மூக்கை நுழைக்கும் படைத்தரப்பு

Published By: Digital Desk 3

12 Apr, 2020 | 01:58 PM
image

சுவிஸ் மதபோதகரின் வருகையினால், கொரோனா பீதி வடக்கையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இழந்து போன பிடியை மீண்டும் வலுப்படுத்துவதில் படைத்தரப்பும், செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதில், அரசியல் தரப்புகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இப்போது மிக முக்கியமான அங்கமாக ஆயுதப்படையினர் மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்புக்கான ஒருங்கிணைப்புத் தலைமைப் பதவி இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

கோரோனாவைக் கட்டுப்படுத்தும் விடயங்களைக் கையாளும் 40 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட 9 படைத் துறைசார் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், வடக்கிலும் கொரோனா தடுப்பு மற்றும், நிவாரணச் செயற்பாடுகளில் படைத்தரப்பின் தலையீடுகள் எந்தளவுக்கு இருக்கும் என்று கணிப்பது கடினமானதல்ல.

சீனாவில் தொடங்கி இப்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெய்ன் என்று பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலி எடுத்துக் கொண்டிருக்கிறது கொரோனா.

இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பெரும்பாலான நாடுகள் தமது நாட்டின் சுகாதார மற்றும் சிவில் அதிகாரிகளைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஊரடங்கு மற்றும் முற்றாக முடக்குதல் (Lock down) உத்தரவுகளை பிறப்பித்துள்ள நாடுகள் கூட, அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்புக்கு சிவில் அதிகாரிகளையும், பொலிசாரையும் தான் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் கூட இன்னமும் இராணுவத்தின் உதவி கோரப்படவோ பெறப்படவோ இல்லை. கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இராணுவம் உதவி கோரப்பட்டால், உதவத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை.

ஆனால், சீனா, இத்தாலி போன்ற நாடுகள் இராணுவத்தைப் பயன்படுத்தியிருந்தன. இப்போதும் பயன்படுத்துகின்றன. இலங்கையில் கொரோனா ஒழிப்பு செயற்திட்டம் தொடங்கப்பட்டதும், அதற்குள் முதலில் உள்வாங்கப்பட்டது இராணுவம் தான். இராணுவத் தளபதியிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து வருவோரைத் தனிமைப்படுத்தும் பொறுப்பும் இராணுவத்திடமே வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தல் நிலையங்கள் பெரும்பாலும், இராணுவ தளங்களுக்கு உள்ளாகவோ, அல்லது அதனை அண்டியதாகவோ தான் பெரும்பாலும் அமைக்கப்பட்டன.

அரசாங்கம் முதலில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கே நடவடிக்கை எடுத்தது. அவர்களை சாதாரணமாக- அகதிகளைப் போல, தங்க வைக்க முடியாது. அவ்வாறு செய்தால், அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே, அவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. இராணுவ முகாம்களில் அவ்வாறான கட்டமைப்புகள் ஓரளவுக்கு இருந்தன. அதைவிட, தேவையான மேலதிக வசதிகளை குறுகிய காலத்தில் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஆளணி வலுவும் ஆயுதப்படைகளிடம் இருந்தது.

அதனைக் காரணம் காட்டி, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முக்கிய செயற்திட்டங்கள் அனைத்தும் படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பெருளவு நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டது. வெளிநாடுகளும், நிதியுதவிகளை வழங்கின. சர்வதேச அமைப்புகளின் கொடைகளும் கிடைத்தன.

இவற்றைக் கொண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களில் பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இதன் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் முகம் சுழிக்காமல் வெளியேற உதவியுள்ளது உண்மையே.

ஆனால், இதற்காக ஒதுக்கப்பட்ட பெருமளவு நிதி படைதரப்பின் பௌதிக வளக் கட்டமைப்பை பலப்படுத்தவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான், வெளியே அதிகம் தெரியாத இரகசியம். கொரோனா ஒழிப்பு செயற்திட்டம் முடிவுக்கு வரும் போது, இதற்காக ஒதுக்கப்பட்ட பௌதிக வளங்கள் படைத்தரப்பின் கைகளிலேயே இருக்கப் போகிறதே தவிர, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்க்கு பயன்படப் போவதில்லை.

இந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் சிவில் அதிகாரிகளிடம் இருந்திருந்தால், உள்ளூர் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கும். அரசாங்கம் மிக சூட்சுமமான முறையில் படைத்தரப்பை இதற்குள் உள்வாங்கிக் கொண்டதால், மக்கள் மத்தியில் படையினர் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் அவர்கள் தமக்கான வளங்களை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. தனிமைப்படுத்தல் நிலையங்கள் சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தால், அதிகளவானோர் அதனைப் பயன்படுத்தியிருக்க முடியும் என்றொரு கருத்தும் வடக்கில் உள்ள சிவில் அதிகாரிகள் மத்தியில் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில், சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் பங்கேற்றவர்கள் அல்லது அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 7 பேருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அந்த ஆராதனையில் பங்கேற்றவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை. பெரும்பாலானவர்கள் வீடுகளில் தான் இன்னமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 20 பேர் வரையே பலாலி தனிமைப்படுத்தல முகாமுக்கு கொண் செல்லப்பட்டுள்ளனர்.

