாவிடை என அந்தப் பதிவை இட்டிருந்தார் பிமல் ரத்நாயக்க.

“ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான வாழ்க்கையை உங்களால் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், தயவு செய்து அவர்களிற்கு கௌரவமான இறுதிசடங்கையாவது உறுதி செய்யுங்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட பாரபட்சம் என்பது, பௌத்த தர்ம போதனைகளுக்கு முரணானது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பாரபட்சம், இலங்கையில் இதுதான் முதல் முறையல்ல. 

கொரோனா தொற்று ஆரம்பித்த பின்னர், முஸ்லிம்கள் தமது வழக்கப்படி மதச் சடங்குகளை நடத்துவதற்கோ அடக்கம் செய்வதற்கோ அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

இது முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பாரபட்சமாக- அநீதியாக பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பல்வேறு தரப்புகளாலும் சுட்டிக்காட்டப்பட்ட போதும், அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.

இந்த நிலையானது, இலங்கையில் மாத்திரமல்லஈ பல நாடுகளில் அரங்கேறுகிறது.

இந்தியாவில், மும்பை மாநகராட்சி, கொரோனாவினால் உயிரிழப்பவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சடலத்தை எரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர், அந்த உத்தரவை மும்பை மாநகராட்சி மீளப் பெற்றுக் கொண்டது.

இந்தியா, இலங்கை போன்ற வளரும்  நாடுகளில் மாத்திரம் இந்தப் பிரச்சினை உள்ளதாக எவரும் கருதக்கூடாது. மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இது மோசமான நிலையில் இருக்கிறது.

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர், கனடாவில் உள்ள நண்பர் ஒருவருடன் உரையாடும் போது, அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நியூயோர்க் நகரம் கொரோனாவினால், அதிகளவில், இழப்புக்களைச் சந்தித்து வரும் நிலையில், எதற்காக அமெரிக்கா இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது என்று உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள் ஆபிரிக்க வம்சாவளி கறுப்பினத்தவர்களே என்றும், வெள்ளையர்கள் குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கறுப்பர்களை திட்டமிட்டே இறந்து போக விடுகிறார்கள் என்றொரு தகவல் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தீவிரமாகப் பரவியிருப்பதாகவும், அவர் கூறினார்.

அந்தக் காலகட்டத்தில் போலிச் செய்திகள் அதிகம் பரவிக் கொண்டிருந்தது. இதுவும் அவ்வாறானதொரு ஒரு போலிச் செய்தியாக இருக்கலாம் என்று அதிகம் அக்கறை செலுத்தவில்லை.

ஆனால், இப்போது கிடைக்கின்ற செய்திகள், தரவுகள், என்பன, கனடாவில் இருந்த நண்பர் கூறிய கருத்தை நிரூபிப்பதாக உள்ளது.

அமெரிக்காவில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களின் தொற்றுநோயியல் நிபுணர்களும், மருத்துவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், அங்கு அதிகளவில் கறுப்பு இனத்தவர்களே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர் என்றும், உயிரிழந்திருக்கின்றனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று வெளியான, இந்த ஆய்வு அறிக்கையின் படி, அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 52 வீதமானோர் கறுப்பு இனத்தவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் 58 வீதமானோர் கறுப்பர்கள் என்றும், தெரியவந்துள்ளது.

ஆனால், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் சனத்தொகை 13.4 வீதம் மட்டும் தான்.

வெறும் 13 வீதமுள்ள சனத்தொகையுள்ள கறுப்பர்கள், அதிகளவில் தொற்றுக்குள்ளானதற்கும், உயிரிழப்புகளை சந்தித்து வருவதற்கும், சுகாதாரப் பாதுகாப்பு ஏற்றத் தாழ்வுகள் தான் காரணம் என்ற முடிவுக்கு, அந்த ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள்.

ஜனவரி பிற்பகுதி தொடக்கம் ஏப்ரல் நடுப்பகுதி வரையான காலத்தில் கொரானா தொற்று தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வுகளில்-  ஆபிரிக்க அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் கவுண்டிகளில், பாதிப்புகள் அதிகம் இருந்தது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

அவ்வாறாயின், கறுப்பினத்தவர்கள், சரியான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாமல் சாகடிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படும் தகவல்கள் சரியானவையாகவே தெரிகின்றன.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் தற்போது, 13.4 வீதமாக உள்ள நிலையில், அங்கு தமது பெரும்பான்மை குறைந்து போகிறது என்ற கவலை வெள்ளையினத்தவர்களுக்கு உள்ளது.

இவ்வாறான நிலையில், கொரோனா தொற்றைப் பயன்படுத்தி, அமெரிக்கா ஒரு திட்டமிட்ட இனஅழிப்பை நடத்துகிறதா என்ற சந்தேகங்களை அவ்வளவு இலகுவாக உதாசீனம் செய்ய முடியாது.

அமெரிக்காவில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. 

