விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது யார் என்று அதி.முக.வினர் சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தி.மு.க. வினர் கடும் அமளியில் ஈடுப்பட்டமையால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான 2ஆம் நாள் விவாதம் நேற்று கடும் அமளிக்கிடையே நடைபெற்றது. இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மீத்தேன் திட்டம் குறித்து பெரம்பூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ வெற்றி வேல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

பெரம்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் 2ஆம் நாள் விவாதத்தை தொடங்கி வைத்து பேசியபோது 23ஆம் புலிகேசி போல சட்டசபை தேர்தலில் பிரசாரத்திற்கு சென்றவர்களை மக்கள் புறந்தள்ளி விட்டதாக குறிப்பிட்டார். மேலும் அவர் விடுதலைப்புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் கொல்லப்படும் போது யாருடைய ஆட்சி நடைபெற்றது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது என்றும் பேசினார். வெற்றிவேல் எம்.எல்.ஏவின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அப்போது எழுந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் இலங்கை பிரச்சினை எதற்கு என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது எழுந்த அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் உரையில் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தார்.