தண்ணீர் இறைக்கும் மோட்டாரைத் திருத்துவதற்காக கிடங்குக்குள் இறங்கிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உடுப்பிட்டிப் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் புலோலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான மருதநாயகம் மகாநாயகம் (56 வயது) உடுப்பிட்டியைச் சேர்ந்த இராசையா கிருஷ்ணமூர்த்தி (61 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் பழுதடைந்த தண்ணீர் இறைக்கும் மோட்டாரைத் திருத்துவதற்காக சென்ற இருவரும் சுமார் 10 அடி ஆழமுள்ள கிடங்குக்குள் இருக்கும் மோட்டாரைத் திருத்த முயன்றபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

முதலில் மகாநாயகம் கிடங்குக்குள் இறங்கி திருத்திக் கொண்டிருந்தவேளை மின்சாரத்தால் தாக்குண்டார். அவரைக் காப்பாற்ற மற்றையவரான கிருஷ்ணமூர்த்தியும் இறங்கியபோது அவரும் மின் தாக்குதலுக்குள்ளானார். அந்த இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

கிடங்குக்குள் வெள்ளம் உட்புகுந்ததால் இரு சடலங்களையும் மீட்பதில் சிரமம் காணப்பட்டதால் இராணுவத்தினர் வரழைக்கப்பட்டு அவர்களது உதவியுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.

பருத்தித்துறை பதில் நீதிவான் விஜயராணி உருத்திரேஸ்வரன் சடலங்களைப் பார்வையிட்டு பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சடலங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் அறிக்கை  சமர்ப்பிக்கப் பணித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.