முடக்கப்பட்ட படையினர் !

03 May, 2020 | 11:07 AM
image

சத்திரியன்

சீதுவயில் உள்ள,  இராணுவத்தின் விசேட படைப்பிரிவு முகாமுக்கு முன்பாக,  கடந்த 2 6ஆம் திகதி காலையில் பொது சுகாதார அதிகாரிகளால்,  தனிமைப்படுத்தல் அறிவித்தல்  சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அந்த முகாமின்  கட்டளை அதிகாரியான மேஜருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதற்கு முதல் நாளே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அந்த இராணுவ அதிகாரியின் மனைவி வெலிசற கடற்படை முகாமில்  பணியாற்றி வந்தவர்.  அவர் மூலமே,  மேஜருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

இதையடுத்து,   150 விசேட படையினர் தங்கியிருந்த சீதுவ இராணுவ முகாம்  தனிமைப்படுத்தப்பட்டது.  மே 9ஆம் திகதி வரை,  அங்கிருந்து யாரும் வெளிச் செல்வதற்கும், உள் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமுக்கு முன்பாக, தனிமைப்படுத்தல் சீல் வைக்கும் அறிவித்தலை பொது சுகாதார அதிகாரிகள் ஒட்டுகின்ற படங்கள், ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

அதற்கடுத்த நாள், பாதுகாப்பு அமைச்சில் இருந்து ஒரு  அறிக்கை வெளியிடப்பட்டது.

பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்ற கோரப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியாகிய போது, சுமார் 150 வரையான கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

கொரோனா தொற்று பரவல் தீவிரமான கட்டத்துக்குள் நுழைந்திருந்த அந்த நிலையில், நாடெங்கும், தீவிரமான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.

ஏனென்றால், வெலிசற கடற்படை முகாமுக்குள் கொரோனா தொற்று மிக தீவிரமாகப் பரவியிருந்தது. அங்கிருந்து விடுமுறையில் சென்ற படையினர் மூலம், அது நாட்டின் பிற பகுதிகளுக்கும் சென்றிருந்தது.

அதுவரை பாதுகாப்பான மாவட்டங்களாக இருந்த அம்பாந்தோட்டை, திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களும், அதற்குப் பின்னரே கொரோனா பீதிக்குள் உறைய ஆரம்பித்தன.

விடுமுறையில் வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர், அவர்கள் செல்லும் போது எங்கெங்கு சென்றனர், எதில் பயணம் செய்தனர், யாருடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்ற விபரங்களைத் திரட்டுவதிலும், விடுமுறையில் இருந்த போது அவர்கள் யார் யாருடன் தொடர்புகளை பேணினார்கள், என்பதைக் கண்டறிவதிலும், சுகாதார அதிகாரிகளும், புலனாய்வுப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டிருந்த தருணம் அது.

ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்த ஊரடங்குச் சட்டம் , அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் ஒன்றரை மாதங்களாக தூக்கமின்றி நடத்துகின்ற போராட்டம் எல்லாமே, வீண் போய் விடக் கூடிய ஆபத்து தோன்றியிருந்தது.

விடுமுறையில் சென்ற படையினரை கண்டறிந்து அவர்கள் மூலம் தொற்று ஏற்படக் கூடியவர்களை அடையாளப்படுத்துவதற்காக அவசர அவசரமாக சுற்றிவளைப்புகள், தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், விசாரணைகள், தனிமைப்படுத்தல் அறிவித்தல் ஒட்டப்படுதல் எல்லாமே, தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

இவ்வாறானதொரு நிலையில் தான், ஊடகங்களை பொறுப்புடன் செயற்படுமாறும்,  தனிநபர்கள் பற்றிய வீடியோக்களை, படங்களை வெளியிடுவதை நிறுத்துமாறும் பாதுகாப்பு செயலர் கோரியிருந்தார்.

தொற்றுக்குள்ளான தனிநபர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறும், அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள், வீடுகளில் நடத்தப்படும் தேடுதல்கள் குறித்த படங்களை வெளியிடுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு முன்னதாக, இலங்கையில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு மற்றும் பரவல் ஆரம்பித்த காலத்தில்,  அரசாங்கத்தினால் ஊடகங்களுக்கு ஒரு வழிகாட்டுதல் அறிவிப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, தொற்றுக்குள்ளானவர்களின் படங்கள் அல்லது பெயர் விபரங்களை அவர்களின் ஒப்புதலின்றி வெளியிடக் கூடாது.  பாதிக்கப்பட்டவர் அல்லது இறங்தவர்களின் இனம், மதம் போன்ற அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதற்குக் காரணம், ஆரம்பத்தில் தொற்றுக்குள்ளானவர்கள்  சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதனை வைத்து அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான நிலை தீவிரமடைந்த கட்டத்தில் தான், அரசாங்கம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட தடைவிதித்தது.

