தன்னிடம் முறைப்பாடளித்த பெண் ஒருவரிடம் அவருக்கு சாதகமாக விசாரணைகளை செய்து மன்றில் அறிக்கை சமர்பிக்க ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரி அதில் 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் போது கைது செய்யப்பட்ட கல்கிசை விஷேட குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமரவீர குணரத்னவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய நேற்று உத்தரவு பிறப்பித்தார். நேற்று முன் தினம் இரவு கல்கிசை கொமர்ஷல் வங்கியின் முன்னால் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினரால், குறித்த பொலிஸ் பரிசோதகர் இலஞ்சம் பெற முற்பட்டபோது கைது செய்யப்பட்டிருந்தார். இந் நிலையில் அவர் நேற்று நண்பகல் கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். 

சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு, நேற்று கொழும்பு பிரதான நீதிவானுக்கு விசாரணை அறிக்கை ஒன்றினையும் சமர்பித்தது. அதன்படி, 

தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த இஷானி அஸ்வினி டி சில்வா என்ற பெண் அண்மையில் தெஹிவலை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்றுள்ளார். காணி மற்றும் வீடு விற்பனை தொடர்பிலான தரகரான இந்தப் பெண் சஞ்சீவனீ என்ற பெண்னுக்கு எதிராக 32 இலட்சம் ரூபா மோசடி குறித்து முறைப்பாடளிக்கவே இவ்வாறு தெஹிவளை பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். 

இதன்போது மோசடிச் செய்யப்பட்ட தொகை அதிகாகமாக இருந்ததால் கல்கிசை பிரந்திய விஷேட குற்றவியல் பிரிவில் அம்முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு தெஹிவளை பொலிஸாரினால் இஷானிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கல்கிசை விஷேட குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ள இஷானி அங்கு பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் குனரத்னவை சந்தித்து விடயத்தை கூறியுள்ளார். 

இதன்போது முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள அவர், ' இது பெரிய விவகாரம் எமக்கு இந்த விவகாரத்தை சென்று விசாரிக்க வாகனம் கூட இல்லை. எனவே உங்கள் விடயத்தை பார்க்க எனக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள்' என முறைப்பாடளித்த இஷானியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் தொலைபேசியில் அப்பெண்னை அழைத்துள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி குணரத்ன, பெல்லன்வில பகுதிக்கு வருமாறு அப்பெண்னை அழைத்து அங்கு சென்று அவருடன் கதைத்துள்ளார். 

இதன்போது பெல்லன்விலவில் வைத்து ஒரு இலட்சம் ரூபா பணத்தை தனக்கு தருமாறும் அப்போது இது குரித்து முறைப்பாட்டாளரான இஷானிக்கு சார்பாக விசாரித்து அதற்கமைய நீதிமன்றுக்கும் அறிக்கை சமர்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

எனினும் அதற்கு மறுத்துள்ள முறைப்பாட்டளரான இஷானி 5000 ரூபாவை கொடுத்துள்ளார். 

இந் நிலையில் இது குறித்து நேற்றைய தினம் கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிப்பதாகவும் முறைப்பாட்டாளருக்கு சாதகமாக சமர்பிக்க 20 ஆயிரம் ரூபா தருமாறும் அவர் நேற்று முன் தினம் கோரியுள்ளார். அதனை தராது விடின் எதிராளியான சஞ்சீவனிக்கு சார்பாக அறிக்கை சமர்பிப்பதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார். 

இந் நிலையில் இது குறித்து முறைப்பாட்டளரான பெண் இலஞ்ச ஊழல் அணிக் குழுவுக்கு அறிவிக்கவே, நேற்று முன் தினம் இரவு 20 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொள்ள கல்கிசை கொமர்ஷல் வங்கி அருகே பொலிஸ் பரிசோதகர் குணரத்ன வந்த போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர். 

இந் நிலையிலேயே நேற்று மன்றில் அஜர்ச் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.