தமிழக அரசியல் வரலாற்றில் 'கச்சதீவு' பற்றி பல விடயம் ஒரு தொடர்கதையாக உள்ளது. தேர்தல்களின் போது முக்கிய பேசுபொருளாக பயன்படுத்தப்படும் கச்சதீவு பிரச்சினை தேர்தல் முடிந்த பின்னர் அவற்றைப் பற்றியாரும் கண்டுகொள்வதுமில்லை. அதைப்பற்றி யாரும் பேசுவதுமில்லை.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து சிலவாரங்கள் ஆனநிலையில் வழமைக்கு மாறாக இம்முறை சட்டப்பேரவைக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கச்சதீவு பற்றி சர்ச்சை கடும் விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலை நாட்டுவதற்காக கச்சதீவை மீட்கப் போவதாக வாக்குறுதியளித்திருந்தார். எனவே இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதோரு கட்டாயத்தில் ஜெயலலிதா இருக்கின்றார். இல்லையென்றால் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகிடும் என்று அவர் நினைக்கிறார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி நடைப்பெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 1974 ஆம் ஆண்டு கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்த்துக்கொடுக்கப்பட்ட போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியே இடம்பெற்றது. முதலமைச்சராக அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதியே இருந்தார். அப்போது அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பினார்.

தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல். ஏ. வான பொன்முடி, கச்சதீவு தொடர்பாக எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்தே முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.

அத்துடன் கச்சதீவு பற்றி கேள்வி எழுப்புவதற்கு தி.மு.க.வினருக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் 1974 ஆம் ஆண்டு மத்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்துகொண்டன. கச்சதீவை இழப்பதினால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுமென்று கூறி, அதனை தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவுமில்லை.

ஆனால், மத்திய அரசினூடாக கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுப்பேனென்று கூறினேனே தவிர, ஒரு படையைத் திரட்டிக் கொண்டு போய் கச்ச தீவை மீட்பேன் என்று கூறவில்லை. அன்றைய முதல்வர் மௌனமாக இருந்த போது, கச்சதீவை மீட்பதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் (2008) வழக்கு தொடர்ந்தேன்.

தற்போது மீனவர்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கும், கொல்லப்படுவதற்கும் தி.மு.க. தான் காரணம் என்று ஜெயலலிதா ஆவேசமாக பேசியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கச்சதீவு விவகாரத்தில் என்னைப்பற்றி வசை புராணம்பாடுவதை முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கச்சதீவு பிரச்சினை என்பது வேறொரு நாட்டுடனான பிரச்சினையாகும். கச்சதீவை மீட்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. மாநில முதல்வருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சதீவை மீட்டிருக்க முடியும். அதை மறந்து அல்லது மறைத்துவிட்டு, இப்போது கச்சதீவை நான்தான் தாரை வார்த்தேன் என்று சட்டப்பேரவையில் பேசுகிறார்.

கச்சதீவை தாரை வார்க்க நான் ஒருபோதும் உடன்பட்டதுமில்லை. ஒப்புக்கொண்டதுமில்லை. தமிழக முதல்வர் என்ற முறையில் அப்போதே எனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தேன். அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து அப்போது அவர்களின் கருத்துக்களை கேட்டேன்.

இதே வேளை கச்சதீவை மீட்பது பற்றி அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினாரா? இல்லவே இல்லை. எந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா கச்சதீவு விடயத்தில் என்மீது வசைபுராணம் பாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1974 ஜூன் 27ஆம் திகதி கச்சதீவை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான (இந்திய) மத்திய அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரியவருகிறது. அப்போது தமிழகத்தில் தி.மு.க.வே ஆட்சியிலிருந்தது. பத்திரிகையில் மேற்படி செய்தியை பார்த்த (அப்போதைய முதல்வர்) கருணாநிதி அதிர்ச்சியடைந்ததுடன் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதாகவும், பின்னர் சட்டப்பேரவையில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதாகவும் தெரிவிக்கிறார்.

