தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றபோது, தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. ஆட்சியில் இருந்த போதுதான் கச்சதீவு தாரைவார்க்கப்பட்டது. கச்சதீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்.

கச்சதீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சதீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சதீவை தாரை வார்த்தது தி.மு.க.தான். எனவே, கச்சதீவு குறித்த பேச தி.மு.க.வுக்கு அறுகதை கிடையாது. 

கச்சதீவு மீட்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை.  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க. இணைத்து கொள்ளாதது ஏன்? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கச்சதீவு தொடர்பான வழக்கில் அரசு இணைத்து கொள்ளப்பட்டது என்றார். 

இதற்கு பதிலளித்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:கச்சதீவை மீட்க வேண்டும் என கடந்த 1974ஆம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு முதல்வராக கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சதீவு பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக்கூறினார்.