(லியோ நிரோஷ தர்ஷன்)

சர்வக்கட்சி மாநாட்டின் தீர்வுத் திட்டத்தை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும்,  7 பேர்ச்சர்ஸ் காணியை வழங்கி தோட்ட மக்களின்  வீட்டுப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட 14 பக்கங்களை கொண்ட அறிக்கையை அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தும் குழு நாளை வெள்ளிக்கிழமை ஆராயவுள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தும் குழு முன் நாளை மேலதிக விளக்கமளிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் செயற்படும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  தெரிவித்தார் . 

புதிய அரசியலமைப்பிற்கான செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் கூட்டு எதிர் கட்சி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் ஜனநாயக மாற்றங்களுக்கான யோசனைகள் அடங்கிய 14 பக்கங்களை கொண்ட அறிக்கையை அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தும் குழுவின் செயலாளர் நீல் இத்தவெலவிடம் சமர்ப்பித்திருந்தது.

இதில் அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. சர்வக்கட்சி மாநாட்டின் தலைவராக மூன்று ஆண்டுகள் செயற்பட்டேன். அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஏனைய அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய இணப்பிரச்சினைக்கு தீர்வு திட்ட யோசனையை தயாரித்து அரசாங்கத்திடம் வழங்கினோம். அந்த தீர்வு திட்டத்தை தற்போதைய அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பிற்குள் உள்ளடக்கி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்குமாறு நாங்கள் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளோம். எனவே புதிய தீர்வு திட்டத்திற்காக காலம் கடத்த வேண்டிய  தேவை ஏற்படாது மாறாக விரைவில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும்.

அதே போன்று மலையக மக்களின் வீட்டு பிரச்சினைக்கு தேவையான தீர்வு யோசனைகளை முன்வைத்துள்ளோம். 7 பேச்சர்ஸ் காணியை வழங்க முடியும் என்ற கோட்பாடுடன் பல ஆதாரங்களை முன்வைத்து அரசியலமைப்பு உப குழுவிற்கு அறிவித்துள்ளோம். இவை தொடர்பில் நாளை எம்மிடம் மேலதிக விளக்கம் கோரப்பட உள்ளது என குறிப்பிட்டார்.