4 ஆவது கட்டமான சமூகப்பரவலுக்குள் இலங்கை செல்லும் போது ஏற்படப்போகும் விளைவு குறித்து வைத்தியர் ஹரித்த அளுத்கே பிரத்தியேக செவ்வி

12 Apr, 2020 | 03:23 PM
image

கொரேனா வைரஸின் பிடிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை தற்போது மூன்றாவது கட்டத்திலேயே உள்ளது. இந்நிலையில் நான்காவது கட்டமான சமுகப் பரவலுக்குள் தள்ளப்படுமாயின் பெரும் எண்ணிக்கையான உயிரிழப்பு ஏற்படுவதோடு சுகாதார துறையும் செயலிழந்து போகும் ஆபத்துள்ளது. 

ஆகவே நான்காவது கட்டமான சமுகப் பரவலுக்குள் நாடு செல்லாது தடுப்பதற்கான அவசர நடவடிக்கைளை தற்போது முன்னெடுக்க வேண்டியுள்ளது என்று வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, 

கேள்வி:- கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயற்பாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஆரம்பத்திலிருந்தான வகிபாகம் எவ்வாறுள்ளது?

பதில்:- ஜனவரி 27ஆம் திகதியே முதன்முதலில் சீன சுற்றுலா பிரஜைக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை குறிப்பிட்டு ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோரிக்கு கடிதமொன்றை அனுப்பினோம். 

அதன்பின்னர் தொடர்ச்சியாக கொரோனா பற்றி விழிப்புணர்வவையும் தயார்ப்படுத்தல் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கினோம். அதற்கமைவாகவே கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான விசேட செயலணி உருவாக்கப்பட்டது. 

பெப்ரவரி மாதம் முழுவதும் எவ்விதமான கொரோனா தொற்றாளர்களும் கண்டறியப்பட்டிருக்காத நிலையில் மார்ச் மாதம் 11ஆம் திகதி முதன்முதலாக இலங்கை பிரஜையொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டது. 

அதனையடுத்து நாட்டில் ஆங்காங்கே தொற்றுக்குள்ளான ஓரிருவரே கண்டறியப்பட்டார்கள். இந்நிலையில் மார்ச் 17ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் விசேட செயலணி கூட்டப்பட்டபோது நாமும் பங்கேற்றிருந்தோம். 

அதன்போது தான் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்பாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது. அச்சமயத்தில் கொரோனாவின் பாரதூரத் தன்மையையும், உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் குறிப்பிட்டுக் கூறினோம். 

எமது ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைவாகவே பாடசாலைகளில், விமானநிலையங்கள், மூடுவதற்கும் மக்கள் நடமாட்டங்களை முற்றாக கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். சமுக இடைவெளிகளை பேணுவதற்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டது.  

கேள்வி:- கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் ஆரம்பத்தில் தாமதங்களைச் செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அரசாங்கத்தின் பக்கத்தில் சில தாமதங்கள் நிகழாமலில்லை. உதாரணமாக கூறுவதாயின், பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிக்கு பின்னர் இத்தாலியில் கொரோனாவின் பரவல் அதிகரிக்க ஆரம்பித்தது. 

அச்சமயத்தில் இத்தாலியில் இருந்து வெளியேறுவதற்கான எல்லைகள் மூடப்பட்டாலும் எல்லைகளை கடந்து வருபவர்களை தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குமாறும் பெப்ரவரி 25ஆம் திகதியளவில் கோரியிருந்தோம். 

ஆனாலும் அந்தக்கோரிக்கைக்கான செயற்பாடு இரண்டு வாரங்கள் தமதமாகி மார்ச் மாதத்திலேயே நடைமுறைக்கு வந்திருந்தது. இதனால் 25 முதல் 30 வரையிலான கொரோனா தொற்றாளர்கள் நாட்டுக்குள் பிரவேசித்து விட்டார்கள். இவர்களால் தான் கொரோனா நாட்டிற்குள் பரவ ஆரம்பித்தது. 

