கிளிநொச்சியில் கொரோனா நடவடிக்கைக்காக பாடசாலை, வைத்தியசாலையினை எடுத்தமைக்கு சந்திரகுமார் ஆட்சேபனை

Published By: J.G.Stephan

26 Apr, 2020 | 08:56 AM
image

கிளிநொச்சியில் கொரோனா நடவடிக்கைக்கு என அழகாபுரி பாடசாலையினை விமானப்படையினர் பெற்றுக்கொண்டமை மற்றும் கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் மாகாண வைத்தியசாலையாக கிளிநொச்சியில் சுமார் பத்தாயிரம் வரையான பொது மக்களுக்கு சேவையளிக்கும்  வைத்தியசாலை ஒன்றை தெரிவு செய்தமைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் ஆட்சேபனையை தெரிவித்துள்ளதோடு, அரசின் உயர் மட்டத்தினருக்கும், வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.



இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் அழகாபுரி அ.த.க.பாடசாலையானது இரணைமடு விமானப்படையினரால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் அனுமதியுடன் கொரோனா நடவடிக்கைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது அப்பிரதேசத்தில் வாழ்கின்ற பொதுமக்கள்  மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையை சூழவும் கிராமத்திலும் மிகவும் நெருக்கமாக பொது மக்கள் வாழ்கின்றனர். எனவே இந்தப் பிரதேசத்தில் உள்ள பாடசாலையினை  விமானப் படையினர் பொறுப்பேற்றிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இது தொடர்பில் அப்பிரதேச பொது மக்கள் சார்பாக எனது ஆட்சேபனையை தெரிவிக்கின்றேன்.

இதனைத் தவிர இனம்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு வட மாகாணத்தில் ஒரு சிகிச்சை நிலையமாக கிளிநொச்சியில் போக்குவரத்து நெருக்கடியுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்கின்ற சுமார் பத்தாயிரம் வரையான பொது மக்களுக்கு சேவை வழங்கி வரும் ஒரு மருத்துவமனையை தெரிவு செய்வதும் பொருத்தமற்றது. 

காலப்போக்கில் மாவட்டத்திற்கு ஒரு கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு தேவை ஏற்படுகின்ற போது மாவட்டத்தில் பொருத்தமான ஒரு வைத்தியசாலையினை தெரிவு செய்யலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எமது மாவட்டத்தின் நிலைமைகளை புரிந்துகொள்ளாது எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனை மீள் பரிசீலனை செய்யுமாறும் சந்திரகுமார் அவர்கள் கோரியுள்ளார்.

பிரதேச பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் உயரதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்