இந்தியாவில் கொரோனா பரவல் மெதுவாக இருந்தாலும் கிரமமாக அதிகரிக்கிறது

Published By: Digital Desk 3

09 May, 2020 | 07:26 PM
image

இந்தியாவில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் மெதுவாக ஆனால் கிரமமானமுறையில் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டுவருகிறது. ஒவ்வொரு 11 நாட்களுக்கும் வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை இரண்டுமடங்காக அதிகரிக்கின்றமை பெரும் கவலை தருவதாக இருக்கிறது என்று ' த இந்து ' பத்திரிகை வெள்ளியன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 2020 மே 6 ஆம் திகதியளவில் புதிய  கொரோனாவைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 52,469 என்றும் அதனால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,771 என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. மிக உயர்ந்த எண்ணிக்கையில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களைக்கொண்ட முதல் 15 நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது இணைந்துகொண்டுள்ளது.

இந்தியாவில் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை உலகம் பூராகவும் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த  எண்ணிக்கையில் 1.41 சதவீதம் மாத்திரமே. ஆனால், ஊரடங்கு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 24 ஆம்திகதி 0.13 சதவீதமாக (536) இருந்த தொற்று தற்போது நடைமுறையில் உள்ளவாறு ஊரடங்கு நீடிக்கப்பட்டபோது விகிதாசாரத்தில் 0.58 சதவீதமாக (11,487) அதிகரித்திருக்கிறது.

அமெரிக்காவில் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை பெரும் வீச்சுடன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்ச் 6 ஆம் திகதி அந்த நாட்டில் தொற்றின்  எண்ணிக்கை 12 இலட்சத்துக்கும் மேலானதாக இருந்தது. அது அன்று உலக மொத்த தொற்றில் சுமார்  மூன்றில் ஒரு (32.7 சதவீதம் )  பங்காகும்.

பாரதூரமாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயின்,ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, துருக்கி மற்றும் ஈரான் போன்ற நாடுகளில்   புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவிலான குறைவு இறுதியில்  ஏற்பட்டிருப்பதாக தோன்றுகின்ற அதேவேளை, துரிதமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களான பிரேசில் மற்றும் ரஷ்யாவில் தொற்று தொடர்பான வரைகோடு கிடைமட்டமாகியிருப்பதாக தெரியவில்லை.இவற்றில்  வைரஸ் தொற்று பெரியளவில் தொடர்ந்து அதிகரிக்கின்றது. இது இந்த நாடுகளில் முறையே 7 நாட்களில், 9 நாட்களில் தொற்று இரண்டுமடங்காவதை காட்டுகிறது.

பிரேசிலில் வைரஸ் பரவலினால் 7,921 பேர் மரணமடைந்திருப்பதாக பதிவாகியிருக்கிறது. இந்தியாவிலும் ( 1,771) ரஷ்யாவிலும் (1,451) மரணமடைந்தோரின் எண்ணிக்கையை விடவும் இது மிகவும் அதிகமாகும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கவலைக்குரியதாக இருப்பது 11 நாட்களக்கு ஒரு தடவை வைரஸ் தொற்று இரண்டுமடங்காக அதிகரிப்பதேயாகும். கடந்தவாரம் ஏற்பட்ட அதிகரிப்பு தொற்றுக்குள்ளாவோரினதும் மரணமடைவோரினதும் எண்ணிக்கைகள் ஏறுமுகமாக இருக்கின்ற பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளுடன் இந்தியாவை  பிணைத்திருக்கிறது.

உலக நாடுகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையி்ல் உள்ள  ஊரடங்குகளை விடவும் மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்தகைய ஊரடங்கு இரு தடவைகள் நீடிக்கப்பட்டபோதிலும் கூட வைரஸ் தொற்று வரைகோட்டை  கிடைமட்டமாக்க முடியாமல் போய்விட்டது. இது ஊரடங்கு அவசியமானதாக இருந்திருந்தாலும் போதுமானதாக இல்லை என்பதையே காட்டுகிறது.

வைரஸ் பரவலை கணிசமானளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கக்கூடிய நாடுகள் பெரும்பாலும் தொற்றுநோய் பரவத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்திலேயே தொற்றுக்குள்ளானோரையும் அவர்கள் தொடர்பு வைத்திருந்திருக்கக்கூடியவர்களையும் நேரகாலத்தோடு கண்டுபிடித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தன. பரவலைக்  கட்டுப்படுத்திய நாடுகள் மத்தியில் பொதுவாக ஒரு அம்சமாக இதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.சமூக மருத்துவப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பின் மூலமாகவே தென்கொரியா போன்ற சில நாடுகளினால் வைரஸ் தொற்று வரைகோட்டை இலகுவாக  கிடைமட்டமாக்கக்கூடியதாக இருந்தது.

ஆனால், இந்தியாவில் அந்தளவுக்கு உயர்ந்த வீதத்தில் பரிசோதனைகளைச் செய்வது எப்போதுமே சுலபமானதாக இருக்காது.ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனை நடைமுறைகளுக்குள் கூட, உன்னிப்பான மேற்பார்வையுடன்  கூடிய பரிசோதனையும் கண்காணிப்பு தந்திரோபாயமும் கேரளா போன்ற மாநிலங்களில் பயனைத் தந்திருக்கிறது.

வைரஸ் தொற்றில் சடுதியான அதிகரிப்புகளைப் பதிவுசெய்திருக்கும் தமிழ்நாடு, ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற ஏனைய மாநிலங்கள் மருத்துவப் பரிசோதனையையும் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்படுபவர்களை தனிமைப்படுத்தும் செயன்முறைகளையும் தொடர்ந்து தீவிரப்படுத்தினால் மாத்திரமே ஊரடங்கு தந்திரோபாயம் பயன்தரகூடியதாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, இந்த மாநிலங்கள், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைப் போலன்றி வைரஸுக்கு சொற்ப எண்ணிக்கையானவர்களையே பலிகொடுத்திருக்கின்றன. மகாராஷ்டிராவும் குஜராத்தும் தினசரி  மருத்துவப் பரிசோதனையில் தேசிய சராசரியையும் விட கூடுதல் மட்டத்தில் இருக்கின்ற அதேவேளை, மேற்கு வங்கமும் மத்திய பிரதேசமும் அது விடயத்தில் தேசிய சராசரியையும் விட குறைந்த மட்டத்திலேயே இருக்கின்றன.

காலவரையறையின்றி ஊரடங்கு நடைமுறைப்படுத்தலை இந்தியாவினால் தாங்கமுடியாது. மருத்துவப் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி பொதுச்சுகாதாரக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதே இந்தியாவுக்கு சிறந்த வழியாகும் என்றும் ' த இந்து ' பத்திரிகை எழுதியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04