பிரித்தானியாவில் கூட, கொரோனாவினால் உயிரிழந்திருப்பவர்களில் அதிகளவானோர் ஆபிரிக்க கறுப்பினத்தவர்களும், ஆசிய இனத்தவரும் தான் என, சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள மற்றொரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

பிரித்தானியாவில் கொரோனாவினால் மரணமாகின்றவர்களில், சாதாரண மக்களை விட (வெள்ளையர்) கறுப்பினத்தவர்களும், ஆசிய இனத்தவர்களும் இரண்டு, மூன்று மடங்கு அதிகம் என்று, தேசிய சுகாதார சேவையின் தரவுகளின் அடிப்படையில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வு கூறியுள்ளது,

மார்ச் 1 தொடக்கம் ஏப்ரல் 21 வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

குறித்த காலத்தில், பிரித்தானியாவில் 16,272 பேர் கொரோனாவினால் உயிரிழந்திருந்தனர். அவர்களில், ஆபிரிக்க கறுப்பினத்தவர்களுக்கு மரண ஆபத்து 3.24 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. 

வெள்ளையர்களுடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷிகள் 2.41 மடங்கும், கறுப்பின கரீபியர்கள் 2.21 மடங்கும், இந்தியர்கள் 1.7 மடங்கும், அதிகமான மரண ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகவும், அந்த அறிக்கை கூறியுள்ளது.

இதிலிருந்து அமெரிக்கா,  பிரித்தானியா போன்ற நாடுகளில் வெள்ளையர் அல்லாதவர்கள் கொரோனாவினால் அதிகளவில் உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

இதன் மூலம், இந்த நாடுகளில் ஆபிரிக்க கறுப்பர்கள் உரிய மருத்துவ சுகாதார வசதிகளை பெறமுடியாத நிலையில் இருக்கின்றனரா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

வெள்ளையர் அல்லாதவர்கள், அதிகளவில் சாக விடப்படும் நிலை காணப்படுவது, நடைமுறைச் சாத்தியமா - அதுவும் இந்த நவீன உலகில் அவ்வாறான நிகழ்வுகள் நடக்குமா என்று எண்ணுபவர்களுக்கு இன்னொரு உதாரணம்.

கொரோனா நெருக்கடி தீவிரமடைந்த போது, தொற்றுக்குள்ளாகும் முதியவர்களை காப்பாற்றப் போவதில்லை என்று இத்தாலி அரசாங்கம் பகிரங்கமாகவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

அது நிலைமையை சமாளிக்க முடியாமல் எடுக்கப்பட்ட முடிவாக மாத்திரம் இருக்கவில்லை.

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில், முதியவர்கள் தான் அதிகம் கொரோனாவினால் உயிரிழந்திருக்கிறார்கள்.

குறிப்பாக, கனடாவில் முதியோர் இல்லங்களில் இருந்தவர்கள் தான் பெருமளவில் இறந்து போயிருக்கிறார்கள். அங்கு உயிரிழந்தவர்களில், கால் பங்கினர், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்று தரவுகள் கூறுகின்றன.

பிரித்தானியாவிலும் அதே நிலை தான்.

பிரித்தானிய அரசாங்கம் முதியவர்களை சிகிச்சை அளிக்காமல் சாகடிக்கிறது என்றொரு கருத்து அங்குள்ளவர்களிடம் இருப்பதாக, லண்டனில் வசிக்கும் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னர் கூறினார்.

முதியவர்களை காப்பாற்றுவதால் அரசாங்கத்துக்கு இழப்பு அதிகம். அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் இதனால் மிச்சமாகும் என்று பிரித்தானிய அரசாங்கம் கருதுவதாகவும் அந்த புலம்பெயர் தமிழர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரித்தானியாவின் தேசிய மருத்துவ சேவையினால் வெளியிடப்பட்ட உயிரிழந்தவர்கள் பற்றிய தரவுகளை எடுத்துப் பார்த்த போது, 53 வீதமானோர், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று தெரியவந்தது.

மேலும், 39 வீதமானோர் 60 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதன்படி பார்த்தால், உயிரிழந்தவர்களில் 92 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர்.

முதியவர்களுக்கு தொற்று இலகுவாக ஏற்படும் சாத்தியமும் உள்ளது, குணப்படுத்துவதும் கடினமானது, எனவே இவர்களுக்கு உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனாலும், உரிய சுகாதார வசதிகளின்றி அவர்கள் சாக விடப்படுகிறார்களா என்ற கேள்வி இப்போது அதிகரித்திருக்கிறது.

கொரோனா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பது உண்மையானால், இது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற முன்னணி நாடுகளின் சுகாதார பாதுகாப்பு பற்றிய உயர்ந்த மதிப்பீடுகள் சரிவைச் சந்திக்கும்.

அவ்வாறான மதிப்பை இழக்க இந்த நாடுகள் தயாராக இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது.

ஆனாலும், அவ்வாறான கௌரவ நிலைகளை விட, இனவாதம், நிறவெறி  போன்றன வளர்ந்த நாடுகளைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது தான் உண்மை.

இந்த நாடுகளே இப்படியிருக்கும் போது, இலங்கையின் நிலையை கூற வேண்டியதில்லையே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04