வெற்றியீட்டுமா இராணுவம்?

22 Mar, 2020 | 09:17 AM
image

-சுபத்ரா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமான கட்டத்தை அடைவதற்கு முன்னதாக, இதனை இரண்டாவது “மனிதாபிமான போர் நடவடிக்கை” என்று குறிப்பிட்டிருந்தார் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா.

இலங்கை இராணுவம், 1987ஆம் ஆண்டு “ஒப்பரேசன் லிபரேசன்” என்ற பெயரில், பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இலங்கை இராணுவம் பெயரிட்டு நடத்திய, முதலாவது தாக்குதல் அது. அதற்குப் பின்னர், இலங்கை இராணுவம் வடக்கு, கிழக்கில் ஏராளமான பெயர்களில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

எனினும், 2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போருக்கு இராணுவமோ அரசாங்கமோ எந்தப் பெயரையும் சூட்டவில்லை. வன்னியைக் கைப்பற்றும் போர் நடவடிக்கை தீவிரமான கட்டத்துக்குள் நுழைந்த பின்னர், அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டதை அடுத்து, உலகளாவிய ரீதியான கவனத்தைப் பெற்றது.

அது அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்த ஆரம்பித்த பின்னரே, விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கான மனிதாபிமானப் போர் நடவடிக்கையையே தாங்கள் மேற்கொள்வதாக அரசாங்கம் கூறியது.

அதற்குப் பின்னரே, ஒட்டுமொத்த இறுதிக்கட்டப் போர் நடவடிக்கையும், மனிதாபிமானப் போர் நடவடிக்கை என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. 2009 மே 18ஆம் திகதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட அந்த மனிதாபிமானப் போர் நடவடிக்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல ஆயிரம் பேர் காயமடைந்தனர், சுமார் மூன்று இலட்சம் வரையான மக்கள் தமது ஒட்டுமொத்த வாழ்வையும் தொலைத்து விட்டு, உடுத்த துணியுடன், வவுனியாவில் உள்ள சிறப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அந்தப் போரை, பயங்கரவாதத்துக்கு எதிரான போராகவும், மூன்று இலட்சம் மக்களை மீட்பதற்காக நடத்திய போராகவும் தான் அரசாங்கம் வர்ணிக்கிறது. இந்தப் போரில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்ற போதெல்லாம், “மூன்று இலட்சம் மக்களை மீட்பதற்காக போரை நடத்தும் போது, சிலர் அதற்குள் அகப்பட்டுக் கொள்ளத் தான் செய்வதார்கள், அது தவிர்க்க முடியாதது” என்று நியாயப்படுத்துகிறது அரசாங்கம்.

விடுதலைப் புலிகளை இல்லாமல் ஒழிப்பதற்கு என்ற இலக்குடன் தொடரப்பட்ட போராக இருந்தாலும், மூன்று இலட்சம் தமிழ் மக்களை மீட்பதற்கு நடத்திய மனிதாபிமானப் போராக காண்பிக்கவே அரசாங்கம் முனைகிறது.

ஏனென்றால், அதன் மூலம் தான், போர்க்கால மீறல்களையும், போர்க்காலத்தில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களையும் முறைக்க முடியும். கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இராணுவம் முன்னெடுக்கும், நடவடிக்கையை இரண்டாவது மனிதாபிமானப் போர் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, வர்ணித்த போதே, வன்னியில் இதன் முதலாவது கட்டத்தின் போது இடம்பெற்ற அநீதிகளும் மீறல்களும் தான் பலருக்கும் நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.

வன்னியில் மேற்கொள்ளப்பட்டது மனிதாபிமானப் போர் என்பது எந்தளவுக்கு பொருத்தமானதென்ற கேள்வி இருந்தாலும், அந்தப் பெயர் அதிகாரபூர்வமாகச் சூட்டப்பட்டுள்ளதால் அதிலிருந்து விடுபட முடியாது. புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட முதலாவது மனிதாபிமானப் போர் நடவடிக்கைக்கும், இப்போது கொரோனா தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும், இரண்டாவது மனிதாபிமானப் போர் நடவடிக்கைக்கும்  (அதிகாரபூர்வமாக பெயரிடப்படவில்லை) இடையில், பல மிக முக்கியமான ஒற்றுமைகள் உள்ளது.

அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச, இப்போது பிரதமராக இருக்கிறார். அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்து போரை நெறிப்படுத்திய கோத்தாபய ராஜபக்ச இப்போது ஜனாதிபதியாக இருக்கிறார். முதலாவது மனிதாபிமானப் போர் நடவடிக்கையில் முக்கியமான பங்காற்றிய இரண்டு இராணுவத் தளபதிகள் தான், இப்போது பாதுகாப்பு அமைச்சையும், இராணுவத்தையும் வழி நடத்துகிறார்கள்.

மன்னாரில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் போர் முடியும் வரை, 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய, போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என முக்கியமான குற்றச்சாட்டுக்குள் உள்ளாகியிருக்கும். லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவே, இராணுவத் தளபதியாக இப்போது பொறுப்பில் இருக்கிறார். பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாகவும் இருந்து அவரே, முப்படைகளுக்கும் கட்டளைகளை வழங்கி வருகிறார்., இரண்டாவது மனிதாபிமானப் போர் நடவடிக்கையில், கொரோனா தடுப்புக்கான செயலணியின் தலைவராகவும் அவரே இருந்து வருகிறார்.

அதுபோலவே, 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்து, போரின் இறுதிக் கட்டத்தில் முக்கிய பங்காற்றிய, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இப்போது பாதுகாப்புச் செயலராக இருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதற்கு தலைமை தாங்கிய, மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர், கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மனிதாபிமானப் போருக்கும் தலைமை தாங்குகின்றனர்.

முதலாவது மனிதாபிமானப் போர், ஆரம்பத்தில் மட்டக்களப்பின் சில பகுதிகளையும், வன்னியையும் தனிமைப்படுத்தியது. அங்கு வாழ்ந்த மக்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக போராட வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது. விலையேற்றத்துக்கு முகம் கொடுக்க நேரிட்டது. வன்னியில், அப்போது மக்கள் எதிர்கொண்ட அந்த தட்டுப்பாட்டின் அளவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு முழு நாடுமே முகம் கொடுத்து நிற்கிறது. விலையேற்றத்தையும் கள்ளச் சந்தையையும் எதிர்கொண்டிருக்கிறது.

அப்போது, வடக்கு கிழக்கில் பல பகுதிகளில் ஊடரங்குச் சட்டம், சுற்றிவளைப்பு, தேடுதல்கள், சந்தேக நபர்களான ஆட்களைப் பிடித்துச் செல்வது என்பன சாதாரணமாக வாழ்வியல் நடைமுறைகளில் ஒன்றாக இருந்தன.

இப்போது கொரோனா தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும், தேடுதல்களும், தொற்றுள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களையும் தேடிப் பிடித்து, தனிமைப்படுத்தல் முகாம்களுக்குள் அடைக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதிகளவில் கொரோனா காவிகள் இருக்கலாம் என்று கருதப்படுகின்ற இடங்களில் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த போரை மீள நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது தற்போதைய நிலைமைகள்.

அந்தப் போர் தமிழ் மக்களையே பாரதூரமாகப் பாதித்தது. சிங்கள மக்களை வெற்றியைக் கொண்டாட வைத்தது. இந்தப் போர் பெரும்பாலும் தென்பகுதியையே கிலி கொள்ள வைத்திருக்கிறது. முதலாவது மனிதாபிமானப் போரில் இலங்கை இராணுவம் மீறல்களைத் தாராளமாகவே இழைத்திருந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாமலேயே இன்னொரு மனிதாபிமானப் போரை முன்னெடுத்திருக்கிறது இராணுவம். இந்தப் போரில் இலங்கை இராணுவம் வெற்றியீட்டத் தவறினால், புலிகளுடனான போரில் ஈட்டிய வெற்றி அர்த்தமற்றதாகக் கூட மாறிவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04