அது மாத்திரமன்றி, கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிலரின் இறுதிச் சடங்குகள் விடயத்திலும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இஸ்லாமியர்களின் மத வழக்கத்துக்கு மாறான இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனால் அரசாங்கம் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

இவ்வாறான எதிர்ப்புகள் தீவிரமாக பரவுவதை தடுப்பதற்கு, அடையாளங்களை மறைப்பது அரசாங்கத்துக்கு, பாதிக்கப்பட்டவர்களின் அவசியமாக இருந்தது.

ஆனாலும், சில நாட்களுக்குத் தான் ஊடகங்கள் அந்த உத்தரவுக்கு மதிப்பளித்தன. பின்னர், ஒவ்வொரு ஊடகமாக பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அடையாளப்படுத்த ஆரம்பித்து விட்டன.

ஆனால் அரசாங்கம் அப்போது அதனைக் கண்டு கொள்ளவில்லை.

கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் தொற்று தீவிரமடையத் தொடங்கியதும், அது படையினருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

புலிகளையே வென்ற எமக்குக் கொரோனாவை வெல்வது ஒன்றும் கடினமில்லை என்று கூறிக் கொண்டிருந்த அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும், வெலிசற, சீதுவ இராணுவ முகாம்களுக்குள் தொற்று ஏற்பட்ட பின்னர் தான் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

காற்றுப் புகாத இடத்திலும் கரும்புலிகள் புகுவார்கள் என்று முன்னர் கூறப்படும் ஒரு காலம் இருந்தது. ஆனால், இப்போது புலிகள் புகாத இடங்களுக்குள் கூட கொரோனா புகுந்து விளையாட ஆரம்பித்திருக்கிறது,

புலிகளின் காலத்தில் அவர்களின் அச்சுறுத்தலால் கூட முடங்கிப் போகாத தளங்கள், இப்போது முடக்கப்பட்டுக் கிடக்கின்றன.

போர்க்காலம் போல மாறியுள்ள தற்போதைய நிலையிலும் கூட, முகாம்களை விட்டு வெளியேற முடியாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் 4000 வரையான படையினர்.

முன்னர் வடக்கில் உள்ள முகாம்களுக்குள் படையினர் முடக்கி வைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது.

முகாம்களைச் சுற்றி புலிகள் காவல் அரண்களை அமைத்து நிலை கொண்டிருப்பார்கள். முகாம்களுக்குள் படையினர் இருப்பார்கள்.

படையினர் வெளியே வர முனைந்தால் சண்டை மூளும், இரு தரப்புக்கும் சேதங்கள் விளையும்.

படையினர் அப்போது வெளியே வந்தால், அது புலிகளுக்கு மாத்திரமான இழப்பாக மட்டும் இருக்காது, பொதுமக்களுக்கும் இழப்பாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு அநியாயங்கள் நிகழ்ந்தேறும். அதுபோன்ற நிலைதான் இப்போதும்.

ஆனால் புலிகள் இப்போது இல்லை. ஆனாலும், கடற்படையினரையும், இராணுவத்தினரையும் முடக்கி வைத்திருக்கிறது கொரோனா.

இப்போதும் கூட படையினர் முகாம்களை விட்டு வெளியே வந்தால், கொரோனா அவர்களைத் தாக்குகிறதோ இல்லையோ, வெளியே இருக்கும் பொதுமக்களைப் பாதிக்கும்.

எனவே தான், சீதுவை, வெலிசற போன்ற தளங்களுக்குள் படையினர் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், ஊடகங்கள் படையினரின் முடக்கத்தை பெரிதுபடுத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை. குறிப்பாக பாதுகாப்புத் தரப்பு விரும்பவில்லை.

ஏனென்றால் அது அவர்கள் பற்றிய ஒரு மதிப்பீட்டை- அவர்கள் மீதான ஒரு இமேஜை உடைத்து விடக் கூடும் என்ற அச்சம் தெற்கில் பரவலாக இருக்கிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் கூட இந்த இமேஜை பாதுகாத்துக் கொள்வதற்காகத் தான், ஆரம்பத்திலேயே படையினரை கொரோனா தடுப்பு நவடிக்கைகளில் களமிறக்கியிருந்தார்.

தொடக்கத்தில் படையினரின் பணியை பொதுமக்கள் பாராட்டி வந்தாலும், போகப் போகத் தான், இதன் விபரீதத்தை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

படையினர் மத்தியில் பரவுகின்ற கொரோனா இப்போது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது, அச்சமடைந்துள்ள மக்கள், படையினரைக் கண்டால் ஓடி ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கிறது.

இவ்வாறான நிலையில் வடக்கில் காணப்பட்டால் அது ஆச்சரியமில்லை. தெற்கில் இருப்பது ஆச்சரியம் என்பதை விட, ஆட்சியாளர்களுக்கு ஆபத்தானது என்பதே சரியானது.

படை பலத்தைக் கொண்டு கட்டியெழுப்பிய ஒரு அதிகார விம்பத்துக்கு இப்போது அடி விழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அந்த விம்பம் உடைபட்டுப் போனால், அது நிச்சயமாக கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தின் அரசியல் செல்வாக்கிற்கும் ஆபத்தாகவே அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13