குடிவரவு மீதான தனது நிருவாகத்தின் போரை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச்சென்ற ட்ரம்ப்

25 Apr, 2020 | 08:06 PM
image

(ஸ்ரான்லி ஜொனி)

குறைந்த பட்சம் 60 நாட்களுக்கு பச்சை அட்டைகளை ( Green Cards) வழங்குவதை இடைநிறுத்துவதற்கு எடுத்த தனது தீர்மானத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடிவரவு ( Immigration) மீதான தனது நிருவாகத்தின் போரை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டார்.

அந்த தீர்மானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை  அறிவித்த குடியரசு கட்சியின் ஜனாதிபதி புதிய கொரோனாவைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அமெரிக்காவில் வேலையில்லாத்திண்டாட்ட நெருக்கடி மோசமாகிக்கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் அமெரிக்கர்களின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

 

இடைநிறுத்தத்தின் அர்த்தம் என்ன?

அமெரிக்கர்களின் தொழில்வாய்ப்புகளை பாதுகாப்பதற்கு " குடிவரவை இடைநிறுத்தம் " செய்யப்போவதாக திங்கட்கிழமை ட்ரம்ப் அறிவித்தார். நிறைவேற்று உத்தரவு புதிய பச்சை அட்டைகள் வழங்குவதை 60 நாட்களுக்கு இடைநிறுத்தும் என்று வெள்ளைமாளிகை செய்தியாளர் மகாநாட்டில் வைத்து அவர் அறிவித்தார்.

ஆனால், அதேவேளை அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கும் செயற்திட்டத்தை( Guest Worker Programmes )அந்த உத்தரவு விட்டுவைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.புதிய குடிவரவு விசாக்களை ( New immigrant Visas) நிறுத்துவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்திருந்ததாகவும் ஆனால், வர்த்தகத்துறையினரிடமிருந்து வந்த எதிர்ப்புக்கு மத்தியில் அதில் இருந்து பின்வாங்கியதாகவும் நியூயோர்க் ரைம்ஸ் அறிவித்திருந்தது.

இப்போது வந்திருக்கும் புதிய நிறைவேற்று உத்தரவு அமெரிக்காவில் ஏற்கெனவே வசிக்கின்ற குடியேற்றவாசிகள் மீதோ அல்லது வேலை செய்வதற்கு அல்லது பயணம் செய்வதற்கு தற்காலிக விசாவில் வந்திருப்பவர்கள் ( எச்.1 பி.விசா வைத்திருப்பவர்களும் தற்காலிக விவசாயத் தொழிலாளர்கள் உட்பட) மீதோ எந்த தாக்கத்தையும் கொண்டிராது.

அமெரிக்க பிரஜைகள் தங்களது வாழ்க்கைத் துணைகளையும் பிள்ளைகளையும் அமெரிக்காவுக்கு இன்னமும் கூட வரவழைக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், தற்போது பச்சை அட்டை வைத்திருப்பவர்களின் உறவினர்கள் அல்லது தொழில்வாய்ப்பு ஒன்று கிடைக்கவிருப்பதாக கூறிக்கொண்டு அதன் அடிப்படையில் பச்சை அட்டைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களும் அந்த குறிப்பிட்ட காலகட்டத்துக்கு தடுக்கப்படுவர் என்று ட்ரம்ப் நிருவாகத்தின் அதிகாரிகள் கூறினார்கள். 60 நாட்களுக்குப் பிறகு நாட்டின் " பொருளாதார நிலைமையின் " அடிப்படையில் இந்த கொள்கை மதிப்பீடு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். பொருளாதார நிலைமையை தானே தனிப்பட்டமுறையில் மதிப்பீடு செய்யப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2018 அக்டோபருக்கும் 2019 அக்டோபருக்கும் இடைப்பட்ட ஒரு வருடகாலத்தில் அமெரிக்கா சுமார் 5,77,000 பச்சை அட்டைகளை விநியோகித்தது.

தீர்மானத்திற்கான காரணகாரியம் 

   

ட்ரம்பைப் பொறுத்தவரை, அமெரிக்கர்களின் தொழில்களை காப்பாற்றுவதற்கு இந்த தீர்மானம் தேவைப்படுகிறது என்பது அவரது நிலைப்பாடு. " எமது அமெரிக்கத் தொழிலாளர்களை பாதுகாக்க நாம் விரும்புகிறோம். நாம் முன்னோக்கி நகரும்போது அவர்களை பாதுகாப்பதில் மேலும் மேலும் அக்கறையுடையவர்களாக மாறுவோம் என்று நான் நினைக்கிறேன் " என்று அவர் கூறினார். கொரேனாவைரஸ் தொற்றுநோய் பொருளாதாரத்தை பாழ்படுத்தியிருக்கும் நிலையில், கடந்த மாதம் சுமார் 2 கோடி 20 இலட்சம் அமெரிக்கர்கள் தங்கள் தொழில்களை இழந்துவிட்டார்கள்." குடிவரவை இடைநிறுத்தம் செய்வதன் மூலமாக, அமெரிக்கா மீளத்திறக்கும்போது தொழில்வாய்ப்புகளை பெறுவதற்கான  வரிசையில் முதலிடத்தில்  வேலையில்லாத அமெரிக்கர்கள் நிற்பதற்கு எம்மால் உதவக்கூடியதாக இருக்கும் " என்று தனது தீர்மானத்தின் பின்னால் உள்ள காரணகாரியத்தை விளக்குகையில் ட்ரம்ப் கூறினார்.

