சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓர் ஏழை தம்பதியர், தங்களின் 8 மாத குழந்தைக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய இயலாத காரணத்தால், அந்த குழ­ந்­தையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், முலகல செருவு அருகே பத்தலாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமணப்பா. இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியருக்கு ஞான சாய் என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தை பிறந்தது முதலே உடல்நலம் பாதிக்கப்பட்டு, ரமணப்பா பல்வேறு மருத்துவமனைகளில் அதற்கு மருத்துவம் பார்த்துள்ளார். இந்நிலையில் குழந்தைக்கு பிறப்பிலேயே நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று நுரையீரல் பொருத்தினால் மட்டுமே குழந்தை உயிர் பிழைக்கும் எனவும் மேலும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 இலட்சம் ரூபா வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த ரமணப்பா பல்வேறு இடங்களில் உதவி கேட்டும் கிடைக்கவில்லை என கூறப் படுகிறது.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் தம்பலபல்லி நீதிமன்றத்தில் நேற்றுமுன்­தினம் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “குழந்தையின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத காரணத்தாலும், குழந்தை படும் வேதனையை எங்களால் தாங்க முடியாததாலும் அதை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “கருணைக் கொலைக்கு அனுமதி வழங்க இந்த நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. ஆதலால் நீங்கள் உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம்” என்று கூறினார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தை நாட பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.