இலங்கைக்கு கச்சதீவை வழங்குவது தொடர்பில் மத்திய அரசு எடுத்த தீர்மானம் தொடர்பில் தமிழக அரசுக்கோ அல்லது மாநில முதல்வருக்கோ அறிவிக்காமல் தன்னிச்சையாகவே மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தீவை வழங்குவதற்கு முன் தமிழக அரசின் அபிப்பிராயத்தையோ அல்லது அது பற்றிய தீர்மானத்தையோ தெரிவிக்கவில்லையென்றே தெரியவருகிறது.

1974 வரை இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்ததென்று கூறப்படும் இந்த கச்சதீவை, இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்திய அரசு இலங்கையிடம் கையளித்தது. மீன் வளம் நிறைந்த கடற்பகுதியின் மத்தியில் கச்சதீவு உள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தங்கியிருந்து ஓய்வெடுக்கவும், வலைகளை காய வைப்பதற்கும் இந்தத் தீவை இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இலங்கையிடம் கச்சதீவு கையளிக்கப்பட்ட பின்னர் 10 வருடங்களுக்கு தமிழக மீனவர்கள் கச்சதீவினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அது ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்து. எனினும் பின்னர் தமிழக மீனவர்கள் கச்சதீவை பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி அந்தக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கும் தடை ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில் கச்சதீவை மீண்டும் திரும்பப் பெறுவதென்றால் இலங்கை அரசுடன் இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பின் இணக்கப்பட்டுடனே பெற முடியும். ஆனால் இலங்கை கச்சதீவை மீண்டும் இந்தியாவிடம் கையளிக்குமா என்பது மிகவும் சந்தேகமானதேயாகும். இலங்கையின் நிலைப்பாடு பற்றிய கருத்துக்கள் இதனை உறுதிபடுத்துகின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு கட்சித் தலைவர்களும் தத்தமது பார்வையில் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே மற்றுமொரு விடயம் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தன மர கடத்தல் வீரப்பனை பற்றி யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்த வீரப்பன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனை சந்திப்பதற்கு மிகவும் ஆவல் கொண்டிருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை வெளிப்படுத்தியுள்ளவர் வீரப்பனை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அதிரடிப் படைத்தலைவரான (ஐ.பி.எஸ்.) விஜய்குமார்.

சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இந்த நிலையில் வீரப்பன் கொல்லப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை எழுதி வெளியிடுவதற்கான நடவடிக்கையில் 'வீரப்பன் ஒப்பரேஷனை' நடத்திய முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் ஈடுபட்டுள்ளார்.

தமிழக / கர்நாடகா வனப்பகுதிகளை 20 வருடங்களுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வீரப்பனை 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி தமிழக அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். வீரப்பனின் விடயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பிரதான பங்காற்றியவரான விஜய்குமார் தற்போது இந்திய மத்திய உள்துறை அமைச்சில் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவருகிறார்.

அவர் வீரப்பனை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காலத்தில், தினந்தோறும் இடம்பெற்ற வீரப்பன் தொடர்பான செய்திகளை தமது நாட்குறிப்பு (டயரி) ஏட்டில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த விடயங்களை தொகுத்தே புத்தகமாக வெளியிடும் பணியில் விஜய்குமார் ஈடுபட்டுள்ளார்.

அதிரடிப்படையினரின் வலைக்குள் வீரப்பனை சிக்கவைப்பதற்கு எவ்வாறான பொறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன என்பதை தமது புத்தகத்தில் விளக்கப்படுத்தவுள்ளதாகவும் தெரியவருகிறது.

அவற்றில் முக்கியமானதாக குறிப்பிடப்பட்டிருப்பது, சந்தனக்கடத்தல் வீரப்பன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்தார் என்பதுதான். எனவே, அதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொடுப்பதாக உளவுத்துறை மூலம் வீரப்பனிடம் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டதாம்.

அதேவேளை, வீரப்பனின் விருப்பம் பற்றிய தகவல் பிரபாகரனுக்கு தெரிவிக்கப்பட்டதா? பிரபாகரனை சந்திப்பதற்கு வீரப்பன் விரும்பினாரா என்பது பற்றி எதுவும் தெரியவரவில்லை. எனினும் புத்தகம் வெளிவந்த பின்னரே அதற்கான விடை தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விஜய்குமாரின் புத்தகம் வெளிவந்த பின்னரே மேலதிக விபரங்களை தெரிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த விடயம் பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாகமாறியுள்ளது.