வலுப்பெறுமா இராணுவ அதிகாரம்?

12 Apr, 2020 | 01:35 PM
image

ஒரு பக்கத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூடுவதில்லை, எப்படியாவது மே மாதத்துக்குள் பொதுத் தேர்தலை நடத்தி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் அரசாங்கம்- இன்னொரு பக்கத்தில் தேர்தல்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் மீது முழுக் கவனம் செலுத்த வேண்டும் ஒரு பிரசாரத்தையும் முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களும், அமைச்சர்களும், ஆளும் தரப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அதுபோல், எப்படியாவது கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஆளும் தரப்பின் கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் அதற்கு மாறான ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதை காணமுடிகிறது.

ஆளும்கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும், சமூக வலைத்தளங்களில், இப்போதைக்கு தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்து விட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று பிரசாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதுமாத்திரமன்றி, அரசாங்க நிர்வாக அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, 9 மாகாணங்களுக்கும் மேஜர் ஜெனரல்களை ஆளுநர்களாகவும், 25 மாவட்டங்களுக்கு பிரிகேடியர்களை மாவட்டச் செயலர்களாகவும் நியமிக்க வேண்டும் என்றும் அவர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் உட்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, அறுதிப் பெரும்பான்மையுடைய அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பது, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்தாக இருந்தாலும், எதற்காக கீழ்மட்டத்தில் இருந்து, அதற்கு மாறான கருத்து சமூக மயப்படுத்தப் படுகிறது?.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே, கோத்தாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட, எலிய, வியத்மக போன்ற அமைப்புக்களைச் சார்ந்தவர்களால், முனனெடுக்கப்பட்ட பிரசாரங்கள், வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கும், மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் தலைவைர்களின் கருத்துக்களுக்கும் இடையில் பல முரண்பாடுகள் காணப்பட்டன.

ஆனாலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இந்த இரண்டு தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தன. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிற்பட்ட காலத்தில், அவ்வப்போது மாற்றுக் கருத்துக்கள் வெளிவரத் தான் செய்கிறது.

அவ்வாறான ஒரு மாற்றுக் கருத்தாகத் தான், இந்த விவகாரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில், தனக்கு சாதகமான அதிகாரிகள் மட்டத்தைக் கொண்டு, ஆட்சியை நடத்த விரும்புவர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பொறுத்தவரையில், சிவில் அதிகாரிகளையும், மரபுசார் அரசியல்வாதிகளையும், அதிகம் நம்பாதவர்.

அவர்களை விட, இராணுவ அதிகாரிகளும், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும் தான் திறமையானவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், ஊழல் செய்யாதவர்கள், வேலையை உரிய முறையில் உரிய நேரத்தில் செய்யக் கூடியவர்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளவர். இந்த விடயத்தில் இரண்டு பேருக்கும் இடையில் காணப்படும் கருத்து வேற்றுமையானது சாதாரணமானது அல்ல.

மாகாண ஆளுநர்களாக, மாவட்டச் செயலர்களாக இராணுவ அதிகாரிகளை நியமித்து, நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சமூக வலைதளங்களில் செய்யப்படுகின்ற பிரச்சாரம், அரசியல் மற்றும் சிவில் துறையினரை ஒதுக்கி வைத்து விட்டு, இராணுவ ஆட்சிப் பாணியில் நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கிறது.

தற்போதைய அரசாங்கத்தில், சில உயர்மட்ட நியமனங்களின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் விருப்பம் அல்லது ஆலோசனை, கருத்தில் கொள்ளப்படாத சூழ்நிலை காணப்பட்டதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தது.

ஏற்கனவே கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையின் சிவில் நிர்வாக கட்டமைப்பில், இராணுவப் பின்னணியுள்ளவர்களின் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறான ஒரு தருணத்தில் ஆளுநர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் இராணுவ அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று சமூகத்தில் பரப்பப்படுகின்ற கருத்துக்களின் பின்னால், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை அதிகாரம் மிக்கவராக வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்ற சக்திகளே இருக்கக்கூடும்.

சிங்கள பௌத்த கடும் கோட்பாட்டாளர்களின் ஹீரோவாக இன்று உயர்ந்து நிற்கிறார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. அவருக்கு அரசியலமைப்பு ரீதியாக போதிய அதிகாரங்கள் இல்லை என்றும் அவ்வாறான அதிகாரங்களை கொடுத்தால், அவர் நாட்டில் ஊழல்களையும் மோசடிகளையும் முற்றாக ஒழித்து, தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத, சிங்கள பௌத்த பாரம்பரியங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவுவார் என்றும், அவர்கள் மத்தியில் கருத்து தோன்றியிருக்கிறது.

இவ்வாறான ஒரு, ஆட்சியை நிறுவுவதற்கு மரபுசார் அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள் என்பதும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் கருத்தாக இருக்கிறது. அவர்களை ஓரம் கட்டிவிட்டு, கோத்தாபய ராஜபக்ச தனக்கு கீழ்ப் படியக் கூடிய, படை அதிகாரிகளின் மூலம், நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற செய்திகளும், இடப்படுகின்ற பதிவுகளும், வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துகளும், இதனைச் சார்ந்ததாகவே உள்ளன. இந்தக் கருத்துக்கள் பதிவுகள், எல்லாமே அரசாங்கத்தினதோ, அரசாங்கத் தலைவர்களினதோ தீர்க்கமான நிலைப்பாடு என்று எடுத்துக் கொள்ள முடியாவிடினும், இத்தகைய பிரசாரங்களின் பின்னால் இருக்கின்ற நோக்கங்கள் ஆபத்தானவை.

கொரோனா வைரஸ் இலங்கைக்கு ஆபத்தை மாத்திரம் ஏற்படுத்தவில்லை. இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புக்கும் கூட ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதைக்கு பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்றும், 3 ஆண்டுகளுக்கு அதனைப் பிற்போட வேண்டும் என்றும், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் கூட கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்துக்குப் பின்னாலும், இத்தகைய பிரசாரங்களுக்குப் பின்னாலும் இருக்கக் கூடிய சக்தி ஒன்றாகத் தான் இருக்கக் கூடும். நாடாளுமன்றத்தைக் கூட்டுவதா -இல்லையா என்பதை விட, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது முக்கியமானது.

ஆனால் அதனை நடத்தக் கூடிய சூழல் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில், தேர்தலை நோக்கிச் செல்வது போலவும், இன்னொரு பக்கம் தேர்தல்கள் அவசியமில்லை என்றும் காட்டப்படும் பூச்சாண்டி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளது.

இந்த நெருக்கடியான தருணத்தில் குழம்பி குட்டையில் மீன் பிடிக்கவே எல்லா தரப்புகளும் விரும்புகின்றன. இவ்வாறானதொரு நிலை நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தானதாகவும், இராணுவ சர்வாதிகாரம் பலம் பெறுவதற்கு வாய்ப்பானதாகவும் இருக்கப் போகிறது.

இது, தனியே நாட்டு மக்களுக்கு மாத்திரம், பேதியைக் கொடுக்கின்ற ஒரு செய்தி அல்ல, மரபுசார் அரசியல்வாதிகளுக்கும் கூட வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடியது தான்.

கார்வண்ணன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21