இலங்கைத் தேர்தல் : விட்டுக் கொடுப்பா விடாப்பிடியா?

03 May, 2020 | 10:59 AM
image

''நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்துவிடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது

கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்''

1962 ஆம் ஆண்டு வெளியான தாயைக் காத்த தனையன் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளே இங்கு தரப்பட்டுள்ளன.  இந்தப் படம் மாபெரும் வெற்றியடைவதற்கு அதில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் ஒரு காரணம்.

கவியரசர் கண்ணதாசனின் எக்காலத்துக்கும் பொருந்தும் இந்த வரிகளே இப்போது இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது. ஜனநாயகத்தில், அரசியல் யாப்பும் பாராளுமன்றமுமே தாயும் தகப்பனும். தாய்க்கு ஆபத்தென்றால் தனையன் பொங்கி எழுவான். 

இலங்கை  மக்கள் கொரோனா நோயின் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும், இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று கவலை கொண்டுள்ள வேளையில், அரசியல்வாதிகளோ கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படுமா இல்லையா என்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன.

இந்நிலையில் நாளை திங்கட்கிழமை மே மாதம் 4 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அலரி மாளிகையில் கூட்டியுள்ள-கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் கூட்டத்தில்-எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளாது என்று மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.  

``அவரது அழைப்பை ஆழமாக அராய்ந்த பிறகே இந்த முடிவு எட்டப்பட்டது, முறையான நிகழ்ச்சி நிரல் ஏதுமின்றி பிரதமர் அந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்`` என்கிறார் மனோ கணேசன்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்று ஏழு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, விடயம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அந்தக் கடிதத்திலுள்ள கோரிக்கையை நிராகரித்துள்ள ஜனாதிபதியின் செயலர், `எதிர்க்கட்சிகள் அற்பத்தனமான அரசியல் வழிமுறைகளில் ஈடுபடுகின்றன` என்று கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட தனக்கு அதிகாரமும் இல்லை, அதற்குச் சட்டத்தில் வழியும் இல்லை எனும் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பௌத்த மதகுருமார்கள் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நோயின் தாக்கம் தொடர்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை மகா சங்கத்தினரிடம் ஜனாதிபதி விளக்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் நோயை எதிர்த்துப் போராடுவதில் அனைத்துத் தரப்பினரின் சேவைகளையும் ஆதரவையும் அவர் பாராட்டியுள்ளார்.

அதே கூட்டத்தில், தேர்தலின் மூலம் மக்கள் தனக்கு அளித்த வெற்றியை அடுத்து, அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பலமான புதிய நாடாளுமன்றம் தேவை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ளக் கூடாது என்பதை மகா சங்கத்தினர் ஏகமனதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் யாப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக நலன், ஆரோக்கியம். கொள்கை முடிவுகள் போன்ற அனைத்து விஷயங்களிலும் பௌத்த மதகுருமார்களின் கருத்துக் கேட்கப்பட்டு அதன்படி நடக்க வேண்டுமா? என்பது குறித்து சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

தேசிய பேரிடர் தொடர்பில், அனைத்து மதகுருமார்களையும், ஒன்றாக ஜனாதிபதி சந்தித்திருந்தால் அது சிறப்பாகவும், அவர் மீதான நல்லெண்ணம் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பாக இருந்திருக்கும்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நாடாளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும் என்று வண. நியாங்கொட விஜிதசிறி தேரர், அந்தக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஆனால் இதே குருமார்கள் அந்த நெருக்கடியை அப்போதே சுட்டிக்காட்டி அதை சீர் செய்ய என்ன செய்தனர் என்கிற கேள்விக்கு விடையில்லை. அனைத்து ஆட்சியாளர்களும் அதியுயர் பௌத்த பிக்குகள்  மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள நிலையில், அவர்கள் உரிய நேரத்தில் அதற்குத் தீர்வு காண அழுத்தமும் ஆலோசனையும் அளித்திருந்தால், நாடு இன்று எதிர்கொள்வதாக அவர்கள் கூறும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம். 

‘கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி மற்றொரு நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை` என்று கடந்த வாரம் கூறிய   சபாயநாயகரும் அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான கரு ஜயசூரிய, பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு அதைக் கூட்டுவது தொடர்பிலும், தேர்தலுக்கான திகதியை அறிவிப்பது தொடர்பிலும் பல கேள்விகள் தொடர்ந்து எழுந்துள்ளன.

முதலாவதாக, இலங்கையின் தேர்தல் திணைக்களம் சுயாதீனமானது மற்றும் சுதந்திரமானதா? என்ற கேள்வி எழுகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நாட்டில் ஏற்பட்டுள்ள `நெருக்கடி` காரணமாகத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத, ஜனாதிபதியின் செயலர் அது ஆணையத்தின் முடிவு என்று `நறுக்கான` பதிலை அளித்திருக்கிறார்.

தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமானது என்றால், ஏன் அவர்கள் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் நேரடியாக நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்காமல் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்கள் என்பது தெரியவில்லை. இரு தசாப்தங்களுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைப்பு தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை ஏன் தேர்தல் திணைக்களம் கவனத்தில் எடுக்கவில்லை?  (Karunatilleke v Dissanayake, 1999 1 Sri LR 157)

அரசியலமைப்புக்கு  மாறுதலாக மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்த அப்போதைய தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கவை உச்சநீதிமன்றம் கண்டிக்கவும் செய்தது. சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தின் கருத்தை அவர் கேட்டிருக்கலாம் என்றும், அவ்வாறான வழிமுறைகளை அவர் கையாளவில்லை என்றும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பை எழுதிய காலஞ்சென்ற நீதியரசர் எம் டி எச் ஃபெர்ணாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் அனைவரையும் மழுங்கடிக்கச் செய்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

நீதித்துறையும் சட்டமா அதிபரின் திணைக்களமும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முடங்கியுள்ள சூழலில், அசாதரணமான சூழலில் ஜனாதிபதி எப்படிச் செயல்பட வேண்டும் என்று காவி உடுத்தும் அரசியல் யாப்பு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மறுபக்கம்--மாற்றங்களுக்கு உட்பட்டு--தற்போது நிர்ணையிக்கப்பட்டுள்ள திகதியான ஜூன் 20 அன்று தேர்தல் நடைபெறவேண்டுமாயின் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை கொரோனா தொற்று இல்லாத நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு நேரம் கொடுத்து, சுதந்திரமும் நேர்மையும் கூடிய வெளிப்படையான தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

``இலங்கைத் தேர்தல்களில் சராசரியாக 75-80% வரை பதிவு செய்யப்பட்ட வாக்களார்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்வார்கள். கோவிட்-19 தொற்று காரணமாக அதில் 10 வீதம் வீழ்ச்சியடையக் கூடும், ஆனாலும் 60% கீழ் வாக்குப்பதிவு இருக்குமாயின் அந்த வாக்களிப்பின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள்`` என்றும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

அப்படியென்றால், பெருவாரியான மக்கள் நோய் அச்சமின்றி வந்து வாக்களிக்க வழி செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டியக் கடப்பாடு தேர்தல் திணைக்களத்துக்கு  உள்ளது.  எனினும் ஜூன் 20 அன்று தேர்தல் நடைபெறும் என்று உறுதியாகக் கூற முடியாது என்கிறார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர்.

இந்த நிலைப்பாடு, ‘`பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்`` எனும் வகையில் உள்ளது.

இச்சூழலில் கொழும்பு பல்கலைக்கழகத்தின்   பேராசிரியரும் இலங்கை சட்டத்துறையில் ஒரு முக்கிய ஆளுமையான சாவித்ரி குணசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் அனைவரும் கவனிக்க வேண்டும்.

கொரோனோ நோய் தடுப்புச் செயல்பாடுகளில் ஜனாதிபதி மற்றும் சுகாதாரத்துறையினரின் பங்கை அவர் மிகவும் புகழ்ந்து, இது தொடர்பில் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ளார்.

ஆனால், தேர்தல் நடவடிக்கை குறித்து மிகத் தெளிவாக அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளதைத் தனது பார்வையில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

‘`பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, புதிய தேர்தலுக்கான திகதியை அறிவிப்பது தொடர்பிலான அதிகாரம், அரசியல் யாப்பு மற்றும் தேர்தல்கள் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது, வேறு எவருக்கும் இல்லை``

பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட   வர்த்தமானியில்  குறிப்பிட்டிருந்த தேர்தல் திகதியை மாற்றி தேர்தலை ஒத்திவைப்பதென்றால் அவர் அரசியல் யாப்பின் ஷரத்து 70 (7)  ஐ அவர் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள பேராசிரியர் சாவித்ரி குணசேகர, அப்படிச் செய்வதானால், அந்த ஷரத்தின் கீழ் ``நெருக்கடியான ஒரு சூழல்`` இருப்பதைச் சுட்டிக்காட்டி, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டியே செய்ய முடியும் என்று விளக்கியுள்ளார். 

அவரது கருத்துப்படி சுருங்கச் சொல்வதானால், அரசியல் யாப்பின் ஷரத்து 33 (1) (டி) இன் கீழ், ``தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கு அமைய, சுதந்திரமான, நேர்மையான வகையில் தேர்தலை நடத்த உரிய சூழல்களை ஏற்படுத்த ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார். எனவே ஜனாதிபதியின் பொறுப்புகளைத் தேர்தல் ஆணைக்குழு எடுத்துக் கொள்ள முடியாது, மாறாக, அந்தச் சட்டத்துக்கு அமைய, அதில் கூறியுள்ள கடமையை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு உதவி செய்ய வேண்டும்.

எனவே கொரொனா நோய் போன்ற தேசிய நெருக்கடி நிலவும் சூழலில், அந்த நெருக்கடி காலம்வரை கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவது பொதுநலன் மட்டுமல்ல ஜனாதிபதியின் நலனுக்கும் வலு சேர்க்கும். அவ்வாறு கூட்டப்படும் நாடாளுமன்றம் குறுகிய காலத்துக்கு, குறைந்த அளவே கொண்ட அதிகாரங்களுடன் செயல்பட முடியும். இதில் எத்தரப்பும் அரசியல் செய்யமல் இருக்க வேண்டியது அவசியம்.

நாளை, திங்கட்கிழமை மே 4 ஆம் திகதி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அழைத்துள்ள கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அந்தக் கூட்டத்தில் அரச தரப்பின் கருத்துக்களைப் பிரதமர் முன்வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகே முடிவெடுக்கும் அதிகாரம் யார் கையில் உள்ளது—அதியுயர் நீதிமன்றத்திடமா அல்லது அதியுயர் மதகுருமார்களின் ஆசிபெற்ற ஆட்சியாளர்களிடமா என்பது தெரிய வரலாம். ஜனநாயகத்தின் தாயும் தகப்பனுமான அரசியல் யாப்பைபும் பாராளுமன்றத்தையும் காக்க தனையன் பொங்கி எழுவாரா?

(சிவா பரமேஸ்வரன் – மூத்த செய்தியாளர் லண்டன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22