இந்தோனேசிய கடற்கரையில் தத்தளித்த 44 இலங்கை அகதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க,  அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இம்மாதம் 11ஆம் திகதி இலங்கை அகதிகள் 44 பேர் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக தஞ்சம் புக முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது இவர்கள் சென்ற படகு இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். 

இதை அவதானித்த இந்தோனேசிய கடற்படை வீரர்கள் அகதிகளின் படகை இந்தோனேசிய கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், தரையிறங்க கடற்படை அனுமதியளிக்கவில்லை.

பசியாலும், நோய்வாய்ப்பட்டும் அவதியுற்ற அவர்களை, கரையில் இறங்க, இந்தோனேஷிய பொலிஸார் தொடர்ந்து அனுமதியளிக்காமல் இருந்தமையால் சிலர் படகில் இருந்து கீழே குதிக்க முற்பட்டுள்ளனர்.

இதன் போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை மிரட்டி, மீண்டும் படகிற்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அப்பாவி அகதிகளிடம், இந்தோனேஷிய அரசு கொடூரமாக நடந்ததற்கு, உலகின் பல பகுதிகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. சர்வதேச பொது மன்னிப்பு சபை உள்ளிட்ட அமைப்புகள், இந்தோனேஷிய அரசிடம், கண்டனங்களை பதிவு செய்தன.

அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறும் கடற்படை அதிகாரிகளுக்கு இந்தோனேசிய  அரசு உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, கடந்த 18 ஆம் திகதி இலங்கை அகதிகள், இந்தோனேஷிய ஏசெஹ் மாகாண கடற்கரையோரம் தரையிறக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும், அங்குள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுடன், அடையாளங்களையும், இந்தோனேஷிய அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இந்நிலையின் குறித்த அகதிகள் தொடர்பான விபரங்களை பெற்றுகொள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த படகில் 20 ஆண்கள், கர்ப்பிணி உட்பட 15 பெண்கள், ஒன்பது குழந்தைகள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.