(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு கடத்திச் செல்லுவதற்காக கொண்டு வரப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சாவினை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் அதனுடாக பாரிய கடத்தல் முயற்சியொன்றையும் முறியடித்துள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட அக்கரை கடற்பகுதியில் வைத்தே இப் பாரிய கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக் கடத்தல் முயற்சி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அக்கரை கடற்பகுதியினுடாக இருவர் 100 கிலோ கேரள கஞ்சாவினை கடத்தி வந்துள்ளனர். இவ்வாறு கடத்தி வரப்பட்ட கஞ்சாவை குறித்த பகுதியில் வைத்து வேறொருவருக்கு கைமாற்ற முயற்சித்துள்ளனர். இந்நிலையில் இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் குறித்த கடற்கரை பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது இன்று அதிகாலை நான்கு மணியளவில் குறித்த கடற்கரைப் பகுதிக்கு இருவர் மேற்படி கேரள கஞ்சாவினை கடத்தி வந்திருந்த நிலையில் அதனை இங்குள்ள கடத்தல்காரர்களிடம் கையளிப்பதற்காக வைத்துக்கொண்டிருக்கும் போது விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கடத்தல்காரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்த 100 கிலோ கேரள கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி விஷேட அதிரடிப்படையினர் 45 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர். இதன்போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மாதகல் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் வளளாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக விஷேட அதிரடிப்படை அதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட இரு நபர்களும் கேரள கஞ்சாவும் அச்சுவேலி பொலிஸார் ஊடாக நீதீமன்றில் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்திருந்தார்.