கொரோனா குறித்த தகவல்களை சீனா மறைப்பதற்கு காரணம் எதுவுமில்லை  - நிராகரிக்கிறார் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதம விஞ்ஞானி

27 Apr, 2020 | 09:46 AM
image

புதுடில்லி, கொரோனாவைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அணுகுமுறைகளை நியாயப்படுத்தியிருக்கும் அதன் பிரதம விஞ்ஞானியான தமிழகத்தைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தனது ஸ்தாபனத்துக்கு கூடுதலான தகவல்கள் கிடைக்கப்பெற்றபோது உரிய நேரத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.

   

இந்தியாவின் பிரபலமான பத்திரிகையாளர் சேகர் குப்தாவுடன் புதுடில்லியில் சனிக்கிழமை கலந்துரையாடிய சுவாமிநாதன் அமெரிக்காவுடனான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முரண்பாடு தற்காலிகமானதாகவே இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

   

" இந்த தொற்றுநோய்க்கு எதிராக சுகாதார ஸ்தாபனத்தின் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் எவ்வாறு அமைந்திருந்தன என்பது குறித்து நாம் ஆய்வொன்றையும் விசாரணையையும் ஆரம்பித்திருக்கிறோம்" என்று சீனாவில் ஆரம்பித்த தொற்றுநோய் பரவலின் தொடக்க நாட்களில் சுகாதார நிறுவனம் கொரோனாவைரஸீன் அச்சுறுத்தலை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல தரப்புகளில் இருந்து வருகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது சுவாமிநாதன் பதிலளித்தார்.

   

சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைத்துவக் குழுவின் ஒரு உறுப்பினரான அவர் தொற்றுநோய் தொடர்பிலான அணுகுமுறைகளில் ஸ்தாபனம் நேர்மையாகவும் ஔிவுமறைவின்றியும் சாத்தியமானளவுக்கு நுட்பநுணுக்கத்துடனும் நடந்துகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

   

டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டு 

   

உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான நிதியுதவியை ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரில் 15 இடைநிறுத்திவிட்டார். கொரோனாவைரஸ் பரவலை மூடிமறைத்ததாகவும் நிலைவரத்தை தவறானமுறையில் கையாண்டதாகவும் சுகாதார ஸ்தாபனத்தின் மீது குற்றஞ்சாட்டிய பிறகே அவர் அவ்வாறு செய்திருக்கிறார். தற்போது உலகில் அதிகூடுதல் எண்ணிக்கையில் கொவிட் --19 தொற்றும் மரணங்களும் அமெரிக்காவில் தான் இடம்பெறுகின்றன.

   

சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானம் கெபிரியேசஸுக்கு சீனாவுடன் நெருங்கிய உறவு இருந்ததாகவும் கொரோனாவைரஸ் பரவலை ஒரு பொதுச் சுகாதார நெருக்கடியாக பிரகடனம் செய்வதை அவர் வேண்டுமென்றே தாமதித்ததாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.

   

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான சுவாமிநாதன் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மூடிமறைப்புச் செய்யப்பட்டதாக கூறப்படும் குறாறச்சாட்டுக்களை நிராகரித்ததுடன் தொற்றுநோய் தொடர்பிலான ஒவ்வொரு புதிய நிகழ்வுப்போக்கு குறித்தும் செய்தியாளர் மகாநாடுகளில் விளக்கிக்கூறப்பட்டுவந்தது என்றார்.

   

தரவுகளை சீனாமறைக்கிறதா? 

   

சீனாவில் இருந்து வருகின்ற தரவுகள் அந்த நாடு எதையோ மறைக்கிறது என்ற சந்தேகத்தை கிளப்புகிறதா என்று சுவாமிநாதனிடம் கேட்டபோது, " இது வரையில் என்னையோ அல்லது எனது சகாக்களையோ எதுவும் சந்தேகத்துக்குள்ளாக்குவதாக தெரியவில்லை " என்று பதிலளித்தார்.

   

அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் தேசிய சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவொன்று ஜனவரியல் சீனாவுக்குச் சென்றது. அவர்கள் பெருமளவு தரவுகளைச் சேகரித்தார்கள். நிலைவரம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை பார்வையிட வூஹானுக்கு சென்ற குழுவினர் அறிக்கையொன்றையும் தயாரித்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனத்துடன் மாத்திரமல்ல, உலகம் பூராவும் இருந்து சென்ற குழுக்களுடன் சீனர்கள்  அவ்வப்போது தங்களது நிபுணத்துவத்தை பகிர்ந்துகொண்டேயிருந்தார்கள். அவர்கள் பெருமளவுக்கு திறந்த மனதுடனான வெளிப்படையான பேச்சுவார்த்தைகளுக்கும் கலந்தாலோசனைகளுக்கும் தயாராகவே இருந்தார்கள். நாங்கள் அவர்களுடன் கிரமமான அடிப்படையில் பேச்சுக்களை நடத்தினோம். தடுப்புமருந்து தயாரிப்பில்  எங்களுடன் சேர்ந்து சீனர்கள் பணியாற்றப்போகின்றார்கள். மனிதரில் பரீட்சித்துப்பார்ப்பதற்கான இரு தடுப்பு மருந்து மாதிரிகளை அவர்கள் ஏற்கெனவே முன்வைத்தீருக்கிறார்கள் என்றும் சுவாமிநாதன் விளக்கமளித்தார்.

   

ட்ரம்ப் உலக சுகாதார ஸ்தாபனத்தின்மீது ஏன் அதிருப்தி கொண்டிருக்கிறார் என்று கேட்டபோது அத்தக் கேள்விக்கு தன்னால் பதிலளிக்க முடியாது என்று சுவாமிநாதன் மறுத்துவிட்டார். ஆனால், விஞ்ஞானிகள் மட்டத்தில் அமெரிக்காவுடனான எமது ஒத்துழைப்பு உன்னதமானதாகவே எப்போதும் இருந்துவருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

" அமெரிக்கா எமது பெறுமதிவாய்ந்த ஒரு பங்காளி. இது வளங்களைப் பொறுத்தவரையில் மாத்திரமல்ல, அவர்களது ஸ்தாபனங்களுடன் நாம்  கொண்டிருக்கும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிலும் அவ்வாறுதான். பல வருடங்களாக நாம் உறுதியான பிணைப்பை வளர்த்தெடுத்திருக்கிறோம். அது தொடரும் என்று நம்புகிறேன். தற்போதைய முரண்பாடு தற்காலிகமானது. நாம் இப்போது காட்டுதீக்கு முகங்கொடுத்துக்கொண்டிருப்பதால் அமெரிக்காவுடனான விவகாரத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு இது நேரமல்ல. உலக சுகாதார ஸ்தாபனம் வெளிப்படையானதாகவும் திறந்த மனதுடனும் விவகாரங்களை அணுகும் " என்று சுகாதார ஸ்தாபனத்தின் பிரதம விஞ்ஞானி கூறினார். 

( த பிறின்ற் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13