ஊடக சந்திப்புகளில் எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக தூற்றும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன - தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐ.தே.க. கடிதம்

Published By: Digital Desk 3

10 Apr, 2020 | 02:40 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் தேர்தல் சட்டத்தை மீறி நாட்டு மக்களுக்கு ஆற்றப்படும் உரை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்புக்கள் எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக தூற்றும் செயற்பாடுகளாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட செயலாளர் நிஷங்க நாணயக்காரவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் கட்சி பேதமின்றி நாட்டு மக்களின் நலன் கருதி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளை அரசியல்மயப்படுத்தி அதில் அரசியல் ரீதியாக பிரபல்யமடையும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றமை கவலையளிக்கிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட போது நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடியான நிலைமை காரணமாக எதிர் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு அணியும் மக்கள் மத்தியில் அரசியல் கருத்துக்களையோ வாதங்களையோ தெரிவிக்கவில்லை. எனினும் இந்த அனைத்து குழுக்களும் நாட்டு மக்களின் சுக நலன்களுக்கான நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

இவ்வாறான சூழலில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த சிலர் மீண்டும் மீண்டும் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தேர்தல் சட்டத்தை மீறி நாட்டு மக்களுக்கு ஆற்றப்படும் உரை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்புக்களை எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக தூற்றும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கு நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு இதற்கு சிறந்த உதாரணமாகும். அரச தொலைகாட்சி சேவை உள்ளிட்ட வேறு சில தொலைக்காட்சி சேவைகளும் கூடுதலான நேரத்தை ஒதுக்கி அதனை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரண மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த கருத்துக்களானது பாகம் முழுமையாக அரசியல் ரீதியாகவே காணப்பட்டது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதாகக் கூறிய அவர்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியை விமர்சித்துக் கொண்டிருந்ததோடு, தமது அரசாங்கத்தின் சிறப்பம்சங்களை கூறுவதற்கே முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சி மீது அடிப்படையற்ற விதத்தில் முன்வைக்கப்படும் இவ்வாறான விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. அத்தோடு இவ்வாறானதொரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது அருவருக்கத்தக்கது. அத்தோடு இவை தேர்தல் சட்டத்தை மீறும் செயற்பாடாகும்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண ஊடகங்களை பயன்படுத்திக் கொண்ட விதத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை. சிறந்த அரசியல்வாதி என்ற ரீதியில் அமைச்சரவை முடிவுகளை மாத்திரம் அறிவித்து தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது சிறந்த தரத்தினை பாதுகாக்கும் வகையில் மதிப்புடன் செயற்பட்டார். எனினும் பந்துல குணவர்தன தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தொடர்ந்தும் ஊடகங்களை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இவ்வாறு சட்ட விரோதமாக அரசியலில்ல ஈடுபடுகின்றமை மீண்டும் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்காக தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மிகுந்த பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு இவ்வாறான முறைகேடான அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக சுயாதீனமாக செயற்படும் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்