கச்சதீவை நான் தாரை வார்க்க வில்லை. இது தொடர்பில் பலமுறை விளக்கம் கொடுத்தப்பின்பும் ஜெயலலிதா என்னை சாடுகின்றார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

“கச்சதீவு” பற்றி தமிழகச் சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சதீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறார். 1991ஆம் ஆண்டிலிருந்து அவர் இதே கதையைத் தொடர்ந்து பேரவையிலும், வெளியிலும் பல முறை கூறி, அதற்கு நான் அவ்வப்போது விளக்கமும் அளித்து விட்டேன். தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? இருந்தாலும் இப்போது அவர் “கச்சதீவு” பற்றியும், என்னைப் பற்றியும் பேசியிருப்பதால், மீண்டும் அது பற்றிய விளக்கத்தை ஒரு முறை அளிக்கிறேன். 

தனது ஆட்சிக் காலத்தில் கச்சதீவைத் திரும்பப் பெறுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று அறிக்கை விடும் ஜெயலலிதா பதினைந்து ஆண்டுக் காலம் ஆட்சியிலே இருந்த போது - கச்சதீவை மீட்கும் பிரச்சினையிலே தனது சபதத்தை நிறைவேற்ற உண்மையிலேயே அதில் உறுதியாக இருந்தால் அ.தி.மு.க. ஆட்சி இராஜினாமா செய்யும் என்று எப்போதாவது அறிவித்தது உண்டா? 

சுதந்திர தினவிழாவிலே கோட்டை கொத்தளத்திலே இருந்து கொண்டு வாய் சவடாலாக முழங்கி விட்டு, அந்தப் பேச்சு ஏடுகளில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் வெளி வந்ததே தவிர வேறு என்ன செய்தார்? உச்ச நீதி மன்றத்திலே வழக்கைப் போட்டு விட்டு, என் கடமை முடிந்து விட்டது என்று இருந்தாரே தவிர வேறு என்ன செய்தார்? இரண்டு மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதி விட்டு, பிரதமரிடம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததோடு சரி. ஆனால் நான் ஏதோ ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய்பொத்திக் கொண்டிருந்ததாக தற்போது எப்படியோ தப்பித் தவறி கரையேறி விட்டோம் என்ற இறுமாப்பில் வாய் நீளம் காட்டியிருக்கிறார். 

முதலில், மத்திய அரசால் கச்சதீவு தாரை வார்க்கப்பட்ட போது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா? 1974ஆம் ஆண்டிலேயே ஆகஸ்ட் 21ஆம் திகதி தமிழக சட்டசபையில் நான் நிறைவேற்றிய தீர்மானம்,'' இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சதீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சதீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து,  தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது”. எனவே தி.மு.க. அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வில்லை. 

“கச்சதீவு பிரச்சினையை முடிந்து விட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதில் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கும் அல்லது அந்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கின்ற எந்தக் கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதற்கு எந்தவகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற விரும்புகிறேன். 

தமிழக அரசை இது போன்ற பெரிய பிரச்சினைகளில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை.ஆக்க பூர்வமான  முறையில் பிரதமர் - முதலமைச்சர் இது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்புக் கூறுகள் வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.அனைத்துக் கட்சியினுடைய தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலே கூட - எத்தனை முறை இது பற்றி பிரதமரிடத்தில் தமிழக அரசின் சார்பிலே ஒரு முறையீடாக இந்த அரசு கச்ச தீவுப் பிரச்சினையில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியது, பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திலே எவ்வளவு ஏராளமான ஆதாரங்களை - கச்சதீவு தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் வழங்கியது, அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே எடுத்துக் காட்டி யிருக்கிறேன். இவ்வாறு கச்சதிவை மீட்பதற்கான முயற்சியை தொடர்ந்து நான் மேற்கொண்டிருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.