தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்  பிரபாகரன் அன்று சரியாக சிந்தித்திருந்தால்  மஹிந்த ராஜபக்ஷ  என்ற  ஒருவர்  அடையாளம்   தெரியாத ஒருவராகவே இருந்திருப்பார். பிரபாகரனின் மௌனம் மஹிந்தவுக்கு  சாதகமாக அமைந்து விட்டது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். 

இனவாதத்தால் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தக்க  வைத்துக் கொள்ள முடியாது என மஹிந்த உள்ளிட்ட தெற்கு அரசியல் வாதிகள்  நன்கு  விளங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு நாம் ஒரு போதும்  முன் நோக்கி நகர முடியாது எனவும் அவர்  தெரிவித்தார். 

மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து    கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த 2007 ஆம்  ஆண்டு  நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவும்  ரணில் விக்கிரமசிங்க தோல்வியடையவும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் காரணம். அவர் அன்று சிந்தித்திருந்தால்   இன்று   மஹிந்த ராஜபக்ஷ என்று ஒரு தனி மனிதர் இலங்கை அரசியலுக்கு அடையாளம் தெரியாத ஒருவராக இருந்திருப்பார். இன்று தம்மை மகிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகள் எனவும் தாம் கூட்டு எதிரணியினர் எனவும் அடையாளப்படுத்திக் கொள்ளும் எவரும் அன்று மஹிந்த  ராஜபக்ஷவின் தோல்வியடைந்த   போது அவருடன் இருக்கவில்லை. அன்றும் இன்றும் நாம் மட்டுமே அவருடன் கைகோர்த்து செயற்பட்டு வருகின்றோம்.

பஸில் ராஜபக்ஷவும் அவருடன் இருக்கின்ற ஏனைய ராஜபக்ஷக்களும் தான் கடந்த இரண்டு தேர்தல்களிலும் மகிந்தவின் தோல்விக்கு காரணம்  ஆகும் . இன்று    ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியில் இருந்து  பிரிந்து சென்றவர்கள் அனைவரும்   தமக்கு ஏற்றவாறு கட்சிகளை அமைத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த கட்சி சிறிது காலத்தில் காணாமல் போய் விடும் எனபது அவர்களுக்கு புரிய வில்லை. உண்மையில் கடந்த தேர்தலில் மஹிந்த  ராஜபக்ஷவை தோற்கடித்தது யார்? மாகாண சபை அமைச்சர்களோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் எவரும் அல்ல ? நாமும் அல்ல!    நாம் அனைவரும்  அன்று வாக்களித்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் தான். 

ஆனால் ராஜபக்ஷக்கள் அவ்வாறு வாக்களித்தார்களா என்பது தெரியாது அவர்களால் தான் மஹிந்த தேர்தலில் தோற்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேம சந்திரனின் இறப்புக்கு பின்னரே மஹிந்த வின் தோல்வி உறுதியான ஒன்றாக ஆக்கப்பட்டது. அதற்கு காரணம் நாமா? இல்லை இன்று மகிந்தவின் வால் பிடித்து திரியும் கூட்டு எதிரணியும் ராஜபக்ஷக்களும் தான்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்றிணைந்த தீர்மானத்துக்கு அமைய எதிர்வரும் 31 ம் திகதி மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன  மகேந்திரன் பதவி விலக வேண்டும் . அவ்வாறு செல்லா விட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையான அழுத்தத்தை வழங்கும். மஹிந்த ராஜபக்ஷ ஒரு போதும் கட்சியை உடைக்கவோ , கட்சியை  பிரிவினைப் படுத்தவோ விரும்ப இல்லை. ஆனால் அவருக்கு பின்னால் இருக்கின்றவர்கள் தான் கட்சியை பிரிவினைப்படுத்தவும் கட்சியை உடைக்கவும் முயட்சி செய்கின்றனர்.  

கூட்டு எதிர்கட்சிக்கு முதுகெலும்பு கிடையாது. அந்த கட்சியால் இன்னும் சில நாட்களுக்கு தான் அரசியலில் நிலைக்க முடியுமே தவிர நிரந்தரமாக நிலைக்க முடியாது. மக்கள் நிலைக்கவும் விட மாட்டார்கள்.

அண்மையில் பாராளுமன்ற  உறுப்பினர்   உதய கம்மன்பில  கைது செய்யப்பட்டது   அரசியல் பழிவாங்கல் என்று சிலர் கூறிவருகின்றனர் . இது ஒரு அரசியல் பழி வாங்கல் இல்லை என  அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் என்ற  ரீதியில் நாம் கூறுகின்றோம் . சட்டம் தன் கடமையை செய்கிறது. நேற்று தோன்றி செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்சியான கூட்டு எதிர்க்கட்சி தான்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே  அவர்கள் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க  போவதில்லை. மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம்  என  கட்சி ஆதரவாளர்களிடமும்  நாம் கேட்டுக் கொள்கின்றோம்  என்றார் .