போற்றிய மக்களே தூற்றும் நிலை

03 May, 2020 | 05:07 PM
image

-சுபத்ரா

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில்,  அரசபடையினர் வெற்றியைப் பெற்று இன்னும் இரண்டு வாரங்களில், 11 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.

போரில் வெற்றியீட்டிய அரச படையினரை சிங்கள மக்கள் எப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் என்பதை இப்போது கூறித் தெரிய வேண்டியதில்லை.

அந்தளவுக்கு சிங்கள மக்களால்  முப்படையினரும், மதிப்பு மிக்கவர்களாக பார்க்கப்பட்டார்கள். மதிக்கப்பட்டார்கள்.

ஆனால், அந்த மதிப்பு இப்போது என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

அதிலும், கடற்படையினரின் மதிப்பை, சோதனைக்குள்ளாக்கி விட்டது இந்த கொரோனா வைரஸ் தொற்று.

இந்தத் தொற்று இலங்கையில் பரவத் தொடங்கிய போது, அதனை எதிர்கொள்வதற்கான- முறியடிப்பதற்கான பொறுப்பு முப்படைகளிடமே கொடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இராணுவப் பின்னணியைக் கொண்டவர் என்பதாலும், அவர் சிவில் அதிகாரிகளை விட சீருடை அதிகாரிகளையே அதிகம் நம்பக் கூடியவர் என்பதாலும், முப்படைகளிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர், இலங்கை இராணுவம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் கொரோனா தான் என்றும், இது புலிகளை விடவும் பலம் வாய்ந்த எதிரி என்றும், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் பெற்றிருந்த கீர்த்தியை, ஆயுதப்படைகள் இன்னும் உயர்த்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ளலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில் தான், அவர்களுக்கு முழுமையாக இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.

அந்த வாய்ப்பை அவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர் என்பதிலும் சந்தேகமில்லை.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், அரச படைகளின் பங்கு குறைத்து மதிப்பிடக் கூடியதன்று. அவர்களை ஒதுக்கி விட்டு இந்தப் பணியில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான்.

அதேவேளை, அரசபடைகளின் மிகையான செயற்பாடுகள், தலையீடுகள குறித்த விமர்சங்களையும் இந்தத் தருணத்தில் புறமொதுக்கி விட முடியாது.

புலிகளைப் போலவே, கொரோனாவையும் ஒழித்து விடுவோம் என்று கூறிக் கொண்டு களமிறங்கிய அரசபடைகளுக்கு, இது மிகவும் சோதனையான நேரம் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், புலிகளைக் கூட அவர்கள் இலகுவாக வெற்றி கொண்டிருக்கவில்லை. அதற்காக அவர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது, ஆயிரக்கணக்கானோரை இழக்க வேண்டியிருந்தது.

புலிகளுடனான போரில் ஏற்பட்டளவுக்கு, கொரோனாவினால் படையினருக்கோ, பொதுமக்களுக்கோ உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால், முன்னரைவிடப் பேரளவு பொளருளாதார இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது.

புலிகளுடனான போரை விட வேறுபட்டதொரு பாணியில் போராட வேண்டிய நிலை அரச படைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

புலிகளை வென்றது போல, கொரோனாவையும் வெல்வோம் என்று இலட்சியமாக கூறப்பட்ட கருத்துக்களுக்கு இப்போது தான் உண்மையான சவால் உருவாகியிருக்கிறது.

இந்தச் சவால், கொரோனாவை எதிர்கொள்வதில் ஏற்பட்டதல்ல. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை எந்தக் கடினமான சூழலிலும் முன்னெடுப்பதில் அரச படைகளுக்கு சிக்கலாக இருக்காது.

அதற்கு அப்பால், யாரால் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார்களோ அவர்களாலேயே வெறுத்து ஒதுக்கப்படுகின்ற – இழிவுபடுத்தப்படுகின்ற நிலையை- படையினருக்கு ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் கொரோனா.

சொந்த இடங்களுக்கு விடுமுறையில் சென்ற கடற்படையினரும், அவர்களின் குடும்பத்தினரும், இழிவுபடுத்தப்படுகின்றனர் என்றும், அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கெஞ்சும் தொனியில் கோரிக்கை விடுத்திருக்கிறார் பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

இவ்வாறானதொரு நிலை இதற்கு முன்னர் இலங்கையின் எந்தவொரு பாதுகாப்புச் செயலருக்கும் ஏற்பட்டதில்லை.

படையினரின் சார்பாக, சிங்கள மக்கள் முன்பாக மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை. ஏனென்றால், சிங்கள மக்கள் மத்தியில் அரசபடைகளுக்கு அந்தளவு மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது.

