முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு 500 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை. அவருக்கு 80 பேரே பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளனர் என்றும் நேற்று சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது சபையில் எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல முன்னாள் ஜானதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் அரசுக்கு அக்கறையுள்ளது. அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கியுள்ளோம் என்றும்  தெளிவுபடுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பாக தினேஷ் குணவர்தன எம்.பி மேலும்  தனது உரையில்  

 நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க  முன்னாள் ஜனாதிபதிக்கு 500 படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், அதேவேளை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த 500 படையினரின் பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளதாக  பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் கிடையாது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு 80பேரே உள்ளனர். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களின் காடுகளில் தஞ்சம் புகுந்து பெண்கள் விடுத்த அவல குரலை நீக்கி குடும்பங்களை பாதுகாத்தவர் முன்னாள் ஜனாதிபதியாவார்.

எனவே அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதைவிடுத்து பொய்யான வரவு செலவுத்திட்டத்தை முன்னெடுத்தது போன்று. பொய்யான தகவல்களை முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் வெளியிடவில்லை என்றார்.

இதன் போது சபையில் விளக்கமளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் அரசுக்கு அக்கறை உள்ளது. அவருக்கு போதியளவு பாதுகாப்பை நாம் வழங்கியுள்ளோம்.

அவருக்கு தேவையான பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொண்டு அதனை வழங்கியுள்ளோம் என்றார்.