எனது வாழ்க்கையில் எங்கும் அழையா விருந்தாளியாக சென்றதில்லை இனிமேலும் செல்லமாட்டேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பண மோசடி குற்றத்தில் சிக்கியுள்ள விஜய் மல்லையா இலண்டனில் தங்கியுள்ளார். அவர், சனியன்று இலண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் இங்கிலாந்துக்கான இந்திய தூதரும் பங்கேற்றார். மல்லையாவை பார்த்ததும் அங்கிருந்து தூதர் வெளியேறிவிட்டார். இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக மல்லையா, “எனது வாழ்க்கையில் எங்கும் அழையா விருந்தாளியாக சென்றதில்லை. இனிமேலும் செல்லமாட்டேன். புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்ததால் கலந்து கொண்டேன். புத்தக ஆசிரியர் எனக்கு நண்பர். அவருக்காக சென்றேன். எனது மகளுடன் இந்த விழாவில் நடந்ததை அமைதியாக கவனித்தேன்’’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய தூதர் மீது தவறில்லை என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். மல்லையா அழைக்கப்பட்டதற்கு இந்திய தூதர் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார்.