இவை எல்லாவற்றையும் ஓரிரு நாட்களிலேயே கடற்படை இழந்து போயிருப்பது கவனிக்கத்தக்க விடயம்.

கடற்படையினர் நாட்டுக்காக என்று எத்தகைய சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், அதைப் பற்றி இத்தகைய கட்டத்தில் சிந்திக்கக் கூடிய நிலையில் யாரும் இல்லை.

தமக்கு, தமது அயலுக்கு அவர்களால் நெருக்கடி அல்லது பாதிப்பு வரக் கூடும் என்ற அச்சம் வரும் போது, அவர்கள் இவ்வாறானதொரு மனநிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எச்ஐவியினால் பாதிக்கப்பட்டவர்களை வெறுப்புடன் பார்க்கின்ற அச்சத்துடன் நோக்குகின்ற ஒரு நிலை இருந்தது.

அதுபோன்றதொரு நிலையில் தான் இப்போது கடற்படையினர் இருக்கின்றனர்.

கடற்படையினரின் மூலம், தொற்று இனி பரவாமல் கட்டுப்படுத்தி விடுவோம் என்று பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும், கடற்படைத் தளதிபதியும் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாலும் நிலைமைகள் சாதகமாக மாறுவதாகத் தெரியவில்லை.

இதுதான் இப்போது அரசாங்கத்துக்கு இருக்கின்ற முக்கியமானதொரு சிக்கல்.

படையினர் மதிப்புமிக்கவர்களாக பார்க்கப்பட்ட ஒரு நிலை சடுதியாக மாறி, அவர்களை எதிரியாகவோ, துரோகியாகவோ பார்க்கின்ற நிலை உருவாகியிருக்கிறது,  இந்த நிலைக்கு கடற்படையும் ஒரு காரணம் தான்.

இந்தளவுக்கு கடற்படயினர் மத்தியில் தொற்று பரவுகின்ற அளவுக்கு வெலிசற கடற்படைத் தளத்தில் போதுமான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்த தொற்றும் பல கட்டங்களாகப் பரவி, அது விடுமுறையில் சென்ற படையினர் மூலம் காவிச் செல்லப்படும் வரைக்கும், தமது கோட்டைக்குள் கொரோனா ஒளிந்திருக்கிறது என்பதை கடற்படையே தெரியாமல் இருந்திருக்கிறது.

இந்த தவறு தான், கடற்படையை இன்று கூனிக் குறுகி நிற்க வைத்திருக்கிறது.

தெற்கில் கடற்படையின் நிலை இதுவென்றால், வடக்கில் சில கிறிஸ்தவசபைகளின் நிலையும் அதுவாகத் தான் இருக்கிறது.

வடக்கிற்கு கொரோனாவைக் கொண்டு வந்து சேர்த்த பெருமை, இத்தகையதொரு சபைக்கே உரியது.

இல்லாவிடின் வடக்கின் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போல யாழ்ப்பாணமும் பாதுகாப்பானதாக, இருந்திருக்கும்.

அத்தகைய நிலை ஒன்றை கெடுத்து, வடக்கிலுள்ள மக்களின் வயிற்றெரிச்சலையும், கோபத்தையும் கொட்டிக் கொண்வடர் சுவிசில் இருந்து வந்த மத போதகர்.

அவர் ஒரு நோய்க் காவியாக வந்து சென்றது உறுதியான பின்னர், அவரைப் போன்ற கிறிஸ்தவ சபைகளின் மீது மக்களின் கோபம் திரும்பியிருக்கிறது.

இதனால், பலர், தாங்கள் அந்த சபை இல்லை அது வேறு சபை என்று தப்பிக் கொள்ளப் பார்க்கின்ற  நிலை சாதாரணமாக உள்ளது.

வடக்கில், கிறிஸ்தவ போதகர்கள் மதிப்புவாய்ந்தவர்களாக பார்க்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. வடக்கின் கல்வி மறுமலர்ச்சியில், கிறிஸ்தவ போதகர்கள், சபைகளின் பங்கு அபரிமிதமானது.

ஆனால், அந்த நிலையை சடுதியாக மாற்றி விட்டிருக்கிறது கொரோனா. அதற்கு சுவிஸ் போதகரே முக்கிய காரணம்.

அவரோ அல்லது தெற்கில் கடற்படையினரா வேண்டுமேன்றே நோய்க்காவிகளாக சமூகத்துக்குள் திரியவில்லை.

ஆனாலும், அவர்களை மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது கொரோனா.

வடக்கில் கிறிஸ்தவ சபைகளும், தெற்கில் கடற்படையும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது கொரோனாவுக்குப் பிந்திய சூழலில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அது எந்தளவுக்கு வீரியமானதாக இருக்கும் என்ற கேள்விக்கு விரைவிலேயே விடை கிடைக்கக் கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21