அரசுக்குக் காத்திருக்கும் முள்படுக்கை

12 Apr, 2020 | 03:17 PM
image

கடந்த செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு வருமானம் வரும் அனைத்து வழிகளும் சூனியமாகி விட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் அவ்வாறு கூறியது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக தான். அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 200 ரூபாவைக் கடந்து வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தடைப்பட்டு போயுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை முற்றாகவே நின்று போயுள்ளது. சுற்றுலாப் பயணிகளை நம்பியிருந்த விடுதி மற்றும் உணவகத் தொழில்துறை அடியோடு படுத்து விட்டது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் அனுப்பி வரும் அந்நியச் செலாவணியும் இப்போது கிடைப்பதில்லை. தேயிலை, இறப்பர், தெங்கு போன்ற இலங்கை பாரம்பரிய ஏற்றுமதித் துறையும் சரிவைச் சந்தித்திருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில், இலங்கை அரசாங்கத்தின் வருமானம் சூனிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. உள்நாட்டு இறைவரி வருமானங்களும், சுங்க வருவாயும் கூடத் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையை, இலங்கைத் தீவு முன்னொரு போதும் எதிர்கொண்டதில்லை.

மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போருக்கு முகம் கொடுத்திருந்த போதும் கூட, இலங்கைக்கு இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டதில்லை. இப்போதுள்ள நிலையில் இருந்து பார்த்தால், ஒரு பக்கம் போரை நடத்திக் கொண்டே, பொருளாதார உறுதிப்பாட்டையும் ஓரளவுக்காவது தக்கவைத்துக் கொள்வதில் அப்போதிருந்த அரசாங்கங்கள், வெற்றி பெற்றிருந்தன என்றே கூறலாம், கொரோனா என்ற வைரஸ் பரவல் இலங்கை போன்ற நாடுகளின் நிலையை பரிதாபத்துக்குரியதாக மாற்றியிருக்கிறது.

கொரோனாவை வெற்றி கொள்வதற்கான போரை ஒரு பக்கம் நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகள் இன்னொரு பக்கத்தில் பொருளாதார சீரழிவில் இருந்து தப்பிக்கவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

வளர்ந்த நாடுகளுக்கும் இதே சவால் இருக்கிறது. ஆனால், அந்த நாடுகள் கொரோனாவுக்கு எதிரான போரைப் போலவே, பொருளாதாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றன.

இலங்கை போன்ற நாடுகளுக்கு பொருளாதார வீழ்ச்சி மீண்டெழ முடியாதளவுக்கு கடுமையானதாக இருப்பது தான் பெரும் சவால். இலங்கைக்கு இப்போது வருமானங்கள் கிடைப்பதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்ட நிலையில், செலவினங்கள் பெருமளவில் அதிகரித்து விட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களுக்காகவும் அரசாங்கம் கணிசமான நிதியைச் செலவிட வேண்டியிருக்கிறது.

விரைவில் ஒரு பலமான அரசாங்கத்தை, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அமைப்பதற்கான கனவில் இருக்கும் தற்போதைய அரசாங்கம், கூடிய விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்டுள்ள ஊரடங்கினால், பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்காமல் தட்டிக்கழிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

எனவே, தொழில் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கான உரிய நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தின் நிதிக் கையிருப்பின் பெரும் பகுதியை செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில், அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள நிதி குறைந்து வருவது ஆச்சரியமில்லை. இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியை விட இறக்குமதியே அதிகமாக உள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு கிட்டத்தட்ட, 10 சதவீதத்துக்கு மேலாக சரிந்து போயிருக்கிறது.

இந்தச் சரிவினால், இறக்குமதியாகின்ற அத்தியாவசியப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகளவு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இது உள்நாட்டில் இந்தப் பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்திருக்கும் நிலையில், மற்றொரு பக்கம், இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பும் அதிவேகத்தில் கரைந்து போகும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் தான் அரசாங்கம், மோட்டார் வாகனங்களின் இறக்குமதியை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தியது. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனைப் போலவே வெளிநாடுகளில் இலங்கையர்கள் முதலீடு செய்வதற்கும் 3 மாத காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் நிதி நிலைமையைச் சமாளிக்க முற்படுவதாக காட்டிக் கொள்ளப்படுகிறது.

ஆனால் இவை சின்னச் சின்ன ஏற்பாடுக ளே தவிர, இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு, இவற்றினால் தீர்வு கிடைக்கப் போவதில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டெழ வேண்டும், பாதுகாப்பும், இயல்புமான சூழல் மீண்டும் ஏற்பட வேண்டும். ஏற்றுமதி வாய்ப்புகளும், சுற்றுலா வாய்ப்புகளும் மீண்டும் கைகூட வேண்டும்.

இவையெல்லாம் சாத்தியமானால் தான், இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்திக் கொள்வதற்கான சூழல் உருவாகும். அவ்வாறானதொரு சூழல் மிக அண்மையில் இருப்பதாகத் தோன்றவில்லை. கொரோனா பரவலின் தற்போதைய வேகமும், வீரியமும், இதன் போக்கு எவ்வாறாக இருக்கும் என்று சரியாக கணக்கிட முடியாத நிலையே உள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை காப்பாற்றி விட்டதாகவோ, அல்லது மீட்டு விட்டதாகவோ கூடிய விரைவில் பிரகடனம் செய்யக் கூடும். அவ்வாறு செய்தால் தான் அவர்களால் விரைவில் தேர்தலை நடத்த முடியும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆனால், என்னதான் தேர்தலை நடத்தி ஆட்சியைப் பிடித்தாலும் கூட, அடுத்து அமையப் போகும் அரசாங்கத்துக்கு, அது முள்ப் படுக்கையாகத் தான் இருக்கும். ஏனென்றால இலங்கை இதுவரையில்லாதளவுக்கு மோசமான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது,

எல்லாத் தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டு நிற்கின்றனர். இவ்வாறான நிலையில், அரசாங்கம், எடுக்கக் கூடிய நடவடிக்கைகளால், இலங்கையின் பொருளாதாரத்தை இனிமேலும் சரிந்து போகாமல் பாதுகாப்பதே பெருஞ் சிரமம். அதற்கு அப்பால், பொருளாதார வளர்ச்சி, சுபீட்சம் என்றெல்லாம் அரசியல்வாதிகள் கதையளக்க ஆரம்பித்தார்கள் என்றால், அது அவர்கள் மக்களை மீண்டும் முட்டாள்களாக்க முனைகிறார்கள் என்றே அர்த்தம்.

என்.கண்ணன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21