என்.எஸ்.ஜி.யிடம் பயிற்சி பெறும் பி.எம்.எஸ்.டி

22 Mar, 2020 | 11:17 AM
image

-கார்வண்ணன்

கொரோனா பீதி கொழும்பை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்த நிலையில் – பிரதமர் மகிந்த ராஜபக்ச, கூட்டங்கள், நிகழ்வுகளில் பங்கேற்பதில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவிப்பதற்கு முன்னதாக, கொழும்பில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில், நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 13 ஆம் திகதி நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், பிரதமர் மகிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் பதில் தூதுவர் வினோத் கே. ஜேக்கப் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியாவில் மிகமுக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தீவிரவாத முறியடிப்பு, பணய மீட்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு பயிற்சிகளைப் பெற்ற, NSG எனப்படும் தேசிய காவல்படையிடம், இரண்டு வார கால சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற PMSD எனப்படும், இலங்கையின் பிரதமர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்களை அளிக்கும் நிகழ்வே அது.

கொரோனா பீதி மக்கள் மத்தியில் தீவிரமடைந்து கொண்டிருந்த அந்தச் சூழலில், ஊடகங்களில் இந்தச் செய்தி அதிகளவில் கவனம் பெற்றிருக்கவில்லை. பிரதமர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு, கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி தொடக்கம், 29 ஆம் திகதி வரையான இரண்டு வாரங்கள், இந்தியாவில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தாக்குதலுக்கான தயார் நிலை மற்றும் நெருங்கிய, மெய்க்காவல் குறித்த விரிவான, முழுமையான பயிற்சிகளை NSGயின் பயிற்சி அதிகாரிகள் அளித்திருந்தனர். இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிகளை அளித்து வருவது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

ஒவ்வொரு ஆண்டும் 800இற்கும் குறையான இலங்கைப் படையினர் இந்தியாவில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். முப்படையினர், பொலிசார், உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பயிற்சி மையங்கள், வெவ்வேறு கற்கைநெறிகளில் பாதுகாப்புத் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த காலத்திலும் கூட இந்தியா இத்தகைய பயிற்சிகளை அளித்துக் கொண்டிருந்தது. 1980களின் தொடக்கம் மற்றும் நடுப்பகுதியில், இந்தியாவில் தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சிகளை அளித்தது. இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பாக “றோ“வின் அனுசரணையில், இந்திய இராணுவ அதிகாரிகள் அவர்களுக்குப் பயிற்சிகளை கொடுத்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் டேராடூனில் இந்திய இராணுவத்தின் பிரபலமான, பயிற்சி முகாம் உள்ளது. அங்கு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இயக்கங்களுக்கும் இந்தியா பயிற்சிகளை கொடுத்தது. சமகாலத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகளும் கூட இந்தியாவில் இராணுவப் பயிற்சிகளையும் பட்டப்படிப்புகளையும் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

தமிழ்ப் போராளிகளுக்கு இராணுவத்தினருக்கு எதிராக கெரில்லா தாக்குதல் உத்திகளை இந்திய இராணுவ அதிகாரிகள் கற்றுக் கொடுத்த அதேவேளை, இலங்கை இராணுவத்தினருக்கு கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் தீவிரவாத முறியடிப்புத் தொடர்பாக பயிற்சிகளை இந்திய இராணுவ அதிகாரிகளே கொடுத்துக் கொண்டிருந்தனர்.

1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்திக் கொண்ட போதும், இந்தியாவுடன் ஒத்துழைத்த ஏனைய சில தமிழ் அமைப்புக்களுக்கு வேறு பல பயிற்சிகளைக் கொடுத்தது. அதேவேளை இலங்கை இராணுவம், கடற்படைக்கு இந்தியாவே பெரும்பாலான பயிற்சிகளை அளித்து வருகிறது.

இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சிகள் மிகத் தரமானவை என்றும், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அந்தப் பயிற்சிகள் பெரிதும் கைகொடுத்தன என்றும், இலங்கை இராணுவ அதிகாரிகள் பலரும் கூறியிருக்கிறார்கள்.

அந்த வகையில் இலங்கையின் பிரதமர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு NSG அதிகாரிகள் அளித்திருக்கின்ற பயிற்சிகள் புதியவையோ ஆச்சரியமானவையோ அல்ல. ஆனால் இந்த தருணத்தில் கடந்த ஆண்டு, NSG தொடர்பாக தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த கருத்துக்களை மீள நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற சில நாட்களுக்குப் பின்னர், கல்முனை சாய்ந்தமருதுவில் சில தற்கொலைக் குண்டுதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது, அப்போது அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தனர்.

21/4 குண்டுத் தாக்குதல்களை அடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் இலங்கையில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அப்போது, இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து புலனாய்வு செய்யவும், அவர்களைக் கண்டறிந்து அழிக்கவும், உதவ NSG கொமாண்டோக்களை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

சென்னையில் 100 NSG கொமாண்டோக்கள் தங்கியுள்ளனர் என்றும் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டால், இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்கள் பேசி முடிவெடுத்தால், உடனடியாக அவர்களை கொழும்புக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அந்தச் செய்தி வெளியானதும், இந்தியாவின் News 18 தொலைக்காட்சிக்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச செவ்வி ஒன்றை அளித்திருந்தார். “இந்தியா எமக்கு வழங்கும் உதவிகளுக்கு நன்றி. NSG கொமாண்டோக்களை இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. தீவிரவாதிகளை அழிக்கின்ற, அவர்களை கையாளுவதற்குத் தேவையான திறமையும் அனுபவமும், இலங்கைப் படையினருக்கு உள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.

NSG கொமாண்டோக்களை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தயாராக இருந்தாலும், மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்ததால், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டார். இதனால் அந்த முயற்சிகள் அனைத்தும் கைவிடப்பட்டன.

விடுதலைப் புலிகளை அழித்த இலங்கைப் படையினருக்கு எத்தகைய தீவிரவாத அச்சுறுத்தல்களையும் கையாளக் கூடிய திறமை உள்ளது என்ற அப்போது மார்தட்டிக் கொண்டவர் இப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச.

விடுதலைப் புலிகளை அழித்தமை இலங்கை படைகளின் முக்கியமானதொரு சாதனை தான். அந்த தகுதியும், திறமையும் மாத்திரம், முழுமையான தேர்ச்சியாக இருக்க முடியாது. அதனை கடந்த ஆண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச புரிந்து கொண்டிருக்கவில்லை.

அப்போது, NSGயின் உதவி தேவையில்லை என்று வீராப்புடன் கூறிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஒரே ஆண்டுக்குள் தமது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியமானது.

அவர் இப்போது நிலைமைகளைப் புரிந்து கொண்டிருக்கிறாரா அல்லது, தனது பாதுகாப்பை இன்னமும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சொந்த நலனுக்காக NSGயிடம் பயிற்சி பெற தனது பாதுகாப்புப் பிரிவை அனுமதித்தாரா என்று தெரியவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49