இதை ஒரு சுகாதாரப் பராமரிப்பு அவசரகால நடவடிக்கை என்றுஅவரின் நிருவாகத்தின் அதிகாரிகள் நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்க மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கே ஜனாதிபதி இத்தகைய தீர்மானத்தை எடுத்தார் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் பிறையன் செவ்வாயன்று ட்ரம்பின் வெள்ளைமாளிகை செய்தியாளர் மகாநாட்டுக்கு முன்னதாக கூறியிருந்தார்.

அரசியல் கணிப்பீடுகள்

வைரஸ் தொற்றுநோய் பரவத் தொடங்கியதை அடுத்து அமெரிக்காவுக்கான குடிவரவை ஏற்கெனவே ட்ரம்ப்  நிருவாகம் கட்டுப்படுத்திவிட்டது. சீனாவில் இருந்தும் ஐரோப்பாவின் பெரும்பாலான பாகங்களில் இருந்தும் அமெரிக்காவுக்கான பயணங்களை நிருவாகம் தடைசெய்ததுடன் கனடாவுடனும் மெக்சிக்கோவுடனுமான தரை எல்லைகளையும் மூடிவிட்டது. அத்தியாவசியமற்ற பயணங்களை இந்த எல்லைகள் ஊடாக செய்யமுடியாது. மார்ச் மாதம் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் துணைத்தூதரகங்களிலும் (Consulates) விசா பரிசீலனை செயன்முறைகளை இராஜாங்கத் திணைக்களம் இடைநிறுத்தியிருந்தது. அதனால் புதிய விசா வழங்கல் நடைமுறையில் நிறுத்தப்பட்டேயிருந்தது.

நாட்டின் தென் எல்லையோரம் பிடிக்கப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் திருப்பியனுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுகின்ற தங்கள் பிரசைகளை திரும்ப எடுக்காத நாடுகள் மீது விசா தடைகளையும் நிருவாகம் அறிவித்திருக்கிறது.புதிய நடவடிக்கையுடன் ட்ரம்ப் தனது குடிவரவுக்கொள்கையை இறுக்கமாக்கியிருக்கிறார் என்பது மாத்திரமல்ல, பழமைவாதிகள் (Conservatives) மற்றும் வலதுசாரி வாக்காளர்கள் மத்தியில் சூடான ஒரு பிரச்சினையாக இருந்துவரும் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஜனாதிபதி மிகுந்த உறுதிப்பாட்டுடன் இருக்கிறார் என்ற வலிமையான செய்தியை  தனது ஆதரவுத்தளத்துக்கு அனுப்பியுமிருக்கிறார்.

வைரஸ் நெருக்கடியை கையாளுவதில் தனது நிருவாகம் இழைத்த தவறுகள் தொடர்பில் வருகின்ற அதிகரித்த விமர்சனங்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்கும் ட்ரம்ப்பின் தந்திரேபாயங்களுடன் குடிவரவு தொடர்பான அவரின் தற்போதைய நடவடிக்கை கெட்டியாக ஒத்துப்போகிறது.உலகில் கொரோனாவைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எணணிக்கையை மிகவும் அதிகமாகக்கொண்ட நாடு அமெரிக்காவேயாகும். இந்த கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருந்த நேரம் வரையில் அங்கு 8,25,3000 பேருக்கு  தொற்று ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அதிகரிக்கும் வருகிறது. குறைந்தது 45 ஆயிரம் பேர் மாண்டுவிட்டார்கள்.

ஆரம்ப நாட்களில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வளங்களை அணிதிரட்டி  விரைந்து நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்காக ட்ரம்ப் மீது கடுமையான கண்டனங்கள் குவிந்த வண்ணமேயிருக்கின்றன. ஆனால், ட்ரம்ப் அத்தகைய கண்டனங்களை அலட்சியம் செய்தவராக வைரஸ் நெருக்கடிக்கு சீனாவையும் உலக சுகாதார நிறுவனத்தையும் குறைகூறுகிறார். கொரோனாவைரஸை முதலில் " சீன வைரஸ் " என்று அழைத்த அவர் அடுத்து உலக சுகாதார நிறுவனத்துக்கான  அமெரிக்க நிதிப்பங்களிப்பை நிறுத்தியும் விட்டார். 

மக்களை வெளியில் திரியாமல் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு  மாநிலங்களின் ஆளுநர்களினால் பிறப்பிக்கப்படுகின்ற உத்தரவை தாக்கிப்பேசிய ட்ரம்ப், மாநிலங்களில் கட்டுப்பாடுளை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்து  தனது ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை  ஆதரிக்கவும் செய்கிறார். இப்போது குடிவரவை இடைநிறுத்தியதன் மூலம், பல தசாப்தங்களாக அமெரிக்கா காணாத  படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தேர்தல் வருடத்தில்  தனக்கு பெரிதும் விருப்பமான நிகழ்ச்சிநிரலுக்கு அவர் திரும்பியிருக்கிறார்.

( த இந்து )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48