அந்த ஆராதனையில் பங்கேற்ற பலர் இன்னமும் தம்மை வெளிப்படுத்தாமல், மறைந்திருக்கிறார்கள். தம்மை வெளிப்படுத்தினால், இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு விடுவோமோ என்ற பயமே அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் மற்றும் பலாலியில் இராணுவ முகாம்களுக்குள்ளேயே தனிமைப்படுத்தல் நிலையங்கள் செயற்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் செயற்படும், ஏனைய அனைத்து தனிமைப்படுத்தல் நிலையங்களும், இராணுவ அல்லது விமானப்படைத் தளங்களுக்குள்ளே தான் இருக்கின்றன. இதுபோன்ற காரணிகளைக் கவனத்தில் கொண்டு தான், பிரதேச மட்டத்தில், - சுகாதார அதிகாரிகள் பிரிவுகள் தோறும் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்ற கருத்து பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தினரால் இப்போது முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாத்திரமன்றி நிவாரண விநியோகங்களிலும், படைத்தரப்பு தமது மூக்கை நுழைப்பதில் தீவிரமாக இருப்பதாகவும், வடக்கில் உள்ள சிவில் அதிகாரிகள் விசனமடைந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், வறிய மக்களுக்கு விநியோகிப்பதற்காக யாழ். மாவட்டச செயலகத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை, கண்காணிக்கும் பணியில், அந்தந்த பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

போர்க்காலத்தில் நிவாரணப் பணிகளில் இராணுவத் தலையீடுகள் பெரும்பாலும் இருந்ததில்லை. அவை முற்றிலுமாக சிவில் அதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது, கொரோனா நிவாரணப் பணிகளில் இராணுவத் தலையீடுகள் தோன்றியிருக்கின்றன.

வீடு வீடாக கிராம சேவை அதிகாரிகளால் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு இராணுவத்தினரை பாதுகாப்பாக அனுப்புவதற்கு படைத்தரப்பு முற்பட்டது.

அரச அதிகாரிகள் அதனை விரும்பவில்லை. தாங்கள் அந்தப் பணத்துக்கு பொறுப்பேற்பதாக கூறி அவர்கள் இந்த யோசனையை நிராகரித்துள்ளனர். அதுபோலவே, ஓய்வூதியம் பெறுவோரின் விபரங்களை கிராம சேவை அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்ட படைத் தரப்பு, அவர்களை வங்கிகளுக்கு அழைத்துச் சென்று ஓய்வூதியம் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தது.

இரண்டு நாட்கள், இதற்காக போக்குவரத்துச் சபை பஸ்களின் சேவையும் பெறப்பட்டது. ஆனால் வடக்கில் இராணுவத்தினர் எதிர்பார்த்தது போல இந்தச் சேவைக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. 25 வீதமானவர்கள் தான் இதனைப் பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. ஓய்வூதியம் பெற்றுக் கொள்பவர்களில் பலர் இப்போது ஏரிஎம் அட்டைகளை வைத்துள்ளனர். எனவே தேவைக்கேற்ப அவ்வப்போது அவர்கள் வசதியான இடத்தில் அதனைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அதைவிட, ஓய்வூதியம் பெற்றுக் கொள்பவர்கள் தமக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வது வழக்கம். ஆனால் தற்போதைய நிலையில், அவ்வாறு பொருட்களையோ மருந்துகளையோ வாங்க முடியாத நிலையில், இராணுவத்தினரின் சேவையை பெற்றுக் கொள்ள பலரும் முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதுமாத்திரமன்றி, சுகாதார அதிகாரிகளின் பணிகளிலும், மூக்கை நுழைக்க ,படைத்தரப்பு மேற்கொள்ளும் முயற்சிகள் துறைசார்ந்த அதிகாரிகள் மட்டத்திலும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஊரடங்கு கண்காணிப்பு தொடக்கம், கொரோனா தடுப்புக்கான நடவடிக்கைகள், நிவாரணம் வழங்கல், தனிமைப்படுத்தல் என்று எல்லா விடயங்களிலும், இராணுவத் தலையீடுகள் காணப்படுவது வடக்கிலுள்ள சிவில் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

போருக்குப் பிந்திய சூழலில் வடக்கு முழுமையாகவே இராணுவ மயப்படுத்தப்பட்டிருந்தது. 2015 ஆட்சி மாற்றம் தான், அநத நிலையை ஓரளவுக்காவது மாற்றியமைத்தது. தற்போது, கொரோனாவைப் பயன்படுத்திக் கொண்டு, முன்னரைப் போன்ற சூழலை மீண்டும் உருவாக்குவதில் தான் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனாவுக்குப் பிந்திய சூழலிலும் இந்த நிலை தொடருமானால் அது பெரும் சிக்கலாகவே மாறக் கூடும்.

கபில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22