ஆகக் குறைந்தது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மார்ச் மாத முற்பகுதியில் இருந்து ஆரம்பித்திருந்தாலே தற்போதைய நிலைமையை மேலும் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் தாமதமான முடிவுகளால் அதற்கான வாய்ப்பு இல்லாது போய்விட்டது. 

உலக சுகாதார நிறுவனமானது தனது உறுப்பு நாடுகளுக்கு முற்கூட்டிய அவதானிப்புக்களையும் நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுரை வழங்கியிருந்தது. காரணம், அவ்வாறான செயற்பாடுகள் ஊடாகவே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதோடு நாடு மீண்டும் சுமுகமான நிலைமைக்கு விரைவாக இட்டுச் செல்வதையும் உறுதிப்படுத்த முடியும். 

ஆகவே எமது நாட்டில் ஆரம்பத்தில் ஏற்பட்ட தாமதங்களால் நாடு மீண்டும் சுமுக நிலைமைக்கு திரும்புவதற்கான கால எல்லையும் தற்போது அதிகரித்திருக்கின்றது.

கேள்வி:- கொரோனா பரவலை கட்டுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தற்போதைய செயற்பாடுகள் எவ்வாறிருக்கின்றன? 

பதில்:- அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவைக் கட்டுப்பத்தும் செயற்பாடுகளில் இலங்கை முன்னிலையிலேயே உள்ளது. 

குறிப்பாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீர்க்கமான முடிவுகளை எடுத்துச் செயற்பட்ட நாடுகளின் பட்டியலை பி.பி.சி வெளியிட்டுள்ள நிலையில் அதில் இலங்கை ஏனைய நாடுகளை கடந்து முன்னிலையில் உள்ளது. 

இருப்பினும சில சிறிய குறைபாடுகள் இல்லாமலில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக உலகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் மேம்பட்டவையாக தான் உள்ளன. ஆனால் வைரஸ் பரவலைக் கட்டப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இத்துடன் மட்டுப்படுத்திவிட முடியாது. மேலும் பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

கேள்வி:- கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அடுத்த கட்டமாக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது?

பதில்:- எமது நாட்டில் உள்ள மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதன் வினைத்திறனையும் உடனடியாக அதிகரிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அதிகரிப்பதன் ஊடாகவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை விரைவாக அடையாளம் கண்டு அவர்களை சமுகத்திலிருந்து தனிமைப்படுத்துவதோடு நிலைமை மோசமடைவதற்கு முன்னதாக அவர்களுக்கு உரிய சிகிச்சைகளையும் வழங்க முடியும். 

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 80 சதவீதமானவர்களுக்கு மிகக்குறைந்த அறிகுறிகளே தென்பட்டுள்ளன. அதிலும் 20 சதவீதமானர்வகளுக்கு அறிகுறிகளே வெளிப்படாத நிலைமையும் உள்ளது. இதனைவிடவும், 60 சதவீதமானவர்கள் சதாரண, வறட்டு இருமல், சளி, தும்மல் போன்ற குணம்சங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். 

இவர்களில் பலருக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இயல்பாகவே கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டுவிடுவார்கள். ஆனால் இவர்கள் குடும்பத்துடன் சமுகத்துடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதால் அவர்கள் மூலமாக ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படும் நிலைமைகள் அதிகரிக்கின்றன. 

ஆகவே அறிகுறிகள் காணப்படுவர்கள், சந்தேகத்திற்கு இடமானவர்கள் ஆகியோரை தனிமைப்படுத்தி அவர்களை தாமதமின்றி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிவுரைகளுக்கு அமைவாக மீண்டும் மீண்டும் பரிசோதனைகளை தொடாச்சியாக செய்ய வேண்டும். 

மேலும் திரும்பத்திரும்ப பரிசோதனைகளை மேற்கொண்டாலும் 75 சதவீதமான பரிசோதனையின் முடிவுகளே மிகச்சரியானவையாக கொள்ள முடியும். உதாரணமாக கூறுவதாயின் நூறுபேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்கின்ற போது 25 பேரை அடையாளம் காணமுடியாத நிலைமை தான் இருக்கின்றது. 

ஆகவே முதற்பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் கிடைத்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்கின்றபோது தான் உண்மையான ஆபத்து எங்குள்ளது என்பதை சரியாக குறிப்பிட முடியும். 

கேள்வி:- இலங்கை சுகாதார துறையிடம் பரிசோதனையை அதிகரிப்பதற்கான வினைத்திறன் காணப்படுகின்றதா? 

பதில்:- கொரோனா தொற்றை அடையாளப்படுத்தவதற்கு பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்ற நிலையில் இலங்கையில் பொலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பி.சி.ஆர்.) முறைமையே பின்பற்றப்படுகின்றது. 

அரச வைத்தியசாலைகளில் 54, பல்கலைக்கழகங்கில் 56, தனியார் துறையிடம் 6 என மொத்தமாக 116 பி.சி.ஆர் இயந்திரங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு இயந்திரங்கள் காணப்பட்டாலும், மாதிரிகளை பெறுதல், அவற்றைக் காவிச் செல்லுதல் உள்ளிட்ட உபகரணங்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனைவிடவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. 

சுகாதர அமைச்சு நாளொன்றுக்கு 500 பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று கூறினாலும் சராசரியாக 350 பரிசோதனைகளே நடைபெறுகின்றன. தென்கொரியாவில் வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்திருந்தபோதும் அவர்கள் பரிசோதனைகளின் எண்ணிககையை அதிகரித்தே மிகப்பெரும் ஆபத்தினைக் கட்டுப்படுத்தினார்கள். 

அதேபோன்று ஜேர்மனில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றபோதும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  குறைவாகவே உள்ளது. ஆகவே இந்த நாடுகளிடமிருந்து பெறப்படுகின்ற படிப்பினைகளின் பிரகாரம் பரிசோதனைகளை அதிகரிப்பதே எம் முன்னுள்ள ஒரே தெரிவாகும்.

தற்போதைய சூழலில் நான்காயிரம் வரையிலானவர்களையே பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் அது மிகக் குறுகிய தொகையாகவே காணப்படுகின்றது. ஆகவே அத்தொகை அதிகரிக்கப்பட வேண்டியதன் ஊடாகவே நாடு வழமையான நிலைமைக்கு திரும்புவது பற்றிய சிந்திக்க முடியும். 

கேள்வி:- கொரோனா தொற்றை உறுதிப்படுத்தவதற்காக இலங்கையில் பின்பற்றப்படும் பொலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பி.சி.ஆர்.) முறைமை பொருத்தமானதொன்றாக கருதுகின்றீர்களா?

பதில்:- ஆம், சீனா முதல் பல்வேறு உலக நாடுகள் இந்த முறைமையை பின்பற்றுகின்றன. ஆகவே இம்முறையில் பாரிய குறைபாடுகள் இருப்பதாக கூறிவிட முடியாது. ஆனால் இம்முறைமையை பின்பற்றினாலும் தொடர்ச்சியான பரிசோதனைகள் மிகவும் அவசியமாகின்றது.

கேள்வி:- கொரோனாவுக்கான தடுப்பு மருந்தோ, ஊசியோ இதுவரையில் கண்டறியப்பட்டிருக்காத நிலையில் எமது நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு எவ்வாறான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன?

பதில்:- கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கான இதர அறிகுறிகளை கண்டறிந்து அவற்றைக் கட்டுப்பத்துவதற்கான சிகிச்சைகளே முதற்கட்டமாக செய்யப்படுகின்றன. அதாவது, தொற்றாளர்கள் மோசமான நிலைக்கு செல்வதை தடுக்கும் வகையில் அந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதனைவிடவும் உலக ஆய்வுகளுக்கு அமைவாக மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்சி குளோரோகுய்ன் மருந்துவில்லைகள் வழங்கப்படுகின்றன. 

கேள்வி:- சுகாதர அமைச்சு வெளியிடும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை விடவும் பன்மடங்கானவர்கள் இருக்கின்றார்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எந்த அடிப்படையில் குறிப்பிட்டு வருகின்றது?

பதில்:- கொரோனா வைரஸ் புதியதொரு தொற்று நோயாகும். இதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் கொரோன தொற்றாளர் ஒருவர் சமுகத்தில் கண்டறியப்படுவாராக இருந்தால் ஆகக்குறைந்தது அவருடன் தொடர்பிலிருந்து எண்மருக்கு தொற்றிருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

எமது நாட்டில் (10-04-2020)  தற்போது 190 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இவர்களின் 35 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றார்கள். மீதமானவர்களில் 150 பேர் சமுகத்திலிருந்து அடையாளப்படுத்தப்பட்வர்களக இருக்கின்றனர். ஆகவே 150*8 என்று பார்க்கின்றபோது 1200பேர் வரையில் சமுகத்திலிருக்க முடியும் என்று அனுமானிக்கின்றோம்.  

அதனடிப்படையில் தான் சமுகத்தில் அடையாளப்படுத்தப்படாத நிலையில் தொற்றாளர்கள் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றோம். இது ஆய்வுகளை அடிப்படையாக வைத்த அனுமானமே. ஆகவே இதுபற்றி தீர்மானத்திற்கு வருதாயின் பரிசோதனைகளே ஒரேவழியாகும். 

கேள்வி:- கொரோனா வைரஸால் அடுத்துவரும் நாட்கள் மிகுந்த நெருக்கடியானவையாக அமையுமா? 

பதில்:- கொரோனா வைரஸ் விடயத்தில் நான்கு கட்டங்கள் காணப்படுகின்றன. முதலில் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்படாத நிலை, அங்காங்கே தொற்றாளர்கள் கண்டறியப்படும் நிலை, குடும்ப உறுப்பினர்கள் அல்லது தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்படும் நிலை, நான்காவது சமுகத்தினுள் தொற்று முழுமையாக பரவும் நிலை ஆகியன அவையாகின்றன. 

இலங்கையானது தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது. ஆகவே நான்காவது நிலைமையை அடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையே அவசரமாக தற்போது முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமது நாட்டின் சுகாதார துறையின் வினைத்திறனும் வளங்களும் வரையறுக்கப்பட்டவை. ஆகவே கொரோனா பரவல் சமுக மட்டத்தினை அடைந்தால் பெரும் எண்ணிக்கையான உயிரிழப்புக்களே ஏற்படும். அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார துறையும் செயலிழக்கும் நிலையே  உருவாகும். 

கேள்வி:- கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்கு எத்தகைய முற்கூட்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்?

பதில்:- சதாரண வயதுடையவர்களுக்கு தொற்று ஏற்படுகின்றபோது உயிரிழப்பானது 4 சதவீதமாகவே காணப்படும். ஆனால் வயதானவர்களுக்கு தொற்று ஏற்படுகின்றபொது உயிரிழப்பு வீதம் 20 சதவீதமாக காணப்படுகின்றது. ஆகவே எமது முதுசங்களாக இருக்கும் வயதானவர்களை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு தனிநபர்களுக்கும் கூட்டுப்பொறுப்பு காணப்படுகின்றது. 

அதுமட்டுமன்றி வயதானவர்களை ஏனையவர்களுடன் நேரடியான தொடர்புகளை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் வைத்திருப்பதே பொருத்தமானதாகும். இதனைவிடவும், உயர் குருதி அழுத்தம், இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோயாளிகளும் கர்ப்பிணி தாய்மார்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. 

கேள்வி:- கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைபவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- நூற்றுக்கு 99 சதவீதம் அவ்வாறான நிலைமை இல்லாதபோதும் அவ்வாறான சில நிலைமைகள் அண்மைய நாட்களில் பதிவாகின்றன. அவ்வாறு மீண்டும் தொற்று ஏற்படுகின்ற நிலைமை அதிகரித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்கு மிகப்பெரும் சவாலாகவே அமையும்.

(நேர்காணல்:- ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04