ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 46 ஆவது பிறந்த நாள் விழா, புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், முதல்வர் நாராயணசாமி 46 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். இதன் போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 

ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். அவரை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டில் அவர் பிரதமராக நாம் பாடுபட வேண்டும். 

மேலும், புதுவையில் கடந்த ஆட்சியாளர்களின் கோப்புகளைப் பார்த்தால் பல முறைகேடுகள் வெளிவருகின்றன. 

கடந்த 10 ஆண்டுகளாக காரைக்கால் பக்கம் அவர்கள் செல்லவே இல்லை. காரைக்காலில் பல்வேறு துறைகளில் குளறுபடிகள் உள்ளன. அதனை எல்லாம் சரிசெய்ய வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறைகளில் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் பணியாற்றாத பட்சத்தில்தான் நான் தலையிடுவேன். ஆளுநரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும் 

அண்டை மாநிலத்தோடும் சுமுக உறவு வைக்க வேண்டும். தமிழகத்தில் ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவதுபோல புதுவையிலும் அந்தத